“எங்கள் கிராமத்தில் வழக்கமாக திருவிழாவைப் போல இருக்கும்,” என்கிறார் நந்தா கோதர்னி. ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில், அவரது வயலுக்கு அருகே உள்ள பகுதியில் கேட்ஸ் புட்ருக் விவசாயிகள் காளைகளின் உதவியோடு நெல்மணிகளை புதிதாக அறுவடை செய்வார்கள். நவம்பர் மத்தியில் இது முடியும்.
இந்தாண்டு கடந்த மாதம் மத்தியில் திடலும், வயல்களும் சதுப்பு நிலமாக மாறிவிட்டது. நந்தாவும், அவரது கணவர் கைலாஷூம் தானியங்களை அறுவடை செய்வதற்குப் பதிலாக, தங்களது இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிர்களை அக்டோபர் 16,17 தேதிகளில் சுத்தம் செய்தனர்.
இரண்டு நாட்கள் கழித்தும், முழங்கால் வரை வயலில் தண்ணீர் நின்றதால் 42 வயதாகும் நந்தா சூரிய ஒளியில் நெற்கதிர்களை உலர்த்தினார். “இப்படி உலர்த்துவது பயனளிக்குமா என்பது தெரியாது...” எனும் அவர் கண்ணீரை புடவையால் துடைத்துக் கொள்கிறார். (கதிர்களை அறுத்தபோது ஆறு குவிண்டால் வரையிலான தரம் குறைந்த நெல் பதர் கிடைத்தது - கடந்தாண்டு சுமார் 15 குவிண்டால் வரை அறுவடை செய்தார்). வாடா தாலுக்காவில் உள்ள தனியார் அலுவலகத்தில் உதவியாளராக வேலைசெய்யும் 47 வயதாகும் கைலாஷ் மாதம் ரூ. 8,000 சம்பாதிக்கிறார். அவர்களுக்கு 14 வயது மகளும், 10 வயது மகனும் உள்ளனர், இருவரும் உள்ளூர் சில்லா பரிஷத் பள்ளியில் படிக்கின்றனர்.
அக்டோபர் மாதம் பெய்த எதிர்பாராத மழை 1,134 மக்கள்தொகை கொண்ட கேட்ஸ் புட்ருக் கிராமத்தைச் சேர்ந்த நந்தா போன்ற பிற விவசாயிகளையும் பாதித்துவிட்டது
காமினி கோதர்னியின் வயலும் நீரில் மூழ்கிவிட்டன. “நெற்பயிர்கள் முற்றிலும் மூழ்கிவிட்டன. சேறு நிறைந்துள்ளது,” என்கிறார் அவர். அவரும், அவரது கணவர் மனோஜூம் அக்டோபர் மாதம் தங்களின் நான்கு ஏக்கர் நிலத்தில் சேதமடைந்த பயிர்களை சுத்தம் செய்தனர். கதிர் அரிவாள் கொண்டு சாய்ந்த நெற்கதிர்களை அறுத்தனர். இதற்கு நான்கு விவசாயிகள் அவர்களுக்கு உதவினர். கிராமத்தில் ஒருவருக்கு ஒருவர் இவ்வாறு உதவி வருகின்றனர்.
“இந்த மிகப்பெரிய வேர்களை பாருங்களேன்? பயிர்கள் நீரில் கிடப்பதால் கருக்காய் பதர் முளைத்துள்ளது. இந்த கருக்காயில் கிடைக்கும் அரிசியால் பயனில்லை,” என்று அக்டோபர் 19ஆம் தேதி நான் சென்றபோது 45 வயதாகும் மனோஜ் தெரிவித்தார். “முற்றிய பயிர்களுக்கு சிறிய மழைக் கூட தீங்கானது. இப்போது கிட்டதட்ட 80 சதவீத நெற்பயிர்கள் சேதமடைந்துவிட்டன.”
