ரத்தத்தில் நனைந்த ஸ்ட்ரெச்சரைப் பார்த்ததும் ஸ்ரீகிருஷ்ண பாஜ்பாய் பீதியடைந்தார். "பிரசவம் எளிதானது அல்ல என்று நாங்கள் எச்சரித்தோம்," என்கிறார் 70 வயதான விவசாயி. உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் ஒரு கடுங்குளிரான பிப்ரவரி பிற்பகலில் தனது வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டி கதகதப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். "கிராமத்தில் உள்ள சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர் எனது மருமகளின் கர்ப்பத்தை 'அதிக ஆபத்து' எனக் குறிப்பிட்டுள்ளார்."
இது 2019 செப்டம்பரில் நடந்தாலும், ஸ்ரீகிருஷ்ணர் அதை நேற்று நடந்த சம்பவம் போல் நினைவு கூர்ந்தார். "[வெள்ளம்] நீர் வடிந்துவிட்டது. ஆனால் அது சாலைகளை சேதப்படுத்தி விட்டது. எனவே ஆம்புலன்ஸ் எங்கள் வீட்டு வாசலுக்கு வர முடியவில்லை," என்று அவர் கூறுகிறார். ஸ்ரீகிருஷ்ணாவின் குக்கிராமம், தண்டா குர்த், சாரதா மற்றும் காக்ரா நதிகளுக்கு அருகில் உள்ள லஹர்பூர் தொகுதியில் இருக்கிறது. இங்குள்ள கிராமங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவை. அவசரக் காலங்களில் போக்குவரத்தை ஏற்பாடு செய்வது கடினம்.
தாண்டா குர்த் முதல் சீதாபூரில் உள்ள மாவட்ட மருத்துவமனை வரையிலான 42 கிலோமீட்டர் பயணம், பிரசவ வலியில் இருக்கும் எந்தவொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் நீண்ட பயணமாக இருக்கும். முதல் ஐந்து கிலோமீட்டர்களின் சீரற்ற, வழுக்கும் சாலைகளில் இரு சக்கர வாகனம் மூலம் செல்ல வேண்டுமெனில் அப்பயணம் இன்னுமே நீண்டதாக இருக்கும். "ஆம்புலன்ஸுக்குச் செல்ல நாங்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தது" என்கிறார் ஸ்ரீகிருஷ்ணா. "ஆனால் நாங்கள் மாவட்ட மருத்துவமனையை அடைந்ததும் சிக்கல்கள் ஏற்பட ஆரம்பித்தன."
மம்தாவுக்கு பெண் குழந்தை பிறந்த பிறகும் ரத்தப்போக்கு நிற்கவில்லை. நல்லது நடக்குமென எதிர்பார்த்தேன் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். "இது எதிர்பாராதது அல்ல. பிரச்சனைகள் இருக்கலாம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் மருத்துவர்கள் அவளைக் காப்பாற்றுவார்கள் என்று நாங்கள் நினைத்தோம்.”
ஆனால் அவரை ஸ்ட்ரெச்சரில் ஒரு வார்டுக்கு மாற்றியபோது, ஸ்ரீகிருஷ்ணனால் அதன் மேலிருந்த வெள்ளைத் தாளைப் பார்க்க முடியவில்லை. “அதிக ரத்தம் இருந்தது. என் வயிற்றில் ஒரு முடிச்சு இருப்பதைப் போல் உணர்ந்தேன், ”என்று அவர் கூறுகிறார். “டாக்டர்கள் ரத்தத்தை ஏற்பாடு செய்ய சொன்னார்கள். நாங்கள் அதை மிக விரைவாக சமாளித்தோம், ஆனால் நாங்கள் ரத்த வங்கியிலிருந்து மருத்துவமனைக்குத் திரும்பிய நேரத்தில், மம்தா இறந்துவிட்டார்.”
அவருக்கு 25 வயது.
இறப்பதற்கு முந்தைய நாள், மருத்துவப் பரிசோதனையில் மம்தாவின் எடை 43 கிலோவாக இருந்தது. எடை குறைவாக இருந்ததுடன், புரதச் சத்து குறைபாடும் இருந்தது. அவரது ஹீமோகுளோபின் அளவு 8 கி/டெ.லி. ஆக இருந்தது. கிட்டத்தட்டக் கடுமையான ரத்த சோகை (கர்ப்பிணிப் பெண்களுக்கு 11 கி/டெ.லி. அல்லது அதற்கு மேல் ஹீமோகுளோபின் செறிவு இருக்க வேண்டும்).
