சாலையோர தாபாவில் இருந்த விவசாயி குழுக்களை புல்லாங்குழலின் இசை கவனத்தை ஈர்த்தது. நாஷிக் நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்த்வாட் நகரத்தில் டிசம்பர் 22ஆம் தேதி குளிர் நிலவியது. அவர்களும் தேநீருக்காக காத்திருந்தனர். சிலர் அரை தூக்கத்தில் இருந்தனர். சிலர் காலை உணவிற்கு மிசல் பாவ் தயாரித்துக் கொண்டிருந்தனர். ஆனால், கொலாப்பூர் மாவட்டம் ஜம்பாலி கிராமத்தைச் சேர்ந்த 73 வயது நாராயண் கெய்க்வாட் புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் அவர் தனது காலை சடங்கை கைவிடவில்லை. “டெல்லி போராட்டம் என்பது பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுடன் முடிந்துவிட்டது என மக்கள் சொல்கின்றனர்,” என்றார் அவர். “இது ஒரு தேசிய பிரச்னை என குறிப்பிட நினைக்கிறோம்.”
வேளாண் தொழிலாளர்கள், செயற்பாட்டாளர்கள் என 2000 பேர் கொண்ட விவசாயிகள் குழுவின் கெய்க்வாடும் ஒருவர். அவர்கள் டிசம்பர் 21ஆம் தேதி நாஷிக்கிலிருந்து டெல்லிக்கு வாகனப் பேரணி மூலம் டெல்லி வந்தார். ஆனால் அதற்கு ஒருநாள் முன்பே கெய்க்வாடின் பயணம் தொடங்கிவிட்டது. “நாங்கள் ஏழு பேர் டெம்போவில் 20ஆம் தேதி இரவு வந்தோம். அங்கு வருவதற்கு 13 மணி நேரம் ஆகியது,” என்றார் அவர். “வயோதிகத்தால் சாலைகளில் பயணிப்பது கடினமாகவே உள்ளது. பகத்சிங்கின் இந்தியாவைப் பற்றிய சிந்தனையை நம்புவதால் நான் வருவதற்கு முடிவு செய்தேன். புரட்சியின்றி விவசாயிகளின் பிரச்னை தீராது.”
டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கண்ணீர் புகை குண்டுகள், தடியடி, கடும் குளிர், மழையையும் துணிந்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் லட்சக்கணக்கான விவசாயிகள் வந்துள்ளனர். அவர்கள் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். 2020 ஜூன் 5ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி சட்ட மசோதாவாக தாக்கல் செய்தது. அதேமாதம் 20ஆம் தேதி அவற்றை துரிதமாக சட்டங்களாக்கியது.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020
,
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020
மற்றும்
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும்
குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை
யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் (ஏஐகேஎஸ்) சார்பில் மகாராஷ்டிராவின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வடக்கத்திய விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
டிசம்பர் 21ஆம் தேதி மதியம் - நாஷிக் கோல்ஃப் கிளப் திடலில் திரண்டுள்ள விவசாயிகளிடையே ஏஐகேஎஸ் தலைவர்கள் உரையாற்றினர் - 50 டிரக்குகள், டெம்போக்கள், நான்கு சக்கர வாகனங்கள் வரிசையாக நின்றன. 1400 கிலோமீட்டர் தூரத்திற்குப் பின்னர் பேரணி தொடங்கியது. முதலில் சந்துவாடில் தங்கிய அவர்கள் அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் முகாமிட்டனர். இரவு உணவாக கிச்சடி சாப்பிடும் நேரத்தில், குளிருக்கு இதமாக தீயும் மூட்டப்பட்டன. பிறகு அவர்கள் போர்வைகள், ஸ்வெட்டர்களை கொண்டு போர்த்திக் கொண்டு படுக்கைக்கு சென்றனர்.
இப்பயணத்திற்காக கெய்க்வாட் நான்கு ஷால்கள் கொண்டுவந்துள்ளார். “நாங்கள் ஜீப்பில் பயணித்தபோது குளிர்காற்று வீசியது,” என்று காலையில் உப்புமா சாப்பிடப்படி அவர் என்னிடம் கூறினார். சந்துவாடிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தியோலா தாலுக்கா உம்ரானி கிராமத்தில் பேரணி காலை உணவிற்காக நின்றது.
கெய்க்வாட் கிராமத்தில் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்கிறார். அவருக்குச் சொந்தமாக இரண்டு எருமை மாடுகள், மூன்று பசு மாடுகளும் உள்ளன. “வேளாண் மசோதாக்களில் ஒன்று ஏபிஎம்சிகளை [விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள்] நீக்குகிறது. இதில் மேலும் தனியார் நிறுவனங்களைக் கொண