இந்த சிக்கலை நன்றாகப் புரிந்துவைத்துள்ள திபாலி, இந்தப் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பும் மாலும் எவ்வாறு காலனியைப் பிரித்துவிடும் என்று விளக்குகிறார். அடுக்குமாடிக் கட்டிடத்தில் சில வீடுகள் ஆடம்பரமாகக் கட்டப்பட்டு வெளியே விற்கப்படும். ஓரம் கட்டப்படுகிறோமோ என்ற உணர்வின் காரணமாக திபாலியின் சொற்களில் அவ்வளவு கசப்பு. “எங்களை ஒரு ஓரத்தில் தள்ளி மறைத்து வைக்கத்தான் இப்படியெல்லாம் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஏழ்மையும் அழுக்கு வாடையும் வெளியே தெரிந்துவிடக்கூடாது பாருங்கள்!”
தன் தாத்தாவான புரன் பட்டின் சாதனைகளையும் புகழையும் பெருமையாகக் கருதும் திபாலி, தன் கனவைப் பற்றியும் சொல்கிறார். ஒரு நல்ல ஆடை வடிவமைப்பாளர் ஆவதே அவரது கனவு. ஆனால் அவர் குரலில் ஏனோ உறுதியின்மை தெரிந்தது. வினவியதில் அவர் குரல் தாழ்த்தியபடி சொன்னது, “எங்கே அதெல்லாம்? என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்வார்கள்”. அவள் தோழிகள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சில வினாடிகளில் மீண்டும் நம்பிக்கை பெற்றவராய், “ஆனாலும் மற்ற வீடுகளைப் பார்க்கையில் என் வீட்டில் நிறைய சுதந்திரம் இருக்கிறது. நான் படிக்கவும் வேலை பார்க்கவும் அனுமதிப்பார்கள் என்றே நினைக்கிறேன்”, என்கிறார்.
இந்த உரையாடல்களால் இறுக்கமாக இருந்த அந்த சூழலை கலகலப்பாக்குவதற்காக திபாலி தான் அடிக்கடி செல்லும் தன் அம்மாவின் கிராமத்தில் நடந்த ஒரு திருமணம் குறித்து நோக்கம் ஏதுமின்றி சொல்லத் துவங்குகிறார். “நீங்கள் கிராமத்துத் திருமணங்களை கட்டாயம் காண வேண்டும். அவர்களின் உடைகளையும் நடனமாடும் விதத்தையும் நீங்கள் பார்க்கவேண்டுமே!”, என்கிறார். ஒரு வினாடி யோசித்து சட்டென்று, “அடுத்தமுறை நீங்களும் எங்களோடு வரவேண்டும்!”, என்கிறார். வரமுடியாததற்கு நாம் சொல்லும் காரணங்கள் எல்லாம் அவரிடம் செல்லாது, அவர் அழைத்துவிட்டார், அவ்வளவுதான். அதில் பிடிவாதமாக இருக்கிறார்.
கத்புட்லி காலனி அங்கு வசித்து வரும் முக்கிய கலைஞர் சமூகத்தினாலே அறியப்படுகிறது. அங்கு வசிக்கும் தையல், மர வேலை, பாத்திர வேலை போன்றவற்றை செய்யும் சமூகத்தினரை விட சற்றே கூடுதல் கவனமும் செல்வாக்கும் பெற்று விளங்குகிறது இந்த சமூகம். இசை, கண்கட்டு வித்தை, நடனம், ஓவியம், அனைத்தும் இங்கே செழிக்கின்றன. கலை நிகழ்ச்சிகள்தான் அவர்களின் வாழ்வாதாரமே, எனவே அவற்றிற்கு முதன்மையான முக்கியத்துவம் தரப்படுகிறது.