ரத்த சோகை என்பது உத்தரபிரதேசத்தில் ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நிலவுவதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019-21 ( NFHS-5 ) குறிப்பிடுகிறது. மாநிலத்தில் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தச் சோகைக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். இரும்புச்சத்து குறைபாடு உலகில் உள்ள ரத்த சோகை பாதிப்பில் கிட்டத்தட்ட பாதிக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் வைட்டமின் பி 9 மற்றும் வைட்டமின் பி 12 பற்றாக்குறையும் தொற்று நோய்கள் மற்றும் மரபணு நிலைமைகளைத் தவிர முக்கியமான காரணிகளாகும்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள தாய்மார்களில் 22.3 சதவீதம் பேர் மட்டுமே கர்ப்ப காலத்தில் 100 நாட்களுக்கேனும் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் எடுக்கின்றனர் என NFHS-5 தரவுகள் காட்டுகின்றன. தேசிய விகிதம் 2019-21-ல் கிட்டத்தட்ட இரு மடங்காக, 44.1 சதவீதமாக உள்ளது. ஆனால் சீதாப்பூர் மாவட்டத்தில் 18 சதவீதம் பேர் மட்டுமே இவற்றை எடுத்துள்ளனர்.
ரத்த சோகை, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது குறைப்பிரசவம் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்குக் குறைந்த எடை போன்ற பிற விளைவுகளுக்கு வழிவகுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது நேரடியாக தாய் இறப்பு மற்றும் பிறப்புக்கு முந்தைய இறப்பு, அதாவது இறந்த குழந்தை பிறப்பு மற்றும் பிறந்த கொஞ்ச காலத்திலேயே குழந்தை இறப்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட குறைபாடு.
இந்தியாவில் தாய் இறப்பு விகிதம், 2017-19-ல் ஒரு லட்சப் பிறப்புகளுக்கு 103 இறப்புகள் ஆகும். அதே காலகட்டத்தில், உத்தரப்பிரதேசத்தில் அது 167 ஆக இருந்தது. மாநிலத்தின் குழந்தை இறப்பு விகிதம் 2019-ல் 1,000 பிறப்புகளுக்கு 41 ஆக இருந்தது. இது தேசிய விகிதமான 30-ஐ விட 36 சதவீதம் அதிகம்.
பாஜ்பாய் குடும்பத்தில் நேர்ந்த சோகம் மம்தாவின் மரணம் மட்டுமல்ல. 25 நாட்களுக்குப் பிறகு அவரது பெண் குழந்தையும் இறந்தது. "இரண்டாவது சோகம் தாக்கியபோது நாங்கள் முந்தைய சோகத்திலிருந்து மீண்டிருக்கவில்லை" என்கிறார் ஸ்ரீகிருஷ்ணா. "நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம்."
மம்தாவும் அவரது குழந்தையும் சில நாட்களின் இடைவெளியில் இறந்தபோது தொற்றுநோய் முடிந்து ஆறு மாதங்களாகி இருந்தது. ஆனால் கோவிட்-19 வெடித்தபோது, நாடு முழுவதும் பொதுச் சுகாதாரச் சேவைகள் பாதிக்கப்பட்டன. தாயின் சுகாதாரத்தில் இது பெரும் சரிவுக்குக் வழிவகுத்தது.
2019-ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, ஏப்ரல் மற்றும் ஜூன் 2020-க்கு இடையில் கர்ப்பிணிப் பெண்களின் பிறப்புக்கு முந்தைய பராமரிப்பில் 27 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேலாண்மை தகவல் அமைப்புத் தரவுகளின் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் பகுப்பாய்வு குறிப்பிடுகிறது. "தாய்வழிச் சுகாதார சேவைகளில் சீர்குலைவு, உடல்நலம் பேணல் குறைதல் மற்றும் சுகாதார வழங்குநர்களிடமிருந்து தொற்று ஏற்படுவதற்கான பயம் ஆகியவை கர்ப்ப அபாயங்களுடன் சேர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மோசமான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தியது" என்று PFI -ன் அறிக்கை கூறுகிறது.
