கடந்த வருடத்தில் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து பெய்த மழை, நான்கு மாத கடின உழைப்பை ஒஸ்மனாபாத்தின் விவசாய நிலங்களில் அழிக்க போதுமானதாக இருந்தது. கோபத்துடன் மேகங்கள் குவிந்து அக்டோபர் மாதத்தில் கடுமையான மழையை பொழிந்தது. புயல் வீடுகளின் கூரைகளை சுற்றியடித்தது. கால்நடைகளை அழித்தது. பல மைல் அளவுக்கு பயிரை இல்லாமலாக்கியது.
அவற்றில் சிலவை ஷார்தாவுக்கும் பாண்டுரங் குண்டுக்கும் உரியவை. இருவரும் ஒஸ்மனாபாத்தின் மகாலிங்கி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள். “நாங்கள் விதைத்த சுமார் 50 குவிண்டால் சோயாபீனை இழந்துவிட்டோம்,” என்கிறார் 45 வயது ஷார்தா. “எங்களின் நிலத்தில் முழங்காலளவு தண்ணீர் தேங்கியிருந்தது. அது எல்லாவற்றையும் அழித்துவிட்டது.”
இந்திய வானிலை மையத்தின் தரவுகளின்படி, ஒஸ்மனாபாத் மாவட்டம் அக்டோபர் 2020-ல் 230.4 மிமீ மழையை பெற்றிருக்கிறது. அந்த மாவட்டத்தின் மாத சராசரியைவிட 180 சதவிகிதம் அதிகம் அது.
பாண்டுரங் மற்றும் ஷார்தா போன்ற விவசாயிகள்தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகினர்.
மொத்த விளைச்சலையும் மழை அழிப்பதை 50 வயது பாண்டுரங் ஏதும் செய்யமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தபோது, சோயாபீனின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.3880 ஆக இருந்தது. அவரும் ஷார்தாவும் 1,94,000 ரூபாய் மதிப்பிலான பயிரை இழந்திருந்தனர். “அதில் 80,000 ரூபாய் முதலீடு செய்திருந்தோம்,” என்கிறார் ஷார்தா. “விதைகள், உரம், பூச்சிக்கொல்லி என எல்லாவற்றையும் வாங்க வேண்டியிருந்தது. நான்கு மாதங்கள் முதுகொடிய நாங்கள் விதைப்பதற்கு செலுத்திய உழைப்பை கூட நான் கணக்கில் சேர்க்கவில்லை. திடீரென மழை பொழிந்தது. நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை.”
இத்தகைய பேரிடரிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவென, இருவரும் சோயாபீன் பயிரை பிரதான் மந்திரி ஃபாசல் பிமா யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீடு செய்திருந்தனர். 2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் , “தடுக்கமுடியாத இயற்கை பேரிடர்களிலிருந்து விளைச்சல் முதல் அறுவடை வரை பயிர்களை காப்பதற்காகான” திட்டம்.
தவணைத் தொகையாக பாண்டுரங் ரூ.1980 கட்டி வந்தார். அவரின் 2.2 ஹெக்டேர்கள் (ஐந்து ஏக்கருக்கும் அதிகம்) பயிருக்கு 99,000 ரூபாய் மதிப்பிலான காப்பீடு போடப்பட்டிருந்தது. அதில் அவரது தவணைத் தொகை 2 சதவிகிதம் ஆகும். ஜூலை முதல் அக்டோபர் வரையிலான சம்பா பருவப் பயிர்களுக்கு அத்திட்டத்தின்படி இரண்டு சதவிகிதத்தை தவணைத்தொகையாக செலுத்த வேண்டும். மிச்சத்தை விவசாயக் காப்பீட்டு நிறுவனத்துக்கு - இங்கு பஜாஜ் அலையன்ஸ் காப்பீடு நிறுவனம் - ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து கொடுக்கும்.
