“அவள் எப்படி இறந்தால் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவள் மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பது மட்டும் தெரியும்.” தனது தங்கையின் மரணம் குறித்து இப்படி சொல்கிறார் சுபாஷ் கபாடி.
மகாராஷ்டிராவின் பீட் நகர பொது மருத்துவமனையில் அவரது தங்கை லதா சுர்வசி இறப்பதற்கு முந்தைய இரவு ஊசிகளை அவசரமாக செலுத்த வேண்டும் என மருத்துவர் பரிந்துரைத்தார். உடனடியாக வெளியே இருந்த மருந்து கடையில் இருந்து சில நிமிடங்களில் ஊசிகள் வாங்கி வந்துள்ளார் சுபாஷ். ஆனால் அதற்குள் மருத்துவர் சென்றுவிட்டார்.
“அவர் ஏராளமான நோயாளிகளை பார்க்க வேண்டியிருந்ததால் அவர் அடுத்த வார்டுக்கு சென்றுவிட்டார்,” என்கிறார் 25 வயது சுபாஷ். “என் சகோதரிக்கு ஊசிகளை போட்டுவிடுமாறு செவிலியரிடம் நான் கூறியதும், அவர் லதாவின் கோப்புகளை பார்த்துவிட்டு அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றார். ஆனால் சில நிமிடங்கள் முன்பு தான் பரிந்துரைக்கப்பட்டது என்பதால் கோப்பில் இடம்பெறவில்லை என நான் அவரிடம் சொன்னேன்.”
ஆனால் செவிலியர் அவர் சொன்னதை கேட்கவில்லை. ஊசிகள் செலுத்துமாறு வற்புறுத்தியபோது, “பாதுகாவலரை அழைத்துவிடுவேன் என வார்டு பொறுப்பாளர் என்னை மிரட்டினார்,” என்கிறார் சுபாஷ். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நோயாளிக்கு ஊசிகள் செலுத்தப்பட்டன.
அடுத்த நாள் காலை மே 14ஆம் தேதி லதா உயிரிழந்தார். அவருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்ட ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மருத்துவமனையில் இருந்து வந்தார். “அவர் நன்றாக உடல்நலம் தேறி வந்தார்,” என்கிறார் பீட் நகர வழக்கறிஞரான சுபாஷ். ஒருவேளை ஊசிகளை சரியான நேரத்தில் செலுத்தியிருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்பதையும் அவரால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தது உறுதி என்கிறார். “இது நோயாளிகளை அதிகம் பாதிக்கிறது,” என்கிறார் அவர்.
இந்தாண்டு மார்ச் மாதம் கோவிட்-19 இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியதும் கிராமப்புற இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பிற்கு கூடுதல் சுமை ஏற்பட்டது. குறைவான ஊழியர்களைக் கொண்ட மருத்துவமனைகள், களைத்துபோன சுகாதார பணியாளர்கள், நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை மறுக்கப்பட்டது ஆகியவை நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவ வசதி முறையாக கிடைக்கவில்லை என்பதையே காட்டுகிறது.