பப்புவும் அவரது குடும்பத்தினரும் தொற்றுநோயின் விளைவுகளை நேரடியாக அனுபவித்தனர்.
அவரது
மனைவி சரிதா தேவி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார், மேலும் கோவிட் தொற்றின் இரண்டாவது
அலை அதன் உச்சத்தில் இருந்தபோது ரத்த சோகையால் அவதிப்பட்டார். ஜூன் 2021-ல் ஒரு மாலை,
அவர் மூச்சுத் திணறலை உணர்ந்தார். குறைந்த
ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கான அறிகுறி அது. வீட்டில் சரிந்து விழுந்தார். "அப்போது
வீட்டில் யாரும் இல்லை," என்கிறார் 32 வயது பப்பு. "நான் வேலை தேடி வெளியே
சென்றிருந்தேன். என் அம்மாவும் வெளியே இருந்தார்.”
அன்று காலை சரிதா நன்றாக இருந்தார் என்று பப்புவின் 70 வயது அம்மா மாலதி கூறுகிறார். "அவள் மதியம் குழந்தைகளுக்கு கிச்சடி கூட செய்தாள்."
ஆனால், மாலையில் பப்பு வீடு திரும்பியபோது, 20 வயதில் இருந்த சரிதா, வெளிறிப்போய், பலவீனமாகத் தெரிந்தார். "அவளால் [எளிதாக] சுவாசிக்க முடியவில்லை." எனவே அவர் உடனடியாக ஒரு ஆட்டோ ரிக்ஷாவை வாடகைக்கு அமர்த்தி, வாரணாசி மாவட்டத்தின் பாரகான் தொகுதியில் உள்ள அவர்களின் கிராமமான தல்லிபூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பதோஹிக்குச் சென்றார். "இங்குள்ள [பாரகானில்] மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. இங்குள்ள முதன்மை மருத்துவ மையத்தில் எந்த வசதியும் இல்லை," என்று அவர் கூறுகிறார். "சரியான சிகிச்சைக் கிடைக்கக்கூடிய ஒரு தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தோம்."
தொற்றுநோயைச் சமாளிக்க முடியாத திறமையற்ற சுகாதார அமைப்புகள் உலகளவில் தாயின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளன. மார்ச் 2021-ல் வெளியிடப்பட்ட 17 நாடுகளின் ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வில் , தாய், கரு மற்றும் பிறந்த குழந்தைகளில் தொற்றுநோயின் விளைவுகளை ‘ தி லான்செட் ’ பத்திரிகை மதிப்பாய்வு செய்தது. மேலும் தொற்றுநோய், "தவிர்க்கக்கூடிய தாய்மார் மற்றும் குழந்தைகளின் இறப்புகளுக்கு வழிவகுத்தது" என்று முடிவுக்கு அந்த அறிக்கை வந்தது.. "குறைந்த வளச் சூழல்களில் தாய் மற்றும் சிசு இறப்பைக் குறைப்பதற்கான பல்லாண்டு முதலீட்டைத் திரும்பப் பெறப்படுவதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை தேவை" என்று அது கூறியது.
ஆனால் அரசு போதுமான அளவுக்கு வேகமாகச் செயல்படவில்லை.
மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே சரிதா ஆட்டோ ரிக்ஷாவில் இறந்தார். "ஊரடங்குக் காரணமாக நாங்கள் வழியில் பல தாமதங்களை எதிர்கொண்டு வந்தோம்," என்கிறார் பப்பு. "வழியில் பல சோதனைச் சாவடிகள் இருந்தன. தாமதம் ஏற்பட்டது."
சரிதா இறந்துவிட்டதை பப்பு உணர்ந்தபோது, காவல்துறை பற்றிய பயமே அதிகமாக இருந்தது. சடலத்துடன் பயணிப்பதைக் கண்டால் போலீசார் என்ன செய்வார்கள் என்று பயந்த அவர், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரிடம் திரும்பி கிராமத்திற்குத் செல்லுமாறு கூறினார். "நாங்கள் வழியில் ஒரு சோதனைச் சாவடியைக் கடந்து சென்றபோது அவளுடைய உடல் நிமிர்ந்து இருப்பதை நான் உறுதி செய்தேன்," என்று அவர் கூறுகிறார். "அதிர்ஷ்டவசமாக, நாங்கள் நிறுத்தப்படவில்லை மற்றும் எந்த கேள்வியும் இல்லை."
