மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில், தண்டவாளத்தில் தூங்கிய 16 மத்தியப்பிரதேச தொழிலாளர்கள் ரயிலேறி உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களை நடந்து செல்லும் நிலைக்கு தள்ளியவர்கள் யாரென கேட்க வேண்டிய நாம், ஏன் தொழிலாளர்கள் தண்டவாளத்தில் தூங்கினார்கள் என கேட்டதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ரயிலேறி இறந்த தொழிலாளர்களின் பெயர்களை எத்தனை ஆங்கில நாளிதழ்கள் குறிப்பிட்டன? அவர்கள் முகங்களற்றவர்களாகவும் பெயர்களற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அதுவே ஏழைகளிடம் நாம் கொண்டிருக்கும் அணுகுமுறை. இதுவே விமான விபத்து என்றால் சேவைக்கு என உதவி எண்கள் எல்லாம் இருந்திருக்கும். 300 பேர் இறந்திருந்தாலும் கூட எல்லாருடைய பெயர்களையும் செய்தித்தாள்கள் குறிப்பிட்டிருக்கும். மத்தியப்பிரதேசத்திலிருந்து வந்த 16 ஏழைகளை பற்றி, அதிலும் 6 கோண்ட் ஆதிவாசிகள் இருந்த குழுவை பற்றி யாருக்கென்ன கவலை? அந்த தண்டவாளங்களை தங்களின் வீடுகளுக்கு செல்லும் வழிகாட்டிகளாக நினைத்து அவர்கள் நடந்தார்கள். ஏதோவொரு ஸ்டேஷனிலிருந்து ரயிலேறி வீட்டுக்கு சென்று விடலாமென நம்பியிருந்தார்கள். அவர்கள் தண்டவாளத்தில் தூங்கியதற்கு காரணம் சோர்வு. அந்த தண்டவாளத்தில் ரயில்கள் வராது என அவர்கள் நினைத்திருக்கலாம்.
உழைப்புச்சக்தி பெரியதாக இருக்கும் இந்தியா போன்ற நாட்டில், தொழிலாளர்களுக்கு அரசுகள் தரும் சேதி என்னவென நினைக்கிறீர்கள்?
130 கோடி பேர் வாழும் ஒரு நாட்டில் அனைவரும் ஊரடங்குக்கு தயாராக நான்கு மணி நேரம் மட்டும்தான் கொடுத்தோம். ஆட்சிப்பணியில் பணிபுரிந்த நம் பெருமைக்குரிய M.G.தேவசகாயம் கூறுகையில், ”ஒரு மிகப்பெரும் களத்தில் இறக்கப்படும் சிறு காலாட்படைப் பிரிவுக்கு கூட அதை பற்றிய அறிவிப்பு நான்கு மணி நேரங்களுக்கும் முன்னரே கொடுக்கப்படும்,” என்கிறார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செய்வதில் நமக்கு ஏற்பு இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்கள் கிளம்பிச் செல்வதற்கான தார்மீகக் காரணம் வலுவாக இருக்கிறது. அவர்களுக்கு தெரியும். நாம் எந்த அளவுக்கு நம்ப முடியாதவர்களாகவும் அவர்களை பொருட்படுத்தாதவர்களாகவும் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறோம். நம்மை போன்ற நடுத்தர வர்க்க முதலாளிகளும் ஆலை முதலாளிகளும் அரசுகளும் அவர்களுக்கு எத்தனை கொடூரமாக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் நடப்பதற்கு தடை விதிப்பதற்கான சட்டங்களின் வழியாக மேலும் அவற்றை நாம் உறுதிப்படுத்துகிறோம்.
நீங்கள் பீதியை உண்டாக்கினீர்கள். பல லட்சம் பேர் நெடுஞ்சாலையில் இருக்கும்போது நீங்கள் மொத்த நாட்டையும் குழப்பத்துக்குள் தள்ளினீர்கள். மூடப்பட்டிருந்த திருமண மண்டபங்களையும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் சமூகக் கூடங்களையும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வீடில்லாதவர்களுக்கான புனரமைப்பு மையங்களாக எளிமையாக மாற்றியிருக்க முடியும். ஆனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான தனிமை சிகிச்சைக்கு நட்சத்திர ஓட்டல்களை பயன்படுத்தப்படும் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டோம்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் ஏற்பாடு செய்கையில் முழுக் கட்டணம் விதிக்கிறோம். குளிர்சாதன ரயில்களை அனுப்பி ராஜ்தானி வகுப்பு கட்டணமான 4500 ரூபாயை கட்டணமாக விதிக்கிறோம். அவர்களிடம் ஸ்மார்ட்ஃபோன்கள் இருக்குமென்ற யூகத்தில், பயணச்சீட்டுகளை இணையத்தில் பதிவு செய்யலாம் என அறிவித்து நிலைமையை இன்னும் மோசமாக்கினீர்கள். சில பேர் மட்டும் பயணச்சீட்டுகள் பெறுகிறார்கள்.
பிறகு கர்நாடகாவில் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஏனெனில் முதல்வர் கட்டுமான நிறுவன முதலாளிகளை சந்தித்துவிட்டார். அடிமைகள் தப்பிச் செல்கிறார்கள் என அவர்கள் சொல்லிவிட்டனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடிமைகளின் எழுச்சியை ஒடுக்கும் வேலையைத்தான் நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நாம் எப்போதும் ஏழைகளுக்கு ஒரு அணுகுமுறையையும் பிறருக்கு வேறொரு அணுகுமுறையையும் கொண்டிருக்கிறோம். அத்தியாவசிய சேவைகளை நீங்கள் பட்டியலிடும்போது மருத்துவர்களுக்கு அடுத்து ஏழை மக்களே அத்தியாவசியமானவர்கள் என்பதை கண்டுபிடிக்கிறீர்கள். பல செவிலியர்கள் பணக்காரர்கள் கிடையாது. தூய்மைப் பணியாளர்களும் ASHA சுகாதார தன்னார்வலர்களும் அங்கன்வாடி ஊழியர்களும் மின்சார ஊழியர்களும் மின்சாரத் துறை தொழிலாளர்களும் ஆலைத் தொழிலாளர்களும் பணம் படைத்தவர்கள் கிடையாது. திடுமென இந்த நாட்டின் பணக்காரர்கள் எத்தனை அவசியமற்றவர்கள் என்ற உண்மை உங்களுக்கு புரிகிறது.








