கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, ரூ. 500 மற்றும் ரூ. 1,000 ரத்து செய்யப்பட்டு பத்து மாதங்களுக்குப் பிறகு, பணமதிப்பிழப்பின் குளறுபடிகள் தீபக் படவ்னேவைத் தொடர்ந்து அச்சுறுத்துக்கிறது.
நவம்பர் தொடக்கத்தில், படவ்னே தனது 2.5 ஏக்கர் பண்ணையில் இருந்து 31 குவிண்டால் பருத்தியை அறுவடை செய்திருந்தார். அதில் நல்ல வருமானம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். "வர்த்தகர் லாரிக்கு ஏற்பாடு செய்து என் வீட்டிலிருந்து பருத்தியை ஏற்றினார்," என்று அவர் கூறுகிறார். ஆனால் அப்போதுதான், பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பண நெருக்கடி விவசாயத் துறையைத் தாக்கியது. தீபக்கின் பருத்திக்கான வருவாய் கிடைக்காமல் போனது. ‘வர்த்தகர் இப்போது தீபாவளி சமயத்தில் [அக்டோபர் 2017 நடுப்பகுதியில்] பணம் தருவதாகக் கூறுகிறார்,” என்று அவர் கூறுகிறார்.
படவ்னேவுக்கு அவரது பருத்தி விளைச்சலுக்கு 178,483 ரூபாய் வர்த்தகர் தரவேண்டும். மார்ச் 24 அன்று இந்த தொகைக்கு அவர் பெற்ற காசோலை மூன்று முறை ’பவுன்ஸ்’ ஆனது. மகாராஷ்டிராவின் மராத்வாடாவில் உள்ள அவுரங்காபாத் நகரின் புறநகரில் உள்ள கராஜ்கான் கிராமத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் 31 வயதான தீபக் கூறுகையில், “நான் மட்டுமே பாதிக்கப்பட்டவன் இல்லை. "என் கிராமத்தில் இதேபோல் ஏமாற்றப்பட்ட மற்றவர்களும் உள்ளனர்."
கூட்டுக் குடும்பத்தில் வசித்து வரும், இரண்டு குழந்தைகளைக் கொண்ட படவ்னே, 1,300 பேர் கொண்ட இந்த கிராமத்திலிருந்து சிலரை ஒன்று சேர்த்துள்ளார் - அவர்களும் தங்கள் நிலுவைத் தொகைக்காகக் காத்திருக்கிறார்கள் அல்லது ’பவுன்ஸ்’ ஆன காசோலைகளைப் பெற்றவர்கள். ஏப்ரல் மாதத்தில், பணமதிப்பிழப்புக்கு ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, 38 வயதான தீபக்கின் சகோதரர் ஜீதேந்திரா, 34 குவிண்டால் பருத்திக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் பெற்றார். அதுவும் பவுன்ஸ் ஆனது. "என்னிடம் கையில் பணம் இல்லையெனில் இதை வைத்து நான் என்ன செய்ய வேண்டும்?" அவர் கேட்கிறார். "பயிர் பருவத்திற்கான உள்ளீடுகளை வாங்க எனக்கு பணம் தேவை [ஜூன் நடுப்பகுதியில் தொடங்கியது]."