பப்புவும் மாலதியும் இறுதிச் சடங்குகளுக்காக உடலை டல்லிபூரிலுள்ள படகுத்துறைக்கு எடுத்துச் சென்றனர். அவர்கள் 2000 ரூபாயை உறவினர்களிடம் இருந்து கடன் வாங்க வேண்டி இருந்தது. "நான் ஒரு செங்கல் சூளையில் வேலை செய்தேன். ஆனால் ஊரடங்குக்குப் பிறகு அது மூடப்பட்டது [மார்ச் 2020-ல்]," என்கிறார் முசாஹர் சமூகத்தைச் சேர்ந்த பப்பு. உத்தரப்பிரதேசத்தில் மிகவும் ஒதுக்கப்பட்ட பட்டியல் சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவர் அவர்.
ஊரடங்குக்கு முன்பு, அவர் சூளைகளில் வேலை செய்யும் போது மாதம் 6,000 ரூபாய் வருமானம் ஈட்டினார். "செங்கல் சூளைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் என் மனைவி இறந்த பிறகு நான் இந்த வகையான வேலையை நிறுத்திவிட்டேன்," என்று அவர் கூறுகிறார். “என்னால் முன்பு போல் வெளியே இருக்க முடியாது. நான் என் குழந்தைகளுடன் இருக்க வேண்டும்.”
ஜோதி மற்றும் ராணி, 3 மற்றும் 2 வயது குழந்தைகள். அவர் ஒரு கம்பளத்தை நெய்து கொண்டிருக்கும்போது அவர் தடுமாறுவதை அவர்கள் பார்த்தனர். "நான் அந்த வேலையைச் சில மாதங்களுக்கு முன்புதான் தொடங்கினேன்," என்று அவர் கூறுகிறார். "அது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். இது குழந்தைகளுடன் வீட்டில் இருக்க அனுமதிக்கிறது. என் அம்மாவுக்கு வயதாகிவிட்டது, அவரால் அவர்களைக் கவனிக்க முடியாது. சரிதா இருக்கும் போது என் அம்மாவோடு சேர்ந்து அவர்களைக் கவனித்துக் கொண்டார். அவர் கர்ப்பமாக இருந்தபோது அவரைப் பார்த்துக் கொள்ள என்ன செய்திருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவரைத் தனியாக நாங்கள் விட்டிருக்கக் கூடாது.”
கோவிட் தொற்று பரவியதிலிருந்து, பாரகான் தொகுதியில் தாய்ப் பராமரிப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று வாரணாசியைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான மக்கள் கண்காணிப்பு குழுவுடன் தொடர்புடைய ஆர்வலர் மங்லா ராஜ்பர் கூறுகிறார். “இந்தத் தொகுதியில் உள்ள பல பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கூடுதல் கவனிப்பும் ஓய்வும் தேவை,” என்று இருபது ஆண்டுகளாக பாரகானில் உள்ள உள்ளூர் சமூகங்களுடன் பணியாற்றிய ராஜ்பர் கூறுகிறார். “ஆனால் வறுமை, ஆண்களை வீட்டை விட்டு வெளியேறி [வேறொரு இடத்தில்] வேலை தேடத் தூண்டுகிறது. அதனால் பெண்கள் வீடுகளிலும் வயல்களிலும் வேலை செய்கிறார்கள்.”
பெண்களுக்கு அவர்களின் உணவில் புரதம், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து தேவைப்பட்டாலும், பொது விநியோக முறைகள் மூலம் கிடைக்கும் ரேஷன்களை மட்டுமே அவர்களால் சமைக்க முடிகிறது. மேலும் காய்கறிகளை வாங்க முடியாது என்று ராஜ்பர் கூறுகிறார். “அவர்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகள் இல்லை. அவர்களுக்கு எதிராக எல்லா விஷயங்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.”
