33 வயது ஆரெத்தி வாசுவிற்கு எதிராக 23 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 55 வயதான அவரது தாயார் ஏ.சத்யவதியின் மீது எட்டு வழக்குகள் உள்ளன. வாசு மீது பொய் வழக்குகள் போடப்பட்டு மூன்று முறை சிறைக்குச் சென்றுள்ளார். 2016 செப்டம்பர் முதல் இதுவரை 67 நாட்களைச் சிறையில் கழித்துள்ளார். அவரது தாய் 45 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.
“ஆர்டிஐ தான் தாக்கல் செய்தேன்,” என்கிறார் அவர்.
இதன் விளைவுகள் சாதாரணமாக இருக்கவில்லை. காவல்துறையினரின் சோதனைகள், மிரட்டல், வீடுகளிலிருந்து மக்களை இழுத்துச் செல்வது, தடுப்புக் காவலில் வைப்பது ஆகியவை இப்போது துண்டுருவில் பொதுவாக உள்ளன. நரசப்பூர் மண்டலத்தின் கே. பெதாபுடி, பீமாவரம் மண்டலத்தின் ஜோன்னலாகருவு கிராமங்களிலும் இதே நிலைதான். மேற்கு கோதாவரி மாவட்டத்தில்தான் இம்மூன்று கிராமங்களும் உள்ளன.
இக்கிராமத்தின் சிறு விவசாயிகள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள் போன்றோர் கோதாவரி மெகா கடல்வாழ் உயிரின உணவுப் பூங்கா தனியார் நிறுவனத்திற்கு (GMAFP) எதிராகப் போராடி வருகின்றனர். இப்பகுதியின் நீர் மற்றும் காற்றை இத்திட்டம் மாசுப்படுத்துவதோடு, தங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அவர்கள் கருதுகின்றனர். மீன், இறால், நண்டு போன்ற கடல்வாழ் உயிரினங்களை பதப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதை உணவுப் பூங்கா நோக்கமாக கொண்டுள்ளது. “தினமும் குறைந்தது 1.5 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடும் என்று” GMAFP க்கு எதிரான போராட்டக் குழு, புகார் கூறுகிறது. “தினமும் சுமார் 50,000 லிட்டர் தண்ணீர் கழிவுகளை வெளியேற்றுவார்கள்” என்று அவர்கள் சொல்கின்றனர். கொண்டேரு வடிகாலுக்கு அனுப்பி வைக்கப்படும் கழிவுகள் இம்மாவட்டத்திலிருந்து கடலுக்கு செல்லும்.
2017ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி வெளியான அரசாணையில், “GMAFP கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தினமும் வெளியேற்றப்படும் 3,00,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் குழாய் கட்டப்பட்டு சினாகோலாபலேமில் உள்ள கடலோரத்திற்கு செல்லும்,” என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதுபோன்ற குழாய் அமைப்போ, சுத்திகரிக்கப்பட்ட நீரோ தென்படவில்லை என்கிறது போராட்டக் குழு. கொண்டேரு வடிகாலுக்கு பெருமளவிலான கழிவு நீர் எதிர்காலத்தில் செல்லக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனியாரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட சுமார் 57 ஏக்கர் நிலத்தில் 2015ஆம் ஆண்டு திட்டமிட்டபடி பணிகள் தொடங்கின. இந்தாண்டு அது செயல்படக் கூடும். “சுற்றுச்சூழல் கார்பன் வெளியேற்றத்தை முடிந்தவரை குறைக்க முயற்சிப்பதாக நிறுவனத்தின் ‘தொலைநோக்கு அறிக்கை‘ சொல்கிறது. காற்று, சூரியஒளி, நீர் போன்ற ஆற்றல் வளங்களை நாம் மாற்றாக பயன்படுத்தி மரபுசார்ந்த எரிசக்திகள் மீதான நம்முடைய சார்பைக் குறைப்போம்.”