9 மிமீ கூடுதல் மழை பெய்துள்ளது. நீரும் தேங்கியதால், முற்றிய நெற்பயிர்களை அது அழிக்கும். மகாராஷ்டிராவின் வாடா தாலுக்காவில் உள்ள கேட்ஸ் புட்ருக்கில் அக்டோபர் 1 முதல் 21 வரையிலான காலத்தில் 50.7 மிமீ மழை பெய்துள்ளது - இக்காலத்தில் இயல்பான மழைப் பொழிவு என்பது 41.8 மிமீ. இந்தியாவின் கொங்கன் மற்றும் பிற பகுதிகளில் பலத்த மழையுடன் காற்று இருக்கும் என அக்டோபர் 13ஆம் தேதி இந்திய வானியல் ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கதிர்கள் சாய்ந்துள்ளன. அக்டோபர் 13ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு காமினி, மனோஜின் வயல் மூழ்கியிருந்தது. ஆண்டுதோறும் இக்குடும்பம் அக்டோபர் மாத இறுதியில் வாதகோலம் வகை அரிசியை 15 முதல் 20 குவிண்டால் வரை அறுவடை செய்யும். மகாமண்டலத்திற்கு (இந்திய உணவுக் கழகம், மகாராஷ்டிரா பிராந்தியம்) 7-8 குவிண்டால் அரிசியை ரூ. 2,000- 2,200 வரை விற்பார்கள். மிச்சத்தை சொந்த பயன்பாட்டிற்கு அவர்கள் வைத்துக் கொள்கின்றனர். ஆனால் இந்தாண்டு நெற்பயிர்கள் மூழ்கியது குறித்து காமினி பேசுகையில், “இந்த கருக்காயின் அரிசியை உண்ண முடியாது, நம் பசுக்கள், எருமைகளுக்கு தீவனமாகவும் அளிக்க முடியாது.”
பாசனமின்றி கோதர்னி குடும்பத்தினரால் குறுவை பயிர்களை பயிரிட முடியாது. எனவே மாவு, சோப்பு, பிஸ்கட்டுகள், நோட்டுபுத்தகங்கள், பிற பொருட்களை விற்கும் கடையை மனோஜ் கிராமத்தில் நடத்தி – அதன் மூலம் மாதம் ரூ.10,000 சம்பாதிக்கிறார். அவரும், காமினியும் பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வேளாண் குடியைச் சேர்ந்தவர்கள். அவர்களின் 13 வயது மகள் வைஷ்ணவி உள்ளூர் சில்லா பரிஷத் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தாண்டு ஜூன் மாதம் ரூ.15,000 செலவிட்டு நெல் விதைத்தனர்- விதைகள், உரங்கள், வேலையாட்களுக்கான கூலி, வாடகைக்கு வாங்கிய டிராக்டர் என செலவிட்டுள்ளனர். ஜூன் மாதம் 203 மிமீ என மெதுவாக தொடங்கிய மழை (பல்காரில் சராசரி மழைப்பொழிவு 411.9 மிமீ), செப்டம்பர் இறுதியில் அதிகரித்தது. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என மனோஜூம், காமினியும் நம்பினர்.
கடந்தாண்டும் அக்டோபரில் பெய்த பருவம் தவறிய மழையினால் விளைச்சலின் தரம் பாதிக்கப்பட்டது. சுமார் 12 குவிண்டால் வரை விளைச்சல் இருந்தது. பாதியை குடும்ப பயன்பாட்டிற்கு வைத்துக் கொண்டு மிச்சத்தை விற்றனர். “கடந்தாண்டு இவ்வளவு மோசம் கிடையாது. அரிசி தானியங்கள் தரம் குறைவாக இருந்தாலும், உண்ணும் வகையில் இருந்தன,” என்கிறார் மனோஜ். “2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு மழை கிடையாது. 2019ஆம் ஆண்டும், இந்தாண்டும் அக்டோபர் மாதம் மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு என்ன ஆயிற்று என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
அக்டோபரில் பெய்த எதிர்பாராத மழையால் பல்கார் மாவட்டம் முழுவதும் பல விவசாயிகள் பேரிழப்பைச் சந்தித்துள்ளனர். கொங்கன் பிராந்தியத்தில் (பல்காரை உள்ளடக்கியது) வறட்சி பாதித்த மரத்வாடா, மத்திய மகாராஷ்டிரா, கரும்பு பகுதியான மேற்கு மகாராஷ்டிரா போன்றவற்றிலும் அக்டோபர் 1 முதல் 21 வரை (ஐஎம்டி குறிப்பின்படி) இந்தாண்டு அளவற்ற மழை பெய்துள்ளது. இந்த பேரழிவினால் இப்பகுதிகளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்கின்றன பல்வேறு ஊடக செய்திகள்.
இக்காலத்தில் கொங்கனில் 171.7 மிமீ மழை பெய்துள்ளது, இயல்பான மழைப்பொழிவு 73.6 மிமீ ஆகும். சம்பா பருவ நெற்பயிர்கள், சோயாபீன், பருத்தி, மக்காச்சோளம், சோளம் போன்றவை மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் மழையால் சேதமடைந்துள்ளன.
