குதாப்புரி பலராஜூ தனது ஆட்டோவின் பின் இருக்கையை அகற்றிவிட்டு சுமார் 700 கிலோ தர்பூசணியை ஏற்றுகிறார். தனது கிராமமான வேம்பஹத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோப்போலி கிராமத்தின் வேல்லிதண்டுபாது பகுதி விவசாயி ஒருவரிடம் இவற்றை அவர் வாங்கியுள்ளார்.
1 முதல் 3 கிலோ எடையிலான இந்த தர்பூசணி பழங்களை அவர் எடுத்துக் கொண்டு நல்கொண்டா மாவட்டம் நிதாமனுர் மண்டலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தலா ரூ. 10க்கு விற்பனை செய்கிறார். பழங்கள் விற்காத நேரங்களில் ஆட்டோவில் பயணிகளையும் ஏற்றிக் கொள்கிறார். கரோனா அச்சம் காரணமாக அவரை தற்போது கிராம மக்கள் உள்ளே வர அனுமதிப்பதில்லை. “சிலர் தர்பூசணியை வைரஸ் பழம்“ என்றும், தர்பூசணியுடன் வைரசை எடுத்துக் கொண்டு இங்கே வராதே என்றும்,” கூறுவதாக சொல்கிறார் இந்த 28 வயது பலராஜூ.
தெலங்கானாவில் மார்ச் 23ஆம் தேதிக்கு பிறகு கோவிட்-19 காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கிற்கு முன் அறுவடைக்கு பிறகான காலத்தில் அவர் தினமும் ரூ. 1,500 வரை ஈட்டியுள்ளார். இப்போது ரூ. 600 பெறுவதே சவாலாக உள்ளது என்கிறார். இங்கு ஜனவரியின் தொடக்கத்தில் பயிரிடப்படும் தர்பூசணி இரண்டு மாதங்கள் கழித்து அறுவடை செய்யப்படுகிறது.
விற்பனை சரிவு, மக்களின் எதிர்ப்பு காரணமாக, ஏப்ரல் 1ஆம் தேதி வாங்கிய தர்பூசணியை விற்றால் போதும், வெளியே போகவே பிடிக்கவில்லை என்கிறார் பாலாராஜூ. கோவிட்-19 நெருக்கடியால் தர்பூசணி சாகுபடி, சந்தைப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும் பல விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் அவரைப் போன்றே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்பூசணியை பறித்து, லாரியில் ஏற்றி தினக்கூலி பெறும் தொழிலை பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர். ஒரு லாரியில் 10 டன் சுமையை ஏற்றும் பணியில் 7-8 பேர் கொண்ட பெண்கள் குழு ஈடுபடுகிறது. கிடைக்கும் ரூ.4000ஐ சமமாக பங்கிட்டு கொள்கிறது. பெரும்பாலான நாட்கள் இக்குழுவினர் இரண்டு அல்லது மூன்று லாரிகளில் சுமை ஏற்றி விடுவார்கள். தற்போதைய ஊரடங்கு நெருக்கடியால் தெலங்கானா நகரங்களுக்கு பழங்களின் போக்குவரத்து சரிந்துள்ளதால் அவர்களின் வருவாயும் சுருங்கிவிட்டது.










