ஆரம்பத் தொகையாக ரூ.2500 செலுத்தி வாழ்க்கையில் முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்கினார் ராஜேஷ். இரண்டு வருடம் ஆகியும் அவரால் அதை சரியாக பயன்படுத்த தெரியவில்லை. “பள்ளியில் தேர்வானதற்காக என் மூத்த மகன் தினேஷிற்கு வாங்கி கொடுத்த பரிசு இது. போனின் மொத்த விலை ரூ.7500. மீதமுள்ள தொகையை ஆயிரம் ரூபாயாக ஐந்து தவணையில் கட்டினோம்” என கூறுகிறார் 43 வயதாகும் ராஜேஷ்.
16 வயதான தினேஷிடம் தான் ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஆனால் மகராஷ்ட்ரா பால்கர் மாவட்டத்தின் டோங்கரி கிராமத்தில் உள்ள வீட்டில் இதை ராஜேஷூம் பயன்படுத்த முயற்சிக்கிறார்
அந்தப் போனின் விலை, ராஜேஷின் ஒரு மாத சம்பளத்திற்கு ஈடானது. அவர் தினசரி ரூ. 250 முதல் 300 வரை சம்பாதிக்கிறார். “அதை பயன்படுத்த எவ்வுளவோ முயற்சித்தேன். ஆனால் சில நாட்கள் கழித்து கைவிட்டு விட்டேன். எனக்கு என்னுடைய பழைய போனே போதும். அதில் நல்ல கீபேட் உள்ளது.”
இத்தகைய கடினமான நிலப்பரப்பிலும் தலசாரி தாலுகா – ஆதிவாசி மக்கள்தொகையில் பெரும்பாலும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களே - போன்ற கடினமான சூழலிலும் இவரது மகனின் தலைமுறையினர் நன்றாகவே ஸ்மார்ட்போனுக்கு பழகிவிட்டனர். ஆனால் விலை மற்றும் நெட்வொர்க் தொடர்பில் மற்றவர்களோடு குறைந்து காணப்படுகின்றனர்.
குஜராத் எல்லையோரமாக இருக்கும் இந்த ஆதிவாசிப் பகுதி மும்பையிலிருந்து வெறும் 130கிமீ தொலைவில் இருந்தாலும், இணையத் தொடர்பு மோசமாகவே உள்ளது. “மின்சார விநியோகமும் சீரற்றே உள்ளது, குறிப்பாக பருவமழை காலத்தில்” என்கிறார் வார்லி பழங்குடி இணத்தைச் சேர்ந்த ராஜேஷ்.
டோங்கரியில் ஏதாவது மரத்துக்கு அடியில் சிறுவர்கள் குழுமியிருப்பதை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அந்த இடத்தில்தான் நன்றாக நெட்வொர்க கிடைக்கிறது என தைரியமாக கூறலாம். அந்தக் குழுவில் ஒன்று அல்லது இருவரிடம் ஸ்மார்ட்போன் இருக்கும். மற்றவர்கள் சுற்றி நின்று ஆர்வத்தோடு வேடிக்கை பார்ப்பார்கள். இங்கு ஸ்மார்ட்போனை சொந்தமாக வைத்திருக்கும் பெண்களை கண்டுபிடிப்பது அரிது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆன்லைன் கல்வி வகுப்புகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனை மகராஷ்ட்ராவின் கிராமப்புற மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? தொடக்கப் பள்ளியில் மட்டும் 15 மில்லியன் மாணவர்கள் இருக்கிறார்கள், அதில் 77 சதவிகிதத்தினர் கிராமப்புற மாவட்டங்களில் உள்ளதாக மாநில பொருளாதார கணக்கெடுப்பு கூறுகிறது. பல பெற்றோர்கள் ராஜேஷ் அந்தாரே போல் பொருளாதார வசதியற்றவர்கள்.