இது வெறும் மாய வார்த்தைகள் என்கின்றனர் கிராமத்தினர். இத்திட்டம் குறித்து அறிய ஆர்டிஐயில் (தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்) ஆரெத்தி வாசு விண்ணப்பித்த பிறகு சர்ச்சை வெடித்தது. வாசு தனது கிராமத்தில் ‘மீ சேவா கேந்திரா’ (உங்கள் சேவையில்) மையத்தை நடத்தி வருகிறார். அரசு சேவைக்கான விண்ணப்பங்கள், கட்டணங்கள் செலுத்துவதற்காக மாநில அரசின் சார்பில் (தனியார் மற்றும் அவுட்சோர்ஸ்) இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வாசு முதலில் சிறைக்குச் சென்றதும், அவரது தாய் கடல்வாழ் உயிரின உணவுப் பூங்காவிற்கு எதிராக மக்களை திரட்டத் தொடங்கினார். மகனுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் “பிறர்” என்ற பிரிவில் சத்யவதி பெயரும் உடனடியாக காணப்பட்டது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் நம் செய்தியாளரிடம் உள்ள எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கையில்) நகல்களில் ஏராளமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. “எனக்கு காவல்துறையினருடன் கடந்த 35ஆண்டுகளில் எந்த பிரச்னையும் இல்லை,” என்கிறார் சத்யவதி. “இருப்பினும் என் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மட்டுமல்ல. கிராமத்தினர் பலரும் வாரத்திற்கு இருமுறை கூட நீதிமன்றங்களுக்கும், காவல்நிலையங்களுக்கும் அலைய வேண்டிய நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளனர்.”
வேளாண்மையைப் பெருமளவு அழிப்பதோடு, கொண்டேரு வடிகாலுக்கு கழிவு நீர் செல்வதால் அருகில் உள்ள 18 மீனவ கிராமங்களை அழிக்கும் என்கிறார் இப்பிராந்தியத்தின் மீனவ தொழிலாளர் சங்கத் தலைவர் பார்ரி நாகராஜூ. “இந்த ஆலை எங்கள் 40,000 பேரை பாதிக்கும்,” என்கிறார் அவர்.
இரக்கமற்று நிலத்தடி நீரை உறுஞ்சுவது, இத்திட்டத்திற்காக பிற வளங்களை பயன்படுத்துவது ஏற்கனவே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், நீர் நிறைந்த கோதாவரி ஆற்றுப்படுகை கிராமத்தினர் பெருமளவு ஞெகிழி கேன்களை குடிநீருக்காக சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர். இதுபோன்ற கேன்களை விற்கும் தொழில் இப்போது பெருகி வருகிறது. இச்சூழலை GMAFP மேலும் மோசமாக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர்.
நீர்வாழ் உயிரின உணவுப் பூங்காவிற்கு அடுத்துள்ள ஜொன்னலாகருவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளியான கோயா மகேஷ் பேசுகையில், “கிராமத்தில் உள்ள விளைநிலங்களை இந்த ஆலை அழிக்கும், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்,” என்கிறார். இக்கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள். அவர்கள் இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். பெரிய நன்னீர் ஏரியாகிய கொண்டேறு ஏரியை மாசுப்படுத்தும், ஆலையிலிருந்து வரும் துர்நாற்றம் கிராம மக்களை வாழ விடாது என்று அவர்கள் புகார் கூறுகின்றனர்.
70 வீடுகள் உள்ள ஜோன்னாலாகருவு தலித் கிராமத்தில் 20க்கும் மேற்பட்டோர் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. கொலை முயற்சி உள்ளிட்ட ஒன்பது வழக்குகள் மஹேஷ் மீது உள்ளது. அவர் 53 நாடகள் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு மீண்டும் ஆறு நாட்கள் சிறையில் இருந்தார். நீர்வாழ் உயிரின பூங்காவிற்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்றதால் அவரது மனைவி கீர்த்தனா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. “மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் சாதாரணமாகிவிட்டன,” என்கிறார் அவர். விஜயவாடாவில் சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெற்ற ஒரு போராட்டத்தின்போது “கர்ப்பிணி ஒருவர் காய்கறி மூட்டைப் போல காவல்துறையினரால் வேனில் வீசப்பட்டது” என அவர் நினைவுகூர்கிறார்.