கேட்ஸ் புட்ருக்கில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜவஹர் தாலுக்கா காட்கிபாடா கிராமத்தைச் சேர்ந்த 44 வயது தாமு போயேவும் நம்பிக்கை இழந்துள்ளார். மூன்று ஏக்கர் மேட்டு நிலத்தில் பயிரிடப்பட்ட உளுந்து பயிர்களை பூச்சிகள் உண்பதை அவர் என்னிடம் காட்டினார். செப்டம்பரில் செடிகள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் அக்டோபரில் பெய்த திடீர் மழையால் செடிகளை பூச்சி தாக்கியுள்ளது.
“என் வயலே இப்போது பூச்சிகளால் நிறைந்து, இலைகள், காய்கள் என அனைத்தையும் உண்கின்றன. அக்டோபர் மாதம் மிக முக்கியமானது, மாத மத்தியில்தான் நாங்கள் காய்களை பறிப்போம். ஆனால் திடீர் மழை பூச்சிகளை உருவாக்கி வேர்களை அழித்து காய்களும் முழுமையாக முதிர்ச்சி பெறாமல் செய்துவிட்டது,” என்கிறார் தாமு. “விதைகள், உரங்களுக்கு என ரூ.10,000 வரை நான் செலவு செய்துவிட்டேன். இது முழுமையான இழப்பு.”
விவசாயத்தைத் தவிர தாமுவும், அவரது 40 வயதாகும் மனைவி கீதாவும் அருகில் உள்ள கிராமப் பெண்களுக்கு புடவைக்கான ரவிக்கைகளை தைத்து தருகின்றனர். அதில் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்துகின்றனர். “மாதந்தோறும் ரூ.1000, 1500 வரை கிடைக்கும்,” என்கிறார் அவர்.
கட்டுமான பணியிடங்களில் வேலை செய்வதற்காக நவம்பர் இறுதி முதல் மே மாதம் வரை ஆண்டுதோறும் அவர்கள் மும்பை அல்லது தானே செல்கின்றனர். “ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை கட்டுமானப் பணியில் கிடைக்கும், ஆனால் அவற்றில் எதையும் எங்களால் சேமிக்க முடியாது” என்கிறார் தாமு.
அவர்களின் மூத்த மகனான 25 வயதாகும் ஜெகதீஷ், பல்காரின் விக்ரம்காட் தாலுக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்பராக உள்ளார். அவரது மாத வருமானம் ரூ.15,000 என்றார் தாமு. “பெரும் உதவியாக உள்ளது, இப்போது எங்களால் அவனது வருமானத்தில் சேமிக்க முடிகிறது.” தாமு மற்றும் கீதாவிற்கு கிராமத்தில் உள்ள சில்லா பரிஷத் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மகளும், 5ஆம் வகுப்பு படிக்கும் இளைய மகனும் உள்ளனர்.
மகாராஷ்டிராவின் ஆதரவற்ற பழங்குடியின குழுவினர் என பட்டியலிடப்பட்ட கட்கரி சமூகத்தினர் அவர்களின் கிராமத்தில் 25 குடும்பங்கள் உள்ளன. அவர்கள் தேஹரி கிராமத்திற்கு வெளியே நெல், கேழ்வரகு, உளுந்து போன்றவற்றை வனப்பகுதியில் ஒரு ஏக்கர் முதல் மூன்று ஏக்கர் வரை பயிரிடுகின்றனர். “1995ஆம் ஆண்டு முதல் தொடர் கோரிக்கை மூலம் எங்களுக்கு 2018ஆம் ஆண்டு நில உரிமை கிடைத்தது,” என்கிறார் தாமு.
அவர்களின் வயல்களுக்கு அருகே உள்ள மூன்று கீழ் நிலங்களில் பயிரிட்ட 45 வயதாகும் சந்திரகாந்த் போயே, அவரது 40 வயதாகும் மனைவி ஷாலு ஆகியோர் அக்டோபர் மழையால் இழப்பைச் சந்தித்துள்ளனர். அக்டோபர் 13-14 தேதிகளில் அவர்களின் நெற்பயிர்களும் நீரில் மூழ்கிவிட்டன. “அந்நாட்களில் 4-5 மணி நேரங்கள் பலத்த காற்றுடன் மழை பெய்தது,” என்கிறார் சந்திரகாந்த்.
உறவினரிடம் வாங்கிய ரூ.15,000 கடனை இம்முறை திருப்பி செலுத்திவிடலாம் என குடும்பத்தினர் நினைத்தனர். “விதைகள் அல்லது உரங்கள் வாங்க எங்களிடம் பணமில்லை. எனவே கடன் வாங்கினேன். அறுவடை செய்த நெல்லை ஒருபோதும் விற்றதில்லை, ஆனால் இம்முறை கடனை அடைப்பதற்காக 7-8 குவிண்டால் வரை [மகாமண்டலத்திற்கு] விற்க திட்டமிட்டிருந்தேன்,” என்கிறார் 45 வயதாகும் சந்திரகாந்த்.