குண்ட் குடும்பத்தின் நஷ்டம் 2.5 லட்சம் ரூபாயையும் தாண்டிய அளவுக்கு இருந்தது. பாண்டுரங் காப்பீடை நாடியபோது வெறும் 8000 ரூபாய்தான் நிறுவனத்திடமிருந்து கிடைத்தது.
பாண்டுரங்குக்கும் ஷார்தாவுக்கும் காப்பீட்டுப் பணம் மிகவும் அவசியம். மார்ச் 2020ல் கோவிட் தொற்று வந்த பிறகு, மராத்வடாவின் விவசாயிகள் தொடர் நஷ்டங்களை சந்தித்தனர். விவசாயப் பொருளாதாரம் மிகவும் மந்தமாகி இருந்தது. பேரழிவில் அழிந்த பயிர், குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை கூட்டியது.
ஒஸ்மனாபாத்தின் விவசாயத்துறையின் தரவுகளின்படி, 948990 விவசாயிகள் அம்மாவட்டத்தில் 2020-21 சம்பா பருவப் பயிர்களுக்கு காப்பீடு கட்டியிருந்தனர். அதற்காக அவர்கள் 41.85 கோடி ரூபாய் தவணைகளாக கட்டியிருந்தனர். மாநிலம் மற்றும் ஒன்றியம் ஆகியவற்றின் பங்கு, முறையே ரூ.322.95 கோடி மற்றும் ரூ.274.21 கோடி. மொத்தத்தில் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் ரூ.639.02 கோடி பெற்றிருந்தது.
அதிகபட்ச மழை கடந்த வருட அக்டோபர் மாதத்தில் பயிர்களை அழித்தபோது பஜாஜ் அலையன்ஸ் 79,121 விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை அளித்தது. ரூ.89.96 கோடி அவர்களுக்கு அளிக்கப்பட்டது. மிச்ச ரூ.552.06 கோடியை காப்பீடு நிறுவனம் வைத்துக் கொண்டது.
குறைகளை நிவர்த்தி செய்யும் அதிகாரிகளென காப்பீட்டு நிறுவன இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தோருக்கு PARI கேள்விப் பட்டியலை மின்னஞ்சல் செய்தது. ஆனால் பதில் வரவில்லை. அதே பட்டியல் நிறுவனத்தின் தொடர்பாளருக்கு ஆகஸ்டு 30ம் தேதி அனுப்பப்பட்டது. பஜாஜ் அலையன்ஸ் இந்த பிரச்சினையில் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.
காப்பீடு அளிக்கக் கோரும் விவசாயிகளின் விண்ணப்பங்கள் ஏன் நிராகரிக்கப்படுகின்றன? ஏன் பதில்கள் அளிக்கப்படவில்லை? பாதிப்பு ஏற்பட்ட 72 மணி நேரத்தில் புகார் அளிக்க வேண்டுமென்ற விதிமுறையை கொண்டு நிறுவனம் தங்களுக்கான தொகையை அளிக்க மறுப்பதாக விவசாயிகள் நம்புகின்றனர்.
ஒஸ்மனாபாத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வட்காவோன் கிராமத்தை சேர்ந்த 55 வயது பிபிஷான் வாட்கர், விதிமுறைகள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென கெஞ்சும் தொனியில் சொல்கிறார்.”எங்களுக்கு கிடைக்க வேண்டிய நஷ்ட ஈட்டை கேட்பது பிச்சை எடுப்பது போலிருக்கிறது. காப்பீட்டுக்கான தவணையும் நாங்கள் கட்டியிருக்கிறோம். காப்பீடு எங்களுக்கு நியாயப்படி கிடைக்க வேண்டும்.”
