முகமது ஷமீம் அஃப்லதூன் என்கிற இனிப்பை பிகாரின் சமஸ்டிப்பூர் மாவட்டத்தின் கரஜ் (தின்மன்பூர்) கிராமத்திலிருக்கும் தன் குடும்பத்துக்கு எடுத்துச் செல்ல நினைக்கிறார். “மும்பையிலேயே சிறந்த மிட்டாய் இது. 36 மணி நேர பயணத்தில் கெட்டுப் போகாது,” என்கிறார் அவர். கரஜ்ஜுக்கு அவர் சென்று கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. திரும்பிச் செல்வதற்கென சில வாரங்களாகவே தயாராகிக் கொண்டிருக்கிறார். அவரின் மனைவி சீமா காதுன் ‘பம்பாய் பாணி உடை’ (சல்வார் கமீஸ்) ஒன்றை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். தலைக்கு வைக்கும் எண்ணெய், ஷாம்பூ, முகப்பூச்சு க்ரீம் போன்றவற்றுடன் வெளியே சொல்வதற்கு அவர் வெட்கப்படும் பொருள் ஒன்றையும் கூட வாங்கி வரச் சொல்லி இருக்கிறார்.
தரையில் அமர்ந்துகொண்டு ஷமீம் வேகமாக ப்ளாஸ்டிக் இலைகளையும் பூக்களையும் மரக்கட்டைகளால் பிடிக்கப்பட்டிருக்கும் துணியில் நெய்கிறார். மத்திய மும்பையில் இருக்கும் இந்த கடையில் அவர், மும்பைக்கு ஜரிகை வேலை செய்ய வந்த காலம் தொடங்கி, கிட்டத்தட்ட பத்து வருடங்களாக வேலை பார்க்கிறார்.
இந்த பட்டறையில், பைகளும் துணிகளும் கம்பளங்களும் சிறிய அறையின் ஒரு பக்க அலமாரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. 400 சதுர அடி அறையில் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கும் 35 தொழிலாளர்கள் ஒன்றாக அமர்ந்து ஜரிகை பின்னுகிறார்கள். அவர்களில் பலர் அதே அறையில் இரவு தூங்கி விடுகிறார்கள். இருக்கும் ஒரு காற்றாடியும் கோடை காலத்தில் போதுவதில்லை. புன்னகையுடன் ஷமீம், ‘அறையில் இருக்கும் ஒரே மேஜை காற்றாடியின் அருகே அனைவரும் தூங்க விரும்புகிறார்கள்,” என்கிறார்.
பாரம்பரியமாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் கலப்பு உலோக இழைகளால் ஜரிகை செய்யப்படும். இப்போது அவை தாமிரம் மற்றும் இன்னும் பல மலிவான கலப்பு உலோகங்களாலும் பளபளப்பான ப்ளாஸ்டிக் பொருட்களாலும் கூட செய்யப்படுகிறது. பெரிய கடைகள் மற்றும் வடிவமைப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் வேலைகளை பொறுத்து மஹிம் கடையில் நெசவாளர்கள் உலோக நூல்களாலும் ஜரிகைகள் நெய்கின்றனர்.
40 வயதாகு ஷமீம் இந்த சிறிய அறையை நோக்கிய பயணத்தை 15 வயதில் தொடங்கினார். ஐந்தாம் வகுப்பு வரை ஓர் உருது மொழி வழி பள்ளியில் படித்திருக்கிறார். தந்தை முகமது சஃபிக்குக்கு, பூச்சிக் கடியால் ஏற்பட்ட நோய்க்கு பிறகு ஷமீமின் தாத்தாவும் மாமாவும்தான் குடும்பத்தை பார்த்துக் கொண்டார்கள். ஜரிகை வேலைக்கு வரவில்லை எனில் அப்பாவை போலவே கறிக்கடை வைத்திருப்பாரென சொல்கிறார் ஷமீம்.








