1998ஆம் ஆண்டு வெளிவந்த ஏ பக்’ஸ் லைஃப் எனும் ஹாலிவுட் வெற்றிப் படத்தில், எறும்புத் தீவில் வெட்டுக்கிளிகள் போன்ற எதிரிகளிடம் இருந்து தனது உறவினர்களை காக்க, ஃபிளிக் எனும் எறும்பு மாவீரர்களை தேர்வு செய்ய முயற்சிக்கிறது.
நிஜ வாழ்க்கையில் எடுத்துக் கொண்டால், இந்தியாவின் ஒரு லட்சம் கோடி உயிர்களில் 130 கோடி பேர் மனிதர்கள். இந்தாண்டு இந்தியாவிற்கு கோடிக்கணக்கான சிறுகொம்பு வெட்டுக்கிளிகள் படையெடுத்தன. அவை பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்களை அழித்துவிட்டதாகச் சொல்கிறார் மத்திய அரசின் வேளாண்மை ஆணையர்.
இதுபோன்ற வான்வெளி படையெடுப்பாளர்களுக்கு தேசிய எல்லைகள் கிடையாது. 30 நாடுகள், 160 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கடந்து மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்துள்ளதாக ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) சொல்கிறது. வெட்டுக்கிளிகளின் சிறிய திரள் – 1 சதுர கிலோமீட்டருக்கு 4 கோடி உறுப்பினர்களை கொண்டது - 35,000 மனிதர்கள், 20 ஒட்டகங்கள் அல்லது ஆறு யானைகள் ஒரு நாளில் சாப்பிடக் கூடிய அளவிற்கு உண்பவை.
அவற்றைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு, வேளாண்மை, உள்துறை, அறிவியல் தொழில்நுட்பம், விமான போக்குவரத்து, தொலைதொடர்பு அமைச்சகங்களிடம் இருந்து உறுப்பினர்களை தேசிய வெட்டுக்கிளி எச்சரிக்கை நிறுவனம் கோரியதில் வியப்பேதும் இல்லை.
இக்கட்டுரையில் வெட்டுக்கிளிகள் வில்லன்கள் மட்டுமல்ல, லட்சக்கணக்கான பூச்சிகளின் சமநிலையை பாதித்து, அவற்றை ஆபத்திற்குள் தள்ளியிருக்கின்றன. இந்தியாவில், பூச்சியியல் வல்லுநர்கள், பழங்குடியினர், விவசாயிகள் அவற்றைப் பட்டியிலிடும்போது, அவற்றில் பல வகைகள் உண்டு, சில நேரங்களில் புதிய வகைகளும் இருக்கும் என்கின்றனர். நல்ல தோழர்கள் - உணவு உற்பத்திக்கு ‘நன்மை பயக்கும் பூச்சிகள்’- வாழ்விடம் பருவநிலை மாற்றத்தால் பிளவுபடும்போது தீமை செய்யும் பூச்சிகளாக மாறிவிடுகின்றன.
பத்துக்கும் மேற்பட்ட எறும்பினங்கள் ஆபத்தான பூச்சியினங்களாக மாறியுள்ளன, சில்வண்டுகள் புதிய பகுதிகளுக்கு படையெடுக்கின்றன, தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன, தட்டான்கள் காலம் தவறி தோன்றுகின்றன, அனைத்து உயிரினங்களின் உணவுப் பாதுகாப்பும் சுரண்டப்படுகிறது. மென்சிவப்பு மார்பக ஜெஸ்பல் பட்டாம்பூச்சிகள் கெலாய்டாஸ்கோபிக் வடிவங்களில் மிதந்து கிழக்கிலிருந்து மேற்கு இமயத்திற்கு வரும்போது படபடக்கின்றன, புதிய பகுதியை உரிமை கோருவதோடு, 'நன்மை பயக்கும்' உள்நாட்டு இனங்களை அழிக்கின்றன. இந்தியா எங்கும் போர்க்களங்களும், போராளிகளும் உள்ளன.
உள்நாட்டு பூச்சிகளின் சரிவால் மத்திய இந்தியாவில் தேன்வேட்டை குறைந்துள்ளது. “ஒரு காலத்தில் குன்றின் முகங்களில் நூற்றுக்கணக்கான தேன்கூடுகள் காணப்படும். இன்று தேன் கூட்டை பார்ப்பதே அரிதாகிவிட்டது,” என்கிறார் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதாகும் பிரிஜ் கிஷான் பார்தி.
