அமோல் பர்தியின் ‘தனிமைப்படுத்தல் அறை‘ வைக்கோல் குடிசையில் உடைந்த கதவுடன், சேதமடைந்த கூரையில் கிழிந்த கருப்பு பிளாஸ்டிக் ஷீட் போர்த்தப்பட்ட நிலையில் உள்ளது. கற்களால் ஒழுங்கற்ற முறையில் தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு கோவிட்-பாசிடிவ் உறுதி செய்யப்பட்டவுடன் மே1ஆம் தேதி மகாராஷ்டிராவின் ஷிருர் தாலுக்காவில் உள்ள இந்த ஆள்நடமாட்டமில்லாத பகுதியின் காலி குடிசைக்கு வந்துள்ளார்.
மே மாத வெயிலின் தாக்கத்தால் உள்ளே ஓய்வெடுக்க முடியாமல் சில அடி தொலைவில் உள்ள அரச மரத்தடியில் இளைப்பாறுகிறார். “காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை அந்த மரத்தின் அடியில் பிளாஸ்டிக் பாய் விரித்து தூங்குகிறேன்,” என்கிறார் அவர்.
19 வயது அமோல் மே1ஆம் தேதி விழித்தபோது காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஏற்பட்டதால் தனது குடிசையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷிருர் கிராமப்புற மருத்துவமனைக்கு ஷேர் ஜீப்பில் சென்றுள்ளார்.
ரேப்பிட் அன்டிஜென் பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு என்ன செய்வது என மருத்துவமனை மருத்துவர்களிடம் அவர் கேட்டார். “மருத்துவர் என்னை 10 நாட்களுக்கு மருந்து வாங்கிக்கொண்டு 14-15 நாட்களுக்கு குடும்பத்தை விட்டு விலகி தனி அறையில் இருக்கும்படி சொன்னார்,” என்கிறார் அமோல்.
“படுக்கை கிடைக்கவில்லை,” என்கிறார் அவர். ஷிருர் கிராமப்புற மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 20 படுக்கைகள், 10 தனிமைப்படுத்தல் படுக்கைகள் (மருத்துவ கண்காணிப்பாளர் என்னிடம் சொன்னது) உள்ளன. எனவே மருத்துவரின் பரிந்துரைப்படி மருத்துவமனை அருகே உள்ள மருந்து கடையில் மருந்துகளை அமோல் வாங்கியுள்ளார். தனது சிறிய குடிசையில் தனிமைப்படுத்தல் சாத்தியமற்றது என்பதால் அவர் அண்டை வீட்டாரின் காலி குடிசைக்கு சென்றார். “அவர்கள் ஏப்ரல் மாதம் வேலைக்காக வெளியே சென்றுவிட்டனர். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிகிச்சை காலம் முடியும் வரை [கோவிட் சிகிச்சை] அங்கு தங்குவதற்கு அனுமதி வாங்கினேன்,” என்கிறார் அமோல்.