சீதாபூரின் தாண்டா குர்தில், சுகாதாரச் செயற்பாட்டாளர் ஆர்த்தி தேவி கூறுகையில், பல பெண்கள் ரத்த சோகை கொண்டு, எடை குறைவாக உள்ளனர் என்றும் இது கர்ப்பத்தில் சிக்கல்களை உருவாக்குகிறது என்கிறார். "இங்குள்ள மக்கள் பருப்பு மற்றும் அரிசியை மட்டுமே சாப்பிடுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். “அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைவு. காய்கறிகள் கிட்டத்தட்ட [அவர்களின் உணவில்] காணவில்லை. யாரிடமும் போதுமான பணம் இல்லை.”
விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணாவின் 55 வயது மனைவி, ''எங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது, அங்கு நெல், கோதுமை பயிரிடுகிறோம். எங்கள் பயிர்கள் அடிக்கடி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.”
காந்தியின் 33 வயது மகன் விஜய், மம்தாவின் கணவர் ஆவார். குடும்பம் பிழைப்புக்காக விவசாயத்தை நம்பியிருப்பதில் இருந்து தப்பிக்க, சீதாபூரில் வேலைப் பார்த்தார். கோவிட் தொற்றுக்குப் பிறகு அவர் அந்த வேலையையும் இழந்தார். ஆனால் 2021-ன் பிற்பகுதியில் திரும்பப் பெற்றார். “அவரது சம்பளம் ரூ.5,000,” என்கிறார் காந்தி. "ஊரடங்குக்கு முன்பு அது போதுமானதாக இருந்தது. ஆனால் நாங்கள் காய்கறிகளை குறைக்க வேண்டும். ஊரடங்குக்கு முன்பே பருப்பு மற்றும் அரிசியைத் தவிர வேறு எதையும் வாங்குவது கடினமாகிவிட்டது. கோவிட்டுக்குப் பிறகு நாங்கள் முயற்சி செய்யவே இல்லை.”
2020-ம் ஆண்டில் கோவிட்-19 பரவிய உடனேயே வருமானத்தில் ஏற்பட்டச் சரிவு, இந்தியா முழுவதும் உள்ள 84 சதவீத குடும்பங்களை பாதித்துள்ளது என்று ஒரு ஆய்வு மேற்கோளிட்டுள்ளது. இதனால் உணவும் ஊட்டச்சத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வறுமை, போதிய தாய் சுகாதார பராமரிப்பின்மை மற்றும் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவற்றை சரியாக உட்கொள்ளாத நிலை போன்றவை அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களின் எண்ணிக்கையை குறைக்காது என்று ராஜ்பார் மற்றும் ஆர்த்தி தேவி நம்புகின்றனர். குறிப்பாக பொதுச் சுகாதார வசதிகளை அணுகுவது கடினமாக இருக்கும் கிராமப்புறங்களில் குறையும் வாய்ப்பே இல்லை.
மம்தா இறந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய் மறுமணம் செய்து கொண்டார். அவரது இரண்டாவது மனைவி, ப்ரியா, 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் கர்ப்பமாக இருந்தார். அவரும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் அவரது கர்ப்பமும் அதிக ஆபத்தில் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 2021-ல் அவர் பிரசவத்திற்குத் தயாரானபோது, தாண்டா குர்தில் வெள்ளநீர் சற்று பின்வாங்கியது.
மம்தா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நாளோடு இருந்த ஒற்றுமை ஸ்ரீகிருஷ்ணாவுக்கு நினைவில் இருந்தது. ஆனால் இந்த முறை வெள்ளம் அவ்வளவு மோசமாக இல்லை. மேலும் ஆம்புலன்ஸ் அவர்களின் வீட்டு வாசலுக்கு வர முடிந்தது. பிரியாவை 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். அவர் அதிர்ஷ்டவசமாக அதைச் செய்து, ஆரோக்கியமான பெண் ஸ்வாதிகாவைப் பெற்றெடுத்தார். இம்முறை வாய்ப்புகள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தன.
தாகூர் குடும்ப அறக்கட்டளையின் சுயாதீனப் பத்திரிகை மானியம் மூலம் பொதுச் சுகாதாரம் மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய செய்திகளை பார்த் எம்.என். சேகரிக்கிறார். தாகூர் குடும்ப அறக்கட்டளை இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.
தமிழில் : ராஜசங்கீதன்