ஷிரோஜித் கிராமத்தில் அவரைப் போன்ற பல தேன் வேட்டையாளர்கள் உள்ளனர் - அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள் - மலை முகடுகளில் தேன் எடுத்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமியா வட்டார தலைநகரங்களின் வாரச் சந்தைகளில் விற்கின்றனர். இவர்கள் ஆண்டிற்கு இருமுறை பயணங்கள் மேற்கொள்கின்றனர், இரு பருவத்திலும் (நவம்பர்-டிசம்பர் மற்றும் மே-ஜூன்) வயல்களில் பல நாட்களை செலவிடுகின்றனர்.
பத்தாண்டுகளில் அவர்களது தேனின் விலை குவிண்டாலுக்கு ரூ. 60லிருந்து ரூ. 400 என உயர்ந்துவிட்டது, என்கிறார் பிரிஜ் கிஷனின் 35 வயது சகோதரர் ஜெய் கிஷன், “இப்பயணங்களின் போது எங்கள் இருவருக்கும் தலா 25-30 குவிண்டால் வரையிலான தேன் கிடைக்கும், இப்போது 10 கிலோ கிடைப்பதே பெரிதாக உள்ளது. நாவல், மாம்பழம், தான்றி, சல் போன்ற மரங்கள் காடுகளில் குறைந்துவிட்டன. மரங்கள் குறைந்ததால், பூக்களும் குறைந்தன. இதனால் தேனீக்கள், பிற பூச்சி வகைகளுக்கு உணவும் குறைந்துவிட்டன.“ தேன் எடுப்போருக்கும் வருமானம் சரிந்துவிட்டது.பூக்களின் சரிவு மட்டும் கவலை அளிக்கவில்லை. “நிகழ்வியல் ஒத்திசைவின்மையும் காணப்படுகிறது - பூச்சிகளின் வெளிப்பாடும், பூக்களும் வெளிப்பாடும் ஒத்திசைவின்றி உள்ளன,” என்கிறார் பெங்களூரூ தேசிய உயிரியல் அறிவியல் மைய டாக்டர் ஜெயஸ்ரீ ரத்னம். “பல வகை செடிகளுக்கும் இது பொருந்தும்,” என்கிறார் என்சிபிஎஸ் வனஉயிரியல் மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் இணை இயக்குநரான டாக்டர் ரத்னம். “பருவநிலை மண்டலங்களில் இளவேனிற்கால தொடக்கம் முன்கூட்டியே வருவதால் பூக்களின் தேதிகளும் முன்கூட்டியே வந்துவிடுகின்றன, ஆனால் அதே தேதிகளில் மகரந்த சேர்க்கையாளர்கள் வருவதில்லை. பூச்சிகளுக்கு தேவைப்படும்போது உணவு கிடைப்பதில்லை என்பதே இதன் பொருள். பருவநிலை மாற்றத்தால் இந்த மாற்றங்கள் நிகழுகின்றன.”
அவை நம் உணவுப் பாதுகாப்புடன் நேரடி தொடர்பில் உள்ளவை, ரோமம் நிறைந்த கால்நடைகளிடத்தில் காட்டும் அன்பை பூச்சிகள் மீது யாரும் காட்டுவதில்லை,” என்கிறார் டாக்டர் ரத்னம்.*****
“என் கொய்யா மரத்தில் மட்டுமல்ல, நெல்லி, இலுப்பை மரங்களிலும் பூக்கள் குறைவாக உள்ளன. இப்போது சில ஆண்டுகளாக சார மரம் பூப்பதே இல்லை,” என்கிறார் ம.பியின் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள கடியாதனா கிராமத்தைச் சேர்ந்த 52 வயதாகும் ரஞ்ஜித் சிங் மார்ஷ்கோலி.
“தேனீக்கள் குறைவதால், பூக்கள், பழங்களும் குறையும்,” என்கிறார் ரஞ்ஜித் சிங்.
மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் எறும்புகள், தேனீக்கள், ஈக்கள், குளவிகள், அந்து பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், வண்டுகள் போன்ற உள்நாட்டு பூச்சிகளின் இறக்கைகள், கால்கள், கொம்புகள், மீசைகளில் தான் நம் உணவு பாதுகாப்பு உள்ளது. 20,000க்கும் அதிகமான காட்டு தேனீக்கள், பல வகை பறவைகள், வவ்வால்கள், பிற விலங்குகளும் மகரந்தச் சேர்க்கையில் பங்காற்றுகின்றன. 75 சதவீத அனைத்து உணவு பயிர்களும், 90 சதவீதம் அனைத்து வனச் செடிகளும் இந்த மகரந்தச் சேர்க்கையைச் சார்ந்துள்ளன. உலகளவில் ஆண்டுதோறும் பாதிக்கப்படும் பயிர்களின் மதிப்பு 235 பில்லியன் டாலர் முதல் 577 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்கிறது FAO செய்தி அறிக்கை.மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உள்நாட்டு பூச்சிகளின் இறக்கைகள், கால்கள், கொம்புகள், மீசைகளில் தான் நம் உணவு பாதுகாப்பு உள்ளது
உணவுப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கையோடு மரக் கட்டைகளை உடைப்பது, பிணங்களை உண்பது, மண்களை துளைத்து விதைகளை புதைப்பது என காடுகளின் நலனை பாதுகாக்கவும் பூச்சிகள் உதவுகின்றன. இந்தியாவில் காடுகளுக்கு அருகே 170,000 கிராமங்களில் லட்சக்கணக்கான பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்கள் காடுகளில் இருந்து விறகுகள், மரங்கள் தவிர்த்த வனப் பொருட்களை கொள்முதல் செய்து விற்கின்றனர் அல்லது பயன்படுத்திக் கொள்கின்றனர். நாட்டின் 53.6 கோடி கால்நடைகள் மேய்ச்சலுக்கு வனங்களையே சார்ந்துள்ளன.
“காடுகள் அழிகின்றன,” என்கிறார் எருமை மேய்த்துக் கொண்டு மரத்தடி நிழலில் அமர்ந்திருக்கும் விஜய் சிங். 70 வயதுகளில் உள்ள இந்த கோண்ட் இன விவசாயிக்கு பிப்பரியா தாலுக்காவில் உள்ள சிங்கனாமா கிராமத்தில் சொந்தமாக 30 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு அவர் ஒருகாலத்தில் கோதுமை, கொண்டைக்கடலை பயிரிட்டார். சில ஆண்டுகளாக நிலத்தை தரிசாக விட்டுவிட்டார். “மழை அதிகமாக பெய்கிறது அல்லது குறைவாக பெய்கிறது அல்லது நிலத்தை நனைத்துவிட்டுச் செல்கிறது.” பூச்சிகளின் பிரச்னைகளையும் அவர் அறிந்துள்ளார். “நீரில்லாதபோது எறும்புகள் எங்கு வசிக்கும்?”
பிப்பரியா தாலுக்காவில் பச்மாரி இராணுவ முகாம் பகுதியில் எறும்புகள் உருவாக்கியுள்ள பாமி எனப்படும் [எறும்புகள், கரையான்களுக்கான உள்ளூர் பெயர்] கூட்டு வளையங்களைக் காட்டுகிறார் 45 வயதாகும் நந்து லால் துர்பே. “பாமிக்கு மிருதுவான மண்ணும், காற்றில் ஈரப்பதமும் வேண்டும்.” தொடர்ந்து மழையின்றி வெப்பம் அதிகரித்துவிட்டதால் இவற்றை இப்போது காண்பது அரிதாகிவிட்டது.
“பருவம் தவறிய குளிர் அல்லது மழை - அதிக மழை அல்லது குறைந்த மழையால் இப்போதெல்லாம் பூக்கள் உதிர்ந்து மடிகின்றன,” என்கிறார் கோண்ட் பழங்குடியினரான துர்பே. தோட்டக்காரராக உள்ள அவருக்கு இப்பிராந்தியத்தின் சூழலியல் குறித்த விரிவான அறிவும் உள்ளது. “மரங்களில் பழங்கள் குறைந்ததால் பூச்சிகளுக்கும் உணவு குறைந்தது.”சத்புரா சரகத்தில் 1,100 மீட்டர் உயரத்தில் உள்ள பச்மாரி யுனஸ்கோவின் உயிர்க்கோளம். இங்கு தேசிய பூங்காக்கள், புலிகள் சரணாலயங்கள் உள்ளன. மத்திய இந்தியாவில் உள்ள சமவெளி உயிரினங்கள் வெப்பத்தால் ஆண்டுதோறும் தவிக்கின்றன. இங்கு வெப்பம் அதிகரித்துள்ளது என்ற துர்பே, விஜய் சிங்கின் கருத்து சரியானது தான்.
