“என்னை இதுவரை யாரும் பேட்டி எடுத்ததில்லை. எல்லாவற்றையும் நான் கூறுகிறேன்....”
அவர் “எல்லாவற்றையும்” என்று கூறுவது, 70 வருடங்களாக கழிப்பறையை சுத்தம் செய்தது, பெருக்குவது, துணி துவைத்தது மற்றும் மும்பையின் மேற்கு கார் பகுதியில் பல வீடுகளை சிறிய தொகைக்கு சுத்தம் செய்தது போன்றவைதான். ஓட்டுமொத்த கட்டிடத்தில் உள்ள 15-16 வீடுகளை சுத்தம் செய்வதற்கு 1980 மற்றும் 1990-களில் 50 ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் பத்தேரி சரப்ஜீத் லோகத். அதோடு அவர்களின் சமயலறையில் உள்ள மீதமான உணவுகளும் அவருக்கு கிடைக்கும்.
“என் பெயர் பத்தேரி தேவி. ஹர்யானாவின் ரோதக் மாவட்டத்திலுள்ள சாங்கி கிராமம்தான் எனது சொந்த ஊர். எந்த வருடத்தில் மும்பைக்கு வந்தேன் என எனக்கு சரியாக நினைவில்லை, ஆனால் அப்போதுதான் எனக்கு திருமனம் ஆகியிருந்தது. உறவினர் ஒருவர் செய்து வந்த வேலையை எனக்கு பெற்று தந்தார் என் மாமியார். என் மகனுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாக இருக்கும்போது என் கனவர் (இவரும் துப்புரவு பணியாளரே) இறந்துவிட்டார். அவர் தாதரில் பணியாற்றி வந்தார். வேலை முடிந்து ரயிலில் வீட்டிற்கு வரும்போது மின்சார கம்பத்தில் அடிபட்டு இறந்து போனார்”.
இது நடைபெற்று பத்து வருடங்களுக்கு மேலாகியும், அவர் இதை கூறும்போது ஏற்படும் வலி நமக்கு புரிகிறது. பத்தேரி தேவி பெருமூச்சு விட்டுக் கொள்கிறார். மும்பை, கிழக்கு பந்த்ராவில் உள்ள வால்மிகி நகரில் இவர் வசித்து வருகிறார். அவருடைய ஆதார் கார்டில் 1932-ம் ஆண்டு பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இப்போது அவருக்கு 86 வயதாகிறது. ஆனால் அவரது சுருக்கம் விழுந்த முகத்தை பார்க்கும் போது 90 வயதிற்கு மேல் இருக்கும் என தோன்றுகிறது. அவரும் இதை ஒத்துக்கொள்கிறார். அவரது 70 வயது மகன் ஹரிஷ் இந்த வருடம் ஜூன் 30-ம் தேதி மரணம் அடைந்தார். 12 அல்லது 13 வயதாக இருக்கும்போதே பத்தேரிக்கு திருமணம் முடிந்துவிட்டது. அதன்பிறகு தனது கனவர் சரப்ஜீத் லோகத்தோடு மும்பை வந்தார்.
அவரது மொத்த குடும்பமும் (பெரும்பாலனவர்கள் அவரது கனவரின் உறவினர்கள்) ஹர்யானாவில் இருந்து புலம்பெயர்ந்து மும்பையில் வசிக்கின்றனர். பெரும்பாலும் அனைவரும் துப்புரவு பணியாளராக இருக்கிறார்கள். இப்பகுதியில் வாழும் பலரும் பத்தேரி போல் வால்மிகி சமூகத்தைச் சார்ந்த தலித்கள். இவர்கள் பல்வேறு காலங்களில் ஹய்ரானாவில் இருந்து மும்பைக்கு வேலை தேடி வந்தவர்கள். பத்தேரி போல், இவர்களும் தங்கள் வீடுகளில் ஹர்யான்வி மொழி பேசுகிறார்கள். மும்பையிலுள்ள பல வால்மிகி குடியிருப்புகளில் ஹர்யானாவைச் சேர்ந்த பலர் உள்ளனர். குறிப்பாக பந்துப் டேங்க் சாலை, டோம்பிவிலி, மட்டுங்கா தொழிலாளர் முகாம், விக்ரோலி மற்றும் செம்பூர்.