******
“இது டிஜிட்டல் பிரிவினை அன்றி வேறில்லை. வாட்ஸப் ஒருபோதும் கல்விக்கான ஊடகமாக இருக்க முடியாது” என்கிறார் பள்ளி ஆசிரியரும் அகோல் நகரின் செயல்பாட்டாளருமான பவு சாஸ்கர்.
வருகிற கல்வி ஆண்டை தொடங்குவதில் உள்ள சவால் குறித்து இந்த வருடம் ஜூன் 15-ம் தேதி, சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது மகராஷ்ட்ரா அரசாங்கம். எல்லா இடத்திலும் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சிக்கலை கடக்க சில சாத்தியமான வழிகள் இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“வெவ்வேறு வழிகளில் கல்வியை புகுத்துவது மிகவும் சிரமமாக இருக்கும்.வழக்கமான முறை போல் பாடம் எடுப்பதை நாம் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் அவர்களாகவே படிக்க வேண்டும். பின்னர் அவர்களின் சந்தேகங்களை ஆசிரியர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். தொலைக்காட்சி, வானொலி மற்றும் இதர இணைய வசதிகள் நம்மிடம் உள்ளது. அதையும் நாம் பயன்படுத்த வேண்டும்.”
நடைமுறையில், ஆன்லைன் வழிதான் வலியுறுத்தப்படுகிறது.
ஜூன் 15-ம் தேதி சுற்றறிக்கை வெளியானதிலிருந்து, யாருடைய வீட்டிலெல்லாம் ஸ்மார்ட்போன் உள்ளது என கணக்கெடுத்தோம் என்கிறார் டோங்கரி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்துப் பள்ளியின் ஆசிரியர் ரவி ராக். ஆசிரியர்களுக்கென்று வாட்ஸப் குழு உள்ளது. அதில் குழந்தைகளுக்கான பாடத்திட்டமும் தேவையான வழிமுறைகளும் பிடிஃப் கோப்பாகவொ அல்லது வீடியோவாகவோ நாங்கள் பெறுவோம். இதை வீட்டில் ஸ்மார்ட்போன் இருப்பவர்களுக்கு மட்டும் அனுப்புவோம். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனை கொடுக்குமாறு பெற்றோர்களை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்கள் சரி என்று கூறினாலும்,
வேறு எப்படி இது முடியும் என யோசித்துப் பார்க்க கூட கடினமாக இருக்கிறது.
2017-18 தேசிய மாதிரி கணக்கெடுப்பின் படி, மகராஷ்ட்ராவில் வெறும் 18.5% கிராமப்புற வீடுகளில் மட்டுமே இணையதள வசதி உள்ளது. அதுவும், கிராமப்புற மகராஷ்ட்ராவில் ஆறில் ஒருவரே “இணையதளத்தை பயன்படுத்தும் திறனோடு” உள்ளார். அதுவே பெண்களிடம், 11-க்கு ஒன்று என்ற அளவில் உள்ளது.
கிராமப்புற மகராஷ்ட்ராவில் இந்த கணக்கெடுப்பு எடுப்பதற்கு 30 நாட்களுக்கு முன்பு ஏழு பேரில் ஒருவர் மட்டுமே இணையதளம் பயன்படுத்தியுள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. பெண்களைப் பொருத்தவரை இது 12-க்கு ஒன்று என்ற அளவில் உள்ளது. இதில் மகராஷ்ட்ரா மக்கள்தொகையில் 9.4 சதவிகிதம் மற்றும் 12 சதவிகிதம் உள்ள ஆதிவாசிகளும் தலித்களும் தான் மிகவும் பின்தங்கியுள்ளார்கள்.