அவரும், ஷாலுவும் ஆண்டுதோறும் 10-12 குவிண்டால் வரை அறுவடை செய்வார்கள். நவம்பர் முதல் மே மாதங்களில் சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஹானுவில் செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர். அதில் கிடைக்கும் பணத்தை விவசாயத்தில் முதலீடு செய்கின்றனர். 2019ஆம் ஆண்டு சூளைகளில் வேலைசெய்து ரூ.50,000 பணத்துடன் திரும்பினர். “பொதுமுடக்கம் மார்ச் மாதம் தொடங்கியது. எனவே சூளை உரிமையாளர்கள் எங்களுக்குப் பணம் கொடுக்கவில்லை, நடந்தே வீட்டிற்கு வந்தோம்,” என்கிறார் இரண்டு அறை கொண்ட மண் வீட்டிற்கு வெளியே தனது நான்கு வயது மகள் ரூபாலி, மூன்று வயது மகன் ரூபேஷூடன் அமர்ந்திருக்கும் சந்திரகாந்த்.
கடன் சுமை இப்போது அவரை கவலையடையச் செய்துள்ளது. “செங்கல் சூளையில் இம்முறை அதிக நேரம் உழைப்போம்,” என்கிறார் அவர் தீர்க்கமாக. “இம்முறை ஐந்து குவிண்டால் கருக்காய் பதர் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்தாண்டை விட இம்முறை செங்கல் சூளையில் அதிகம் சம்பாதிப்போம்,” என்று நவம்பர் 8ஆம் தேதி என்னிடம் தொலைப்பேசி வழியாக அவர் தெரிவித்தார்.
சந்திரகாந்தும், ஷாலுவும் நவம்பர் 23ஆம் தேதி தஹானுவில் உள்ள செங்கல் சூளைக்கு ரூபாலி, ரூபேஷூடன் நல்ல வருவாய் ஈட்டும் நம்பிக்கையுடன் செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பருவம் தவறிய மழை இழப்பை ஏற்படுத்திவிட்டது.
*****
“இது பேரிழப்பு. முதல்கட்ட கணக்கெடுப்பின்படி 10 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளன,” என்று டிவி 9 மராத்தி தொலைக்காட்சியிடம் அக்டோபர் 21ஆம் தேதி தெரிவித்தார் மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வதித்திவார்.
அக்டோபர் 22ஆம் தேதி பல்கார் மாவட்ட ஆட்சியர் அலுவலர்கள் என்னிடம் பேசுகையில், “அக்டோபர் 16 முதல் ஆய்வு நடைபெற்று வருகிறது“ எனவே உடனடியாக பயிர்களின் இழப்பு அல்லது விவசாயிகள் பாதிப்பு குறித்து இப்போதே தெரிவிக்க முடியாது என்றார்.
அக்டோபர் 23ஆம் தேதி மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மாநிலத்தில் பலத்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக ரூ.10,000 கோடியை ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார்.
அக்டோபர் 27ஆம் தேதி வாடா தாலுக்கா தாலத்தி அலுவலக அதிகாரிகள் கேட்ஸ் புட்ருக்கில் ஆய்வு நடத்தினர் - பயிர்களின் இழப்புகள் குறித்து கிராம விவசாயிகள் தாலத்தியின் அலுவலகத்திற்குச் சென்று வந்த பிறகு, இந்த ஆய்வு நடந்துள்ளது. “சேற்றில் மூழ்கிய அனைத்து வயல்களையும் அவர்கள் ஆராய்ந்தனர், முளைகட்டிய கருக்காய் பயிர்களை அவர்கள் புகைப்படம் எடுத்தனர். இழப்பீடு பற்றி தகவல் தெரிவிப்பதாக கூறினர்,” என்கிறார் மனோஜ்.
பல்கார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முழுமையாக ஆராய்ந்த பிறகு அனைத்து இழப்பீடுகளும் மதிப்பீடு செய்யப்படும், சேதமடைந்த பயிர்களுக்கு விவசாயிகள் இழப்பீடு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது இன்னும் நடக்கவில்லை. பல்காரின் காமினி, மனோஜ் போன்ற விவசாயிகள் ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனர். “கடந்தாண்டும் எனக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை; நான் எதையும் எதிர்பார்க்கவில்லை,” என்கிறார் காமினி. “தாலத்தி அலுவலக அதிகாரிகள் அடுத்த மாதம் பணம் கிடைத்துவிடும் என்று சொல்லி வந்தனர், ஆனால் எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை.”
தமிழில்: சவிதா