“வெயிலின் நாளோடு நான் உன்னை ஒப்பிட்டு பார்க்கவா?“ என்று 19 வயதான பைசா அன்சாரி மிகவும் மெல்லிய குரலில் கிசுகிசுக்கிறார். நாங்கள் மும்ராவில் உள்ள ஒரே ஒரு பெண்கள் நூலகமான ரெஹ்னுமா நூலக மையத்தின் டைல்ஸ்கள் பதிக்கப்பட்ட தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறோம்.
நூலகமாக மாறிய இரண்டு அறைகள் கொண்ட அடுக்ககத்திற்கு பல பெண்கள் வந்து செல்கிறார்கள். சிதிலமடைந்த இதன் முதல் தளம் தாருல் பாலா மசூதிக்கு அருகில் உள்ளது. அங்கு வரும் பெண்கள் தாங்கள் அணிந்து வரும் புர்காக்களை அங்கு பயனின்றி கிடக்கும் பிளாஸ்டிக் நாற்காலியில் வைக்கிறார்கள். குளுமையாக பரந்துவிரிந்துள்ள தரையில் அமர்கிறார்கள். அங்கு வெளியே 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. இது மும்பைக்கு வடகிழக்கில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள புறநகர் பகுதியாகும்.
ஷேக்ஸ்பியரின் சொனட் 18ஐ பைசா நினைவு கூர்ந்து, நான் அதை அதிகம் கேட்க விரும்புகிறேன் என்கிறார். அங்கு அமர்ந்திருக்கும் பைசாவின் சகோதரி ரஷியாவுடன் சேர்ந்து அனைவரின் கண்களும் பைசாவின் பக்கம் திரும்புகின்றன. பைசா, ரோமியோ மற்றும் ஜீலியட்டில் இருந்து “ஒரு அழகிய முகத்தைவிட ஒரு அழகிய மனம் சிறந்தது" என்ற வரியை கூறுகிறார். ரஷியா தனது சகோதரியை குறுகுறுப்புடன் பார்க்கிறார். மற்ற பெண்கள் ஒருவரையொருவர் முழங்கையால் இடித்து கூச்சல் போட்டு வெட்கத்துடன் சிரிக்கின்றனர். என்ன நகைச்சுவை என்று அவரவர் யூகித்துக்கொள்ளலாம்.
ரஷியா அன்சாரி அதிகம் வெட்கப்படும் குணம் கொண்டவராக தெரியவில்லை. அவர் வாசித்த ஷேக்ஸ்பியரின் கதை ஒன்றின் புதிரான சுருக்கத்தை என்னிடம் கூறுகிறார். “ஷேக்ஸ்பியரின் டிவெல்வ்த் நைட் என்ற கதை இந்தி படம் போல் உள்ளது. அதில் வயோலாவிற்கு இரட்டை வேடம்“ என்று வயோலா சிசாரியோவாக மாறுவேடம் போடுவதை கூறுகிறார். ரஷியா தனது ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்ளும் முயற்சியாக நூலகத்தில் உள்ள ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார். அந்த வகுப்புகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணி நேர வகுப்புகளாக எண்ணற்ற வகுப்புகள் நடைபெறுகின்றன.