இந்தப் பழங்குடி பகுதிகளில், பள்ளிகளின் நிலைமையை உயர் கல்வி எடுத்துக் காட்டுவதாக பம்பாய் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அசிரியர்கள் சங்க சர்வே சுட்டிக் காட்டுகிறது. டாக்டர் தபதி முகோபத்யாய் மற்றும் டாக்டர் மது பரஞ்சபே எழுதி ஜூன் 7 அன்று வெளியான அறிக்கையில், பால்கர் மாவட்டத்தின் ஜவஹர் தாலுகாவில் “அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. கல்வி வளாகம் மூடப்பட்டுள்ளது. வகுப்போ அல்லது பாடத்திட்டம் சாராத நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. இணையத் தொடர்பு இருந்தாலும் மோசமான பேன்ட்வித் உள்ளது. மின் விநியோகம் மிக மோசமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்பு/கல்விக்கு வாய்ப்பே இல்லை” என அவர்கள் அறிக்கையில் வலியுறித்தி கூறியுள்ளனர்..
விலையுயர்ந்த சாதனங்களை வாங்க முடியாத குழந்தைகள் தாழ்வு மனப்பான்மை கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கிறார் பவு சாஸ்கர். அவர் கூறுகையில், “கிராமப்பகுதியில் தொலைக்காட்சி மூலம் எல்லாரையும் சென்றடையலாம். மாநில அரசாங்கம் உடனடியாக தொலைக்காட்சி அலைவரிசையை தொடங்கி அதில் பாடம் நடத்த வேண்டும். உடனடியாக பணிப்புத்தகத்தை அரசு தயாரிக்க வேண்டும். இதேப்போன்ற ஒன்றை கேரள அரசு செய்துள்ளது. சுற்றறிக்கையில் (மகராஷ்ட்ரா) தொலைக்காட்சி மற்றும் வானொலியை பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற திட்டம் எதுவும் இல்லை.”
*****
ராஜேஷ் அந்தாரேயின் இளைய மகள் அனிதா, 11, கிராமத்தில் உள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் படித்து வருகிறாள். அவளுக்குப் படிக்க தேவைப்படும்போது மூத்தவன் தினேஷ் போனை கொடுப்பானா? “சிறிது தயக்கத்துடனேயே கொடுப்பான். ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே, என்னை அதிகமாக பயன்படுத்த விடமாட்டான்” என அனிதா கூறுகிறாள்.
கடந்த இரண்டு வருடங்களாக, ஓரளவிற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த பழகிக்கொண்டாள் அனிதா. ஆனால் இதன் மூலம் கற்க முடியுமா என்பதில் அவளுக்கு சந்தேகம் உள்ளது. “ஆன்லைன் வகுப்பை நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. எனக்கு சந்தேகம் வந்தால் என்ன செய்வது? நான் கையை தூக்கினால், ஆசிரியரால் என்னை கண்டுகொள்ள முடியுமா?”
விக்லூ விலாத், 13, அப்படி எந்த கவலையும் இல்லை. அதே கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி, இதுவரை ஸ்மார்ட்போனை தொட்டது கூட இல்லை. ஆன்லைன் வகுப்பு எப்படியிருக்கும் என ஆச்சர்யப்படுகிறாள். ராஜேஷ் போல் இவளுடைய தந்தை சங்கரும் ஏழை கூலி தொழிலாளி. “எங்களுக்கு ஒரு ஏக்கருக்கும் குறைவாகவே விவசாய நிலம் உள்ளது. இங்குள்ள எல்லாரையும் போல நானும் கூலி வேலை செய்துதான் வாழ்க்கையை நடத்துகிறேன்” என அவர் கூறுகிறார்.
அப்படியென்றால் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? டோங்கரியில் உள்ள பள்ளி ஆசிரியரான ரவி ராக் கூறுகையில், “எல்லா மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் பாடப்புத்தகம் வழங்கியுள்ளார்கள். சில பாடங்களை வாசிக்குமாறு அவர்களிடம் நாங்கள் கூறியுள்ளோம். அவர்கள் படிப்பதை கொஞ்சம் கவனிக்குமாறு பெற்றோர்களிடமும் கூறியுள்ளோம். ஆனல் இப்படி கேட்பது கூட கொஞ்சம் அதிகம்தான்.”