இங்கு வயது என்பது ஒரு தடையல்ல. கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கபடி போட்டியில் முன்அனுமதியின்றி பங்கேற்றதாக சிறுவர்கள் கூட இழுத்துச் செல்லப்பட்டனர். கடந்த காலங்களில் எவ்வித பிரச்னையுமின்றி போட்டி நடைபெற்றது. போராட்டங்களில் கிராமத்தினர் பங்கேற்ற பிறகு இப்படி மாறிவிட்டது.
இங்கு நடைபெறும் சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டு நம் செய்தியாளர் மின்னஞ்சல் அனுப்பியும் GMAFPயிடமிருந்து பதிலில்லை. பூங்காவின் செயல் இயக்குநரான ஆனந்த் வர்மா இத்திட்டத்தை கைவிடுவதற்கான எந்த அடிப்படையும் இல்லை என்றும் கழிவு வெளியேற்றம் இருக்காது என்றும் கூறியுள்ளார். நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும் (தி இந்து பிசினஸ்லைன், அக்டோபர், 2016).
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இத்திட்டத்தை வரவேற்றார். “இந்த கடல்வாழ் உணவுப் பூங்காவை சில மக்கள் தடுக்க முயல்கின்றனர். இந்த ஆலையால் எந்த இழப்பும் இல்லை,” என்று அவர் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி எள்ளுருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார். “மாசுகளும், கழிவுகளும் வெளியேற்றப்பட்டு வடிகட்டப்பட்டு கடலுக்கு குழாய் இணைப்பு மூலம் கடலுக்குள் திருப்பிவிடப்படும். அதே இடத்தில் ஆலை கட்டப்படும்.”
ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது அக்வா பூங்காவிற்கு முதன்முதலில் அனுமதி அளிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி (டீடிபி) ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரமாக அதை பின்பற்றியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட கிராமத்தினருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டீடிபி செய்தித் தொடர்பாளர் YVB ராஜேந்திர பிரசாத் இந்த மெகா அக்வா உணவுப் பூங்கா “மாசற்றது” என்கிறார்.
ஆனால் உள்ளூர் மக்கள் சொல்வது வேறு மாதிரியானது. அவர்களின் அதிருப்தி இன்னும் கொதிநிலையில் உள்ளது. “இந்த ஆலை இங்கு வருவதற்கு முன்,” “நான் காவல்நிலையத்திற்கு சென்றதே இல்லை,” என்கிறார் அருகில் உள்ள கே. பெத்தபுடி கிராம விவசாயி சமுத்ரலா வெங்கடேஸ்வர ராவ். கொலை முயற்சி, சூழ்ச்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் கொண்ட 17 வழக்குகள் இப்போது ராவ் மீது உள்ளன. சாலை மறியலில் அவர் பங்கேற்றதும் பிரச்னை தொடங்கியது. “அன்றிரவு காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு நான் 53 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.”
அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவரான சமுத்ரா சத்யவதி பேசுகையில், “இங்கு பெரும்பாலான பெண்கள் வாசலில் கோலமிட [வெள்ளை அல்லது வண்ண நிறங்களை கொண்டு அலங்கரித்தல்] மட்டுமே வெளியே வந்தனர். ஆனால் இன்று சாலையில் இறங்கி போராடுகிறோம், சிறைக்குச் செல்கிறோம். ஒரு ஆலையால் ஏன் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்?” என நான்கு ஆண்டுகால அமைதிப் போராட்டத்திற்கு பிறகு கேட்கின்றனர்,: “ஆலைக்கு அடுத்தநாள் இயந்திரங்கள் வருகிறது என்றால், நாங்கள் இழுத்துச் செல்லப்படுவது, அடிக்கப்படுவது, இரவில் கைது செய்யப்படுவது நியாயமா? எங்கள் உயிரே போனாலும் இந்த ஆலையைத் தொடங்க நாங்கள் விடமாட்டோம்.”
மக்கள் தீவிரமாக எதிர்க்கும் ஒரு தனியார் ஆலையை அரசு ஏன் ஆதரிக்கிறது என கே. பெத்தாபுடியின் சத்யாநாராயணா வியக்கிறார். “இன்றும் காவல்துறையினரின் பாதுகாப்பின்றி ஆலையில் ஒரு கல் கூட நட முடியாது,” என அவர் குறிப்பிடுகிறார்.
தமிழில்: சவிதா