இந்த ஆண்டு பருவமழை நன்றாக இருந்தது. சரியான தட்பவெப்ப நிலை. மகசூலும் அமோகமாக இருந்தது. 28 வயது சந்தீப் தாவ்கர், தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்று நினைத்தார்.
பாரம்பரிய சோயாபீன் அல்லது பருத்தியைப் பயிரிட்டுக் கொண்டிருந்த அவர், கடந்த ஆண்டு நாக்பூரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விர்கண்டியில் அண்டை வீட்டாருக்குப் சிறந்த விளைச்சல் கிடைத்ததைக் கண்டு, நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் ஒன்றரை ஏக்கரில் தக்காளி நடவு செய்தார்..
ஆனால் டிசம்பர் நடுப்பகுதியில் உள்ளூர் வகை தக்காளியை அவர் அறுவடை செய்யத் தொடங்கும் முன்பே விலை சரிந்தது. ஜனவரி முதல் வாரத்தில், அவரது 25 பெட்டி தக்காளிக்கு - ஒவ்வொன்றும் 25 கிலோ கொண்டிருந்தது - 1.20 ரூபாய் மட்டுமே கிலோவுக்குக் கிடைத்தது.
அந்த விலையில், தொழிலாளர் கூலி கூட மீட்க முடியவில்லை என்கிறார். போக்குவரத்து மற்றும் வண்டிச் செலவு, சந்தைத் தரகரின் தரகுப் பணம் ஆகியவற்றைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவரது நடவுச் செலவுகள் மற்றும் குடும்ப உழைப்பு இதில் கணக்கிலேயே இல்லை.
டிசம்பர் 27-ம் தேதி வீடு திரும்பிய சந்தீப் தனது உறவினர் சச்சினின் டிராக்டரை கடன் வாங்கினார். நடவு, களையெடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், பூச்சிகள் தாக்காமல் காத்தல் என நான்கு மாதங்களாக தனது மனைவி, மூத்த சகோதரி மற்றும் அத்தையுடன் 24 மணி நேரமும் உழைத்தார்.