வழக்கமாக இந்த நேரத்தில் பள்ளிகள் திறந்திருக்கும். பெற்றோர்களும் எந்த கவலையும் இன்றி வேலைக்குச் செல்வார்கள். குழந்தைகளை ஆசிரியர்கள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். பள்ளியில் மதியம் சத்துணவு கொடுப்பார்கள். அதனால் ஒருவேளை உணவாவது கிடைத்து விடும். ஆகையால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை” என்கிறார் அனிதாவின் தாயாரான சந்தன்.
ஆனால் இப்போது ஊரடங்கு காரணமாக கவலையோடு இருக்கிறார்கள். இங்குள்ள தொழிலாளிகள் தினசரி வருமானத்திற்கே மிகவும் சிரமப்படுகிறவர்கள். நிலைமை மோசமாவதை அவர்கள் அறிந்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார நடவடிக்கை ஆரம்பமானதை அடுத்து பெற்றோர்கள் வெளியே செல்ல தொடங்கியுள்ளனர். “கடந்த இரண்டரை மாதங்கள் வீணானதை மீட்க வேண்டும். மேலும், விரைவில் எங்கள் நிலத்தில் நெல் பயிரிடவுள்ளோம். இது எங்கள் தேவைக்கு மட்டுமே, விற்பனைக்கு அல்ல. எங்கள் சொந்த நிலத்திலும் வெளியிலும் வேலை இருப்பதால், வீட்டில் அமர்ந்து குழந்தைகளை கண்காணிப்பது எங்களால் முடியாது.”
குழந்தைகள் பாடப்புத்தகங்களை வாசிக்கிறார்களா அல்லது வாட்ஸப்பில் வந்த பிடிஃப் கோப்பை படிக்கிறார்களா என்பதை உறுதிசெய்யும் பொறுப்பு தற்போது பெற்றோர்களுக்கு இருப்பதால், கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் அவர்கள் முழிக்கிறார்கள். “நாங்கள் அதிகமாக படித்ததில்லை. அவர்கள் ஒழுங்காக படிக்கிறார்களா என்பதும் எங்களுக்கு தெரியாது. அவர்கள் பள்ளிக்குச் சென்றால் நன்றாக இருக்கும். ஆமாம், கொரோனா வைரஸ் குறித்த பயம் இருக்கிறது உண்மைதான். ஆனால் அரசாங்கம் பள்ளியை மறுபடியும் திறந்தால், அனிதாவை நாங்கள் அனுப்புவோம்.”
இங்குள்ள பெற்றோர்களிடம் இணைய கல்வியறிவு குறைவாகவே உள்ளது. அதுவும் ஒரு சில குடும்பங்களில் மட்டுமே ஸ்மார்ட்போன் வாங்கும் வசதியை கொண்டுள்ளனர். “அதுமட்டுமல்லாமல், டோங்கரில் இருப்பது எட்டாம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப் பள்ளி மட்டுமே. ஆனால் ஸ்மர்ட்போன் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் 16 வயதிற்கு மேலானவர்கள்” என்கிறார் ராக்.
*****
கொரோனா நோய்தொற்று இல்லாத கிராமங்களில் படிப்படியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என ஜூன் 15 அரசாங்க சுற்றறிக்கை கூறுகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆகஸ்ட் 2020 பள்ளிக்கு வர வேண்டும். 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அதற்கடுத்த மாதம் வர வேண்டும். ஒன்றாம்வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு, அந்தந்தப் பள்ளி மேலாண்மை குழுவே முடிவு செய்து கொள்ளலாம் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“மறுபடியும் திறப்பதற்கு முன், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியும் தூய்மைப்படுத்தல், இருக்கைகளை ஓழுங்குபடுத்துதல் மர்றும் சுகாதார நடவடிக்கைகளை செய்ய வேண்டும். ஒருவேளை கொரோனா வைரஸ் காரணமாக திறந்தப் பள்ளியை மறுபடியும் மூடும் நிலைமை ஏற்பட்டால், ஆன்லைன் வழியாக கல்வியை தொடர தயாராக இருக்க வேண்டும” என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எந்த நோய் தொற்றாளர்களும் இல்லாமல் தாலுகா பச்சை மணடலத்தில் இருந்தாலும், மறுபடியும் பள்ளிகளை திறப்பதற்கு தலசாரில் உள்ள ஆசிரியர்கள் சங்கடப்படுகின்றனர்.