நியூயார்க் டைம்சின் புவிவெப்பமடைதல் தொடர்பான விவாத இணைய தளத்தின் தரவுகளின்படி 1960ஆம் ஆண்டு பிப்பரியாவில் ஆண்டு முழுவதும் 157 நாட்களுக்கு வெப்பநிலை 32 டிகிரி செல்சியசை கடந்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை ஆண்டிற்கு 201 நாட்களாக அதிகரித்துள்ளது.
விவசாயிகளும், விஞ்ஞானிகள் குறிப்பிடும் இந்த மாற்றங்களால் உயிரினங்களின் இழப்பும், அழிவும் ஏற்படுகிறது. FAO விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை: “மனிதர்களின் தாக்கங்களால் உலகளவில் தற்போதுள்ள உயிரினங்களின் அழிவு என்பது 100லிருந்து 1,000 முறை உயர்ந்துள்ளது என்பது இயல்பைவிட அதிகமாகும்.”*****
“இன்று என்னிடம் விற்பதற்கு எந்த எறும்புகளும் கிடையாது,” என்கிறார் சத்திஸ்கரின் நாராயண்பூர் மாவட்டம் சோட்டிடோங்கார் வாரச் சந்தையில் நம்மிடம் பேசிய கோண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னிபாய் கச்லான். 50களில் உள்ள முன்னி இளம்பெண்ணாக இருந்தது முதல் பஸ்தார் காடுகளில் புற்கள், எறும்புகளை சேகரித்து வந்துள்ளார். வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்து வரும் அவர், கணவனை இழந்தவர். நான்கு பெண் பிள்ளைகள் உள்ளன. அவர்கள் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் ரோதத் கிராமத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் உணவுகளை விளைவித்து உட்கொள்கின்றனர்.
பிற தேவைகளுக்காக சந்தையில் ரூ.50-60 வரை ஈட்டுவதற்கு அவர் முயல்கிறார் - கோரைப்புல், எறும்புகள், அவ்வப்போது சில கிலோ அரிசி போன்றவற்றை விற்கிறார். சிறிதளவு எறும்புகளை விற்பதால் 20 ரூபாய் வரை கிடைக்கும் என்கிறார். நாங்கள் சந்தித்த நாளில் அவரிடம் விற்பதற்கு எறும்புகள் இல்லை, புல் கட்டுகள் இருந்தன.
“சிவப்பு எறும்புகளை நாங்கள் உண்கிறோம்,” என்கிறார் முன்னி. “ஒருகாலத்தில் காட்டுப்பகுதியில் பெண்கள் நாங்கள் அவற்றை எளிதில் கண்டுபிடித்துவிடுவோம். இப்போது அவை குறைந்துவிட்டன. நெடிய மரங்களில் தான் தென்படுகின்றன - அவற்றை சேகரிப்பது கடினம். இந்த எறும்புகளை பிடிக்கச் செல்லும் ஆண்கள் காயப்படுவது எங்களுக்கு கவலை அளிக்கிறது.”
பூச்சிகளின் பேரழிவை இந்தியா கண்டு வருகிறது. “பூச்சிகள் முக்கியமான இனங்கள். அவை மறைந்தால் அமைப்பும் சரிந்துவிடும்,” என்கிறார் என்சிபிஎஸ் இணைப் பேராசிரியர் டாக்டர் சஞ்ஜய் சானே. வனஉயிரின நிலையங்களில் அந்து பூச்சிகள் ஆய்வு மையங்கள் இரண்டை அவர் நடத்தி வருகிறார் - மத்திய பிரதேசத்தின் பச்மார்சியில் ஒன்று, கர்நாடகாவின் அகும்பேவில் ஒன்று. தாவரங்கள், வேளாண்மை முறைகள், வெப்பநிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் பூச்சிகளின் அனைத்து இனங்களும் சரிகின்றன. ஒட்டுமொத்த உயிரினங்களும் அழிவில் உள்ளன.”