முகம்மது மஜிதிற்கு திறமையும், வாழ்வாதாரமும் கண்கட்டு வித்தைதான். ஒரு குறுகலான படிக்கட்டு, ஓரறையே உள்ள அவரது வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறது. சரியாக பளுவைத் தாங்கும் வகையில் கட்டப்படாத, வசிக்க சற்றே ஆபத்தான வீடு. அங்குதான் அவர் தன் வித்தையைப் பயிற்சி செய்து மெருகேற்றுகிறார். வித்தையில் பயன்படுத்த அவர் அங்கு வைத்திருக்கும் பொருட்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. புத்தகங்கள், கயிறுகள், வாளிகள், குவளைகள், இப்படி. ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்திருந்து வந்து, தன் வாழ்வின் பெரும்பகுதியை கத்புட்லி காலனியிலேயே கழித்திருக்கிறார். தன் தொழிலின் வரலாற்றை அவர் நினைவுகூர்கிறார். “துவக்கத்தில் ஆல்வாரைச் சேர்ந்த கண்கட்டு வித்தைக்காரர்கள் வேலை தேடி அலைந்த, பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த மக்கள். கிராமத்தில் எங்கள் தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் வாழ்வாதாரத்திற்காக அதை நம்பும் அளவிற்கு வருமானம் இல்லை. ஆனால் இங்கு நகரத்தில் பணம் நிறைய கிடைக்கிறது. உணவு விடுதிகள், பிறந்தநாள் விழாக்கள் போன்றவற்றில் நாங்கள் நிகழ்ச்சிகள் நடத்திப் பிழைக்கிறோம்.”
அந்தப் பகுதியைச் சேர்ந்த 19 வயது துடிப்பான இளைஞரான ராஜேஷ் பட், இது போன்ற கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தருபவர். மஜித் ஒரு 30 நிமிட நிகழ்ச்சியின் மூலம் மூவாயிரம் ரூபாய் சம்பாதிப்பதாக அவர் சொல்கிறார்.
19 வயது ராஜேஷ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்றால், அவருக்கு சிறிதும் சளைக்காமல் இயங்குவது முன்னி என்ற இரண்டு வயது சிறுமி. அவரிடம் எந்த இசையைக் கொடுத்தாலும் அதற்கு அருமையாகத் தாளம் போடுகிறார். ராஜஸ்தானி நாட்டுப்புறப் பாடல்களுக்குக் கைதட்டித் தாளமெழுப்பும் பெரிய குழந்தைகள் கொண்ட குழுவில் இவர் சிரமமின்றி எளிதாகக் கலந்துவிடுகிறார். அவர்களுடன் சேர்ந்து ஹார்மோனியம், தபேலா, மின்சார கித்தார் ஆகியவை இசையெழுப்புகின்றன. பாடல் வரிகள் பரிச்சயமானதாகவே இருக்கின்றன, ‘பாதாரோ மாரே தேஸ்’, ‘ஆராராரா’, இப்படி. இந்த இசை எவ்வளவு பழமையானவை என்றெல்லாம் ராஜேஷுக்குத் தெரியாது. “எங்கள் தாத்தா பாட்டி சிறுவர்களாக இருந்தபோதே இவையெல்லாம் இருந்தனவாம். அவர்களுக்கு முன்பும் இவை இருந்திருக்கக்கூடும். இவை எங்கள் கிராமங்களில்தான் உருவாகியிருக்கவேண்டும்.”
பெரும்பாலான குடும்பங்கள் கத்புட்லி காலனிக்குக் குடியேறி முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்றைய தலைமுறை முழுக்க முழுக்க நகர சூழலில் வளர்க்கப்பட்டாலும், இன்றும் அவர்களின் தினசரி பழக்க வழக்கங்கள் கிராம வாழ்வையும் நகர வாழ்வையும் கலந்ததுபோலவே இருக்கின்றன. சமையல், சமூக உரையாடல்கள், திருமண சடங்குகள், கலை வடிவங்கள், உடைகள், சொந்த கிராமத்தோடு இன்றும் வைத்திருக்கும் உறவு என அனைத்தும் அடிப்படையில் கிராம வாழ்வைச் சார்ந்ததே. ஆனால் அவற்றின் மேல் உள்ள ஆவலும், மேம்படுத்தலும் இந்த நகர வாழ்வு தந்தவை!
தற்பொழுது கத்புட்லி காலனி மக்களின் குழப்பமான மனநிலைக்குக் காரணம், தில்லி அரசாங்கம் ஒரு நகரமயமாக்கல் மாதிரியை இவர்களிடம் தள்ள முயற்சிப்பதை அந்த மக்கள் இன்னும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுவிடவில்லை என்பதே.