அனந்தபூர் மாவட்டத்தின் நாகரூர் கிராமத்திலுள்ள விவசாயிகள் கடந்த காலத்தில் அவர்களது கிராமத்தில் நிலத்தடி நீர் வளமாக இருந்ததை நினைத்து ஏங்குகிறார்கள். 2007ஆம் வருடத்துக்கு முந்தைய காலகட்டம் பற்றி அவர்கள் சில நேரம் நிகழ்காலத் தொனியில் பேசிக்கொள்கிறார்கள். ஒப்பீட்டளவில் வளமாக இருந்த அந்த நாட்களை அவர்களால் அவ்வளவு எளிதாக கடந்தகாலமாகப் பார்க்க முடியவில்லை.
2007 வாக்கில் மழை பெய்வது குறைந்தாலும் கூட நாகரூர் பக்கத்தில் உள்ள ஏரிகள் கடைசியாக நிரம்பி வழிந்தன. “ என்.டி.ராமராவ் ஆந்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக இருந்தபோது மழை ஒழுங்காக பெய்தது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004 மே மாதம் முதலமைச்சராக பதவியேற்றபிறகும் ஏரி, குளங்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக நிரம்பி வழிந்தன. அதுதான் கடைசி” என்கிறார் வி.ராமகிருஷ்ண நாயுடு (42) என்கிற விவசாயி.