“வெப்பநிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்களைத்தான் பூச்சிகளால் தாக்குபிடிக்க முடியும்,” என்கிறார் இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) இயக்குநர் டாக்டர் கைலாஷ் சந்திரா. வெப்பநிலையில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தாலும் சமநிலை பாதித்து அவற்றின் சுற்றுச்சூழலை எப்போதும் மாற்றிவிடுகிறது.” கடந்த முப்பதாண்டுகளில் வண்டுகள் 70 சதவீதம் குறைந்துள்ளன, பட்டாம்பூச்சிகள், தட்டான்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச சங்கத்தின் (IUCN’s) சிவப்பு பட்டியல் வெளியிட்டுள்ளதாக பூச்சியியல் வல்லுநர்கள் பதிவு செய்துள்ளனர். “பரவலான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு நம் மண்ணிலும், நீரிலும் கசிந்துவிட்டது,” என்கிறார் டாக்டர் சந்திரா. இவை உள்நாட்டு பூச்சிகள், நீர்வாழ் பூச்சிகள், தனித்துவமான இனங்களை அழைத்து நம் பூச்சிகளின் பல்லுயிரை சிதைத்துள்ளன.”
“பழைய பூச்சிகள் மறைந்துவிட்டன, இப்போது புதிய வகைகளை பார்க்கிறோம்,” என்கிறார் ம.பியின் தாமியா தாலுக்கா கடியா கிராமத்தில் நம்மிடம் பேசிய மாவாசி சமூகத்தைச் சேர்ந்த 35 வயதாகும் பழங்குடியின விவசாயி லோடன் ராஜ்போபா. “பெரும் எண்ணிக்கையில் அவை திரண்டு வந்து முழு பயிரையும் அழித்துவிடுகின்றன. நாங்கள் அவற்றை – ‘பின் பினி‘ [எண்ணற்றவை],” என்று பெயரிட்டுள்ளோம். “புதிய வகைகள் மோசமானவை, பூச்சிக்கொல்லிகள் தெளித்தால் அவை அதிகரிக்கின்றன.”
உத்தராகண்ட் மாநிலம் பிம்தாலில் உள்ள பட்டாம்பூச்சி ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான 55 வயதாகும் பீட்டர் ஸ்மீட்டாசெக் இமயமலைகளுடன் புவி வெப்பமடைதலும் இணைவதால் மேற்கத்திய மலைத் தொடர்களில் ஈரப்பதமும், வெப்பநிலையும் அதிகரித்தது. இதனால் குளிர்காலங்கள் உலர்ந்து, குளிர்ச்சியாக இருந்தது மாறி இப்போது வெப்பமாகவும், ஈரமாகவும் மாறுவதால் மேற்கு இமயமலையில் இருந்து பட்டாம்பூச்சிகள் கிழக்கு இமாலய வகைகளின் மீது காலனி ஆதிக்கம் செய்கின்றன (வெப்பம் மற்றும் ஈரப்பத பருவத்திற்கு பழகியவை).
பூமியின் நிலப்பரப்பில் 2.4 சதவீதம் கொண்டுள்ள இந்தியா, பூச்சி இனங்களில் 7 முதல் 8 சதவீதத்தைக் கொண்டு, பல்லுயிர் மையமாக திகழ்கிறது. டிசம்பர் 2019 வரை, இந்தியாவில் பூச்சி இனங்களின் எண்ணிக்கை 65,466 என்கிறார் ZSIன் டாக்டர் சந்திரா. “இது ஒரு மரபு சார்ந்த மதிப்பீடு தான். இந்த எண்ணிக்கை 4 முதல் 5 பங்கு அதிகமாக இருக்கலாம். பல இனங்கள் பதிவு செய்வதற்கு முன்பே அழியும் நிலையில் உள்ளன.”*****
“'பருவநிலை மாற்றத்துடன் காடுகள் அழிப்பு, துண்டாடுதல் போன்றவற்றால் அவற்றின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன,' என்கிறார் பட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியலாளரும், இந்தியாவின் 'எறும்பு மனிதர்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற டாக்டர் ஹிமேந்தர் பார்த்தி. “மற்ற முதுகெலும்புள்ள உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் எறும்புகள் மன அழுத்தத்திற்கு மிகச் சிறந்த அளவில் செயல்படுகின்றன. அவை நிலப்பரப்பு இடையூறு மற்றும் இனங்கள் பன்முகத்தன்மையை மதிப்பிடுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.”
பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழலியல் அறிவியல் துறையின் தலைவரான டாக்டர் பார்த்தி இந்தியாவில் உள்ள எறும்பினங்கள், துணை இனங்கள் என 828 வகைகளை தொகுத்துள்ளார். “இவை படையெடுக்கும் இனங்கள்” என எச்சரிக்கும் அவர், “உள்நாட்டு வகைகளை இடம் மாற்றுவதிலும், புதிய இடத்தை ஏற்பதிலும் இவை வேகமாக செயல்படும். பிற இனங்களின் இடத்தை ஆக்கிரமித்து அவற்றை விரட்டிவிடும்.”இந்த தீமை விளைவிக்கும் பூச்சிகள் தான் வெற்றி பெறும் என நினைக்கிறேன் என்கிறார் 50 வயதுகளில் உள்ள மாவாசி பழங்குடியினரான பார்வதி பாய். ஹோஷங்காபாத் மாவட்டம் பகாரா கிராமத்தில் அவர் சொல்கிறார்.
பார்வதி பாயைவிட ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீலகிரி மலைத் தொடரான தெற்கின் உயிரியலாளர் டாக்டர் அனிதா வர்கீசின் கணிப்பு: “உள்நாட்டு சமூகத்தினர் தான் மாற்றங்களை முதலில் கவனிக்கின்றனர். “ நீலகிரி கீஸ்டோன் அறக்கட்டளையின் இணை இயக்குநரான அவர், “கேரளாவில் தேன் வேட்டையாளர்கள் அபிஸ் செரானா தேனீக்கள் கரடிகளின் தாக்குதல், மண்ணின் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தரைதளங்களில் கூடு கட்டுவதை தவிர்த்து மரங்களின் குகைகளுக்கு சென்றுவிட்டன. மரபு சார்ந்த அறிவு கொண்ட சமூகத்தினரும், விஞ்ஞானிகளும் ஒருவருக்கு ஒருவர் பேசி இதற்கு வழி கண்டறிய வேண்டும்.”
நீலகிரியில் வாழும் காட்டுநாயக்கன் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 62 வயதாகும் காஞ்சி கோயில், தனது குழந்தைப் பருவத்தில் இரவை ஒளிரச் செய்யும் மின்மினிப் பூச்சிகள் குறித்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறார். “மின்மினி பூச்சிகள் மரங்களில் தேர் போல காட்சியளிக்கும். எனது இளம் பருவத்தில் பெருந்திரளாக அவை மரங்களில் திரிவதை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இப்போது அவற்றை பார்க்க முடிவதில்லை.”
சத்திஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் உள்ள ஜபார்ரா வனத்தில் 50களில் உள்ள கோண்ட் விவசாயி விஷால் ராம் மார்க்கம், காடுகளின் மரணத்தை குறிப்பிடுகிறார்: “நிலமும், காடுகளும் இப்போது மனிதர்களுக்கு சொந்தமாகிவிட்டன. நாம் தீமூட்டுகிறோம், வயல்களிலும், நீரிலும் டிஏபி [டைஅமோனியம் பாஸ்பேட்] தெளிக்கிறோம். நஞ்சு நிறைந்த நீரினால் ஆண்டுதோறும் 7 முதல் 10 பெரிய விலங்குகளை நான் இழக்கிறேன். மீன்கள், பறவைகள் வாழ முடியாத சூழலில் எப்படி சிறிய பூச்சிகளால் வாழ முடியும்? ”
முகப்புப் படம்: யஷ்வந்த் ஹெச்.எம்.
இக்கட்டுரைக்கான தகவல்களை சேகரிக்க இணையின்றி உதவி, ஆதரவளித்த முகமது ஆரிஃப் கான், ராஜேந்திர குமார் மகாவீர், அனுப் பிரகாஷ், டாக்டர் சவிதா சிப், பாரத் மெருகு ஆகியோருக்கு செய்தியாளரின் சார்பில் நன்றிகள். தனது கருத்துகளை தாராளமாக பகிர்ந்துகொண்ட தடயவியல் பூச்சியியல் வல்லுநர் டாக்டர் மீனாக்ஷி பார்த்திக்கும் நன்றிகள்.
எளிய மக்களின் குரல்கள், வாழ்க்கை அனுபவங்களின் மூலம் பருவநிலை மாற்றம் குறித்து தேசிய அளவில் செய்தி சேகரிக்கும் திட்டத்தை UNDP ஆதரவுடன் பாரி செய்து வருகிறது.
இக்கட்டுரையை மீண்டும் வெளியிட வேண்டுமா? [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதுங்கள். [email protected] என்ற முகவரிக்கும் அதன் நகலை அனுப்புங்கள்.
தமிழில்: சவிதா