இந்த யோசனை ஆபத்தானது என்கிறார் தலசாரி நகரின் பஞ்சாயத்துப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் தத்தாராய் கோம். அவர் கூறுகையில், “இங்கு எந்த பாசிட்டிவ் கேஸும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அருகிலுள்ள தஹானு தாலுகாவில் உள்ளது. பல ஆசிரியர்கள் தலசாரிக்கு அங்கிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் வருகிறார்கள். கூலி வேலை பார்க்கும் பல பெற்றோர்கள் அடிக்கடி எங்கள் தாலுகாவிற்கு வெளியே பயணம் செல்கிறார்கள்.”
முதலில் குழந்தைகளையும் ஆசிரியர்களையும் பாதுகாக்க தேவையான முகக்கவசமும் கிருமிநாசினியும் பள்ளிகளுக்கு வேண்டும் என சுட்டிக் காட்டுகிறார் கோம். மேலும், “எப்படி மதிய உணவை பாதுகாப்பாக வழங்கப் போகிறோம் என்பதை அவர்கள் கண்டுபிடித்தாக வேண்டும். வழக்கமாக, பெரிய பாத்திரமொன்றில் தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.”
7-13 வயதுள்ள குழந்தைகளிடம் தங்களால் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க முடியுமா என ஆசிரியர்கள் சந்தேகத்தோடு இருக்கிறார்கள். “அவர்கள் எப்போதும் சேட்டை செய்து கொண்டும், விளையாட்டுத்தனமாகவும் இருப்பார்கள். ஒருவேளை குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், ஆசிரியரைத்தான் குறை கூறுவார்கள். அந்த குற்ற உணர்ச்சி எங்களுக்கு வேண்டாம்.”
டோங்கரி கிராமத்தில் உள்ள அங்கேஷ் யால்வி, 21, அரசாங்க வேலைக்காக போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதோடு கல்விக்கான செயலி மற்றும் சேவைக்காக கட்டணம் செலுத்துகிறார். “நெட்வொர்க நன்றாக இருந்தால் மட்டுமே என்னால் போனை பயன்படுத்த முடியும்.”
தன்னுடைய போனை தன் 12 வயது தங்கை பிரியங்காவிற்கு கொடுப்பதில் அங்கேஷிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அப்போதுதான் அவளும் படிக்க முடியும். “ஆனால் இருவரும் போனை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், அதிக விலைக்கு நெட் பேக் போட வேண்டும். தினசரி 2ஜிபி திட்டத்திற்காக தற்போது மாதம் 200 ரூபாய் செலவு செய்கிறோம்” என்கிறார்.
டோங்கரி கிராமத்தில் இருந்து 13கிமீ தொலைவில் உள்ள தலசாரி நகரைச் சேர்ந்த ஒன்பது வயது நிகில் தோப்ரே ராஜேஷ் அந்தாரே வாங்கியதை விட நாங்கு மடங்கு விலை அதிகமானது இது. இவன் தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இவனது தந்தை டவுனில் உள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். மேலும் நிகிலிற்கு நன்றாக நெட்வொர்க் கவரேஜூம் கிடைக்கிறது.
“ஆனால் அவன் சந்தோஷமாக இருப்பது போல் தெரியவில்லை” என்கிறார் அவனது தந்தை.
“எப்போது பள்ளி திறக்கும் என காத்திருக்கிறேன். என் நண்பர்களை பிரிந்து இருப்பது கவலையாக இருக்கிறது. தனியாக படிப்பதில் எந்த சந்தோஷமும் இல்லை” என நிகில் கூறுகிறான்.
தமிழில்: வி. கோபி மாவடிராஜா