கிட்டத்தட்ட 60-70 குவிண்டால்கள் சோயாபீனை பிபிஷன் அக்டோபர் 2020-ல் இழந்திருந்தார். “அவற்றை என் வயலில் குவித்து, பிளாஸ்டிக் போர்வையை போர்த்தி வைத்திருந்தேன்.” பெய்த மழை மற்றும் அடித்த காற்று ஆகியவற்றிலிருந்து பிளாஸ்டிக் போர்வை பயிரை காப்பாற்ற முடியவில்லை. அடித்த மழையில் நிலத்தின் மண் கூட அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. “2-3 குவிண்டால்கள் தவிர்த்து, மொத்த அறுவடையும் நாசமாகி விட்டது,” என்கிறார் அவர். “அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய முடியும்?”
அவரின் ஆறு ஏக்கர் நிலப் பயிரின் மீது 1,13,400 ரூபாய் மதிப்பிலான காப்பீடு எடுக்கப்பட்டிருந்தது. அதற்கு அவர் 2,268 ரூபாய் தவணை கட்டியிருந்தார். 72 மணி நேரங்களில் நிறுவனத்தை அவர் தொடர்பு கொள்ளாததால் - இணையம் வழியாகவோ தொலைபேசி வழியாகவோ - அவரது காப்பீடு கோரல் நிராகரிக்கப்பட்டது. “நீர் வெளியேறும் வழியை உறுதிப்படுத்தி எங்களின் அறுவடையை நாங்கள் காப்போமா அல்லது காப்பீட்டு நிறுவனத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருப்போமா?” எனக் கேட்கிறார் அவர். “மழையே இரு வாரங்களுக்கு தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும்போது நாங்கள் எப்படி 72 மணி நேரங்களில் காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்க முடியும்?”
மழையால் மரங்கள் சிதறி மின்கம்பங்கள் முறிந்தன. “பல நாட்களுக்கு மின்சாரம் இல்லை,” என்கிறார் பிபிஷன். “எங்களின் ஃபோன்களுக்கு மின்னூட்ட முடியவில்லை. அவர்களின் (காப்பீடு நிறுவனம்) தொலைபேசி எண்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரைதான் இயங்கும். அதன்படி 72 மணி நேரங்கள் கூட அல்ல, நீங்கள் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க 36 மணி நேரங்கள்தான் இருக்கிறது. இத்தகைய சூழலில் நீங்கள் தெளிவாகவும் சிந்திக்க மாட்டீர்கள். இந்த விதிகள் நியாயமற்றவை.”
டிசம்பர் 2020-ல் ஒஸ்மனாபாத்தின் மாவட்ட மாஜிஸ்திரேட் கவுஸ்டப் திவெகாவன்கர் பிரதமர் காப்பீட்டு திட்ட செயலாக்கத்தை ஆய்வு செய்தபோது, 72 மணி நேர கெடுவை தளர்த்திக் கொள்ளுமாறு பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆலோசனை கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.
ஜூன் 7, 2021-ல் 15 விவசாயிகள் ஒன்றிணைந்து காப்பீடு நிறுவனத்துக்கு எதிராக ஒரு பொது நல மனுவை பம்பாய் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.பஜாஜ் அலையன்ஸ்ஸுடன் ஒன்றிய வேளாண்துறையும் மாநில அரசும் ஒஸ்மனாபாத் மாஜிஸ்திரேட்டும் எதிர்மனுதாரர்களாக இணைக்கப்பட்டிருந்தனர். சட்டசபை உறுப்பினர் கைலாஸ் பாட்டிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஓம் ராஜே நிம்பல்கரும் மனுவுக்கு ஆதரவாக இருந்தனர். இரு தலைவர்களும் ஒஸ்மனாபாத்தை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவின் ஆளும்கட்சியான சிவசேனாவை சேர்ந்தவர்கள்.
மனுவை ஆதரித்ததற்கான காரணத்தை விளக்கும்போது, “மழை விளைச்சலை அழித்த பிறகு, மாநில அரசும் ஒன்றிய அரசும் விவசாயிகளுக்கான நஷ்ட ஈடை வழங்கிவிட்டன. அரசுகளே விவசாயிகள் பாதிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்ட பிறகு, காப்பீடு நிறுவனம் மட்டும் ஏன் மறுக்கிறது? அதனால்தான் நானும் கைலாஸ் பாட்டிலும் மனுவை ஆதரிக்கிறோம்,” என்கிறார் நிம்பல்கர்.
நீதிமன்ற தீர்ப்பு எதுவாகினும் பிரதமர் காப்பீட்டு திட்டத்தை சார்ந்திருக்க முடியாததால் ஒஸ்மனாபாத்தின் விவசாயிகளுக்கு அத்திட்டத்தில் நம்பிக்கை போய்விட்டது. ஒஸ்மனாபாத்திலிருந்து பிரதமர் காப்பீட்டு திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்து வருவதாக மராத்தி தினசரியான சகல், ஆகஸ்டு 3, 2021-ல் செய்தி வெளியிட்டது. 2019-ல் 11.88 லட்சம் விவசாயிகள் மாவட்டத்திலிருந்து காப்பீடு திட்டத்துக்கு தவணை செலுத்தி இருந்தனர். ஆனால் 2020-ல் வெறும் 9.48 லட்சம் பேர்தான் தவணை செலுத்தியிருந்தனர். இந்த வருடம் அதுவும் குறைந்து 6.67 லட்சமாக ஆகிவிட்டது.
எதிர்பாரா சூழல்களில் விவசாயிகளை காக்கவே பயிர் காப்பீடு திட்டம். “ஆனால் இச்சூழல்களில் காப்பீடே எதிர்பார்க்க முடியாதபடி இருக்கிறது,” என்கிறார் பிபிஷன். “அது கொடுக்க வேண்டிய உத்தரவாதம் எங்களுக்கு கிடைக்கவில்லை. காலநிலை மாறும் நிலையில், சார்ந்திருக்க வேண்டிய பயிர் காப்பீடும் சிக்கலில் இருக்கிறது.”
கடந்த இருபது வருடங்களாக மழை பெய்யும் விதத்தில் குறிப்பிடத் தகுந்த மாற்றம் ஏற்படுவதாக சொல்கிறார் பிபிஷன். ”நான்கு பருவகால மாதங்களில் வறட்சி நாட்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மழை வந்தால் ஒரேயடியாக பெய்து விடுகிறது,” என்கிறார் அவர். “விவசாயத்துக்கு அது பேரழிவு தரும். ஆரம்பத்தில் எங்களுக்கு நிலையான மழைப்பொழிவு கிடைத்தது. ஆனால் தற்போது வறட்சி இருக்கிறது அல்லது வெள்ளம் நேர்கிறது.”
சோயாபீன் நிலையற்ற காலநிலையிலும் தாக்குப்பிடிக்கும் என்பதால்தான் மராத்வடாவின் விவசாயிகள் இருபது வருடங்களுக்கு முன்பிருந்தே அதை பயிரிடத் தொடங்கினர். “ஆனால் தற்போது (காலநிலையில்) இருக்கும் நிலையற்ற தன்மை சோயாபீனுக்கே கூட அதிகமாக இருக்கிறது,” என்கிறார் பிபிஷன். “அக்டோபர் 2020-ன் மழை எங்களை தொடர்ந்து பாதித்துக் கொண்டிருக்கிறது.”
ஒஸ்மனாபாத்தின் மாவட்ட மாஜிஸ்திரேட் அறிக்கை விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டங்களை வெளிப்படுத்துகிறது. மொத்தமாக 6.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் - ஐந்து லட்சம் கால்பந்து மைதானங்களுக்கு சமம் - பாதிப்பு அடைந்துள்ளது. 4.16 லட்சம் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நான்கு பேர் உயிரிழந்திருக்கின்றனர். 162 கால்நடைகள் இறந்திருக்கின்றன. ஏழு வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டது. 2277 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன.
34 வயது கோபால் ஷிண்டேவின் ஆறு ஏக்கர் நிலம் அக்டோபர் 2020-ல் நீரில் மூழ்கியது. விவசாயிகளுக்கும் காப்பீடு தேவைப்படும் வருடமாக இவ்வருடம் இருக்கிறது என்கிறார் அவர். “கோவிட் தொற்று பரவத் தொடங்கிய பிறகு, பெருநஷ்டங்கள் ஏற்பட்டன. ஏனெனில் சந்தைகள் மாதக்கணக்கில் மூடப்பட்டன,” என்கிறார் கோபால். 20 குவிண்டால் சோயாபீனை மழையில் இழந்த அவருக்கு காப்பீட்டிலிருந்து வெறும் 15,000 ரூபாய்தான் கிடைத்தது. “முக்கியமான பயிர்களின் விலை சரிந்தது. பல விவசாயிகளால் தங்களின் விளைச்சலை சந்தைக்கு கூட கொண்டு செல்ல முடியவில்லை. காரணம் ஊரடங்கு. இந்த நாட்களில் எங்களுக்கு உணவு கூட இல்லை. இந்த காலகட்டத்திலும் கூட எங்களை வைத்து லாபம் பார்த்துக் கொண்டிருந்தது காப்பீட்டு நிறுவனம்.”
விவசாயத்தில் கிடைக்காத வருமானத்தை ஈட்டவென பல விவசாயிகள் கட்டுமான வேலை, பாதுகாப்பு பணி போன்ற இன்னும் பல வேலைகளை செய்தனர். அவையும் ஊரடங்கு காலத்தில் இல்லாமல் போய்விட்டது. பாண்டுரங் லாரி டிரைவராக பணிபுரிந்து ரூ.10,000 மாதந்தோறும் சம்பாதித்தார். கோவிட்டுக்கு பிறகு அதுவும் இல்லை. “எங்களின் வாழ்வாதாரமாக இருந்த முக்கியமான தொழில் தொலைந்து விட்டது,” என்கிறார் ஷார்தா.
இரண்டு வருடங்களுக்கு முன் 22 வயது மகள் சோனாலியின் திருமணத்துக்கு வாங்கிய கடனை இன்னும் அவர் அடைத்துக் கொண்டிருக்கிறார். “இரண்டு லட்சம் ரூபாய் வரை திருமணத்துக்கு கடன் வாங்கியிருந்தோம்,” என்கிறார் ஷர்தா. வேலை இல்லாமல் போனது பாண்டுரங்கை அதிக அழுத்தத்துக்கு உள்ளாக்கி இருந்தது. கடைசியாக இருந்த வருமானமான சோயாபீன் விளைச்சலும் அழிந்து போனது அவருக்கு மிகப் பெரிய அடியாக இருந்தது.
கடந்த வருட நவம்பர் மாதத்தில் ஒருநாள் விவசாய நிலத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டுக் கொண்டார் பாண்டுரங்.
இப்போது ஷார்தாதான் விவசாயத்தை பார்த்துக் கொள்கிறார். எனினும் குடும்பத்தை ஓட்டுமளவுக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை. அவரின் 17 வயது மகன் சாகர் ஒஸ்மனாபாத்தில் தினக்கூலியாக வேலை பார்க்கத் தொடங்கியிருக்கிறார். 15 வயது இளைய மகனான அக்ஷய் ஒரு மொபைல் கடையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். இருவரும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டனர். பாண்டுரங் தற்கொலை செய்து கொண்ட பின், மூவரின் வாழ்க்கைகளும் நிலையற்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
இக்கட்டுரை புலிட்சர் மையத்தின் சுதந்திர இதழியல் மானியம் பெறும் செய்தியாளர் எழுதிய தொடரின் ஒரு பகுதி ஆகும்.
தமிழில் : ராஜசங்கீதன்