பிரபாகர் சாவலுக்கு (30), அவரது மாமா சிவாஜி சாவலைவிட (55) கடினமான வேலை. மராத்வாதாவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள மோர்கானில் இருவரும் விவசாயிகள். இருவரும் முக்கியமாக பருத்தி சாகுபடி செய்பவர்கள். ஆனால், சிவாஜியின் பருத்தி பயிர் நீண்டகாலம் பணப்பயிராக இருந்தது. ஆனால், பிரபாகரின் பயிரோ அதிகளவிலான பணத்தை கொண்டுவரவில்லை.
சாவல்கள் மட்டும் இதை தனியாக செய்யவில்லை. மராத்வாதாவின் பர்பானி, ஹிங்கோலி மற்றும் ஔரங்காபாத் ஆகியவை பருத்தி சாகுபடி பரவலாக நடைபெறும் மாவட்டங்களாகும். இங்கு 17.60 ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுவதாக மாநில வேளாண் துறை கூறுகிறது. இந்தப்பயிர், துவரை, சோயா பீன்ஸ் மற்றும் சோளம் ஆகிய பயிர்களைவிட அதிக லாபத்தை தரக்கூடியது. அதனால், இது பணப்பயிர் என்று அழைக்கப்படுகிறது. எனினும், பருத்தியின் உற்பத்தி விலை கடந்த ஆண்டுகளில் உயர்ந்துவிட்டது. ஆனால், விற்பனை விலை ஒரே மாதிரிதான் உள்ளது. பருத்தியை பணப்பயிர் என்பது பெயரில் மட்டுமே உள்ளது.
பிரபாகர் பருத்திக்கான செலவை தெளிவாக விளக்குகிறார். ஒரு பேப்பர் எடுத்து, அதில் ஒரு ஏக்கருக்கு ஒவ்வொரு நிலையிலும் செய்யப்படும் அனைத்து செலவினங்களையும் ஒவ்வொன்றாக எழுதுகிறார். ஒரு பை விதை ரூ.800 ஆகும். விதைப்பதற்கு முன்னர், ஜீன் மாத மத்தியிலே நிலத்தை தயார் செய்வதற்காக கூலித்தொழிலாளர்களுக்கு ஆகும் செலவு ரூ.1,100. விதைக்கும்போது ரூ.400 கூடுதலாக செலவாகும். பருவமழை நன்றாக பொழிந்தால், 3 முறை களையெடுக்க வேண்டும். அதற்கு கூலி ரூ.3,000. உரங்களுக்கு ரூ.3,000 செலவாகும். பூச்சிக்கொல்லிகளுக்கான செலவு ரூ.4,000. அறுவடை செய்ய ரூ.5,000 தேவைப்படும்.
இவை இத்தோடு முடிந்துவிடவில்லை. கடைசி தடை அவற்றை சந்தையில் விற்பது. ஒரு அறுவடைக்கு போக்குவரத்து, வியாபாரிகளுக்கான கமிஷன் உள்பட செலவு ரூ.3,000 ஆகும்.
“ஒரு ஏக்கருக்கான செலவின் மொத்த தொகை ரூ.20,300 வரை உள்ளது“ என்று பிரபாகர் கூறுகிறார். அவரின் பயிரை அறுவடை செய்யும் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் சந்தைவிலை குவிண்டால் ரூ.4,300 (இது கடந்தாண்டு ரூ.4,000மாக இருந்தது). “வருமானம் (அனைத்து செலவினங்களுக்குப்பின்னர்) ரூ.34,800“ என்று அவர் கூறுகிறார். ஒரு ஏக்கருக்கு 8 மாத கடின உழைப்பு மற்றும் முதலீடுகள் பெறுவது ரூ.14,500 மட்டுமே. தண்ணீர் குழாய் மற்றும் ஆழ்துளை கிணறுக்கான மின் கட்டணம் செலுத்த வேண்டும். அவரின் 6 மாடுகளுக்கு மாதமொன்றுக்கு ரூ.14 ஆயிரத்துக்கு மேல் செலவாகும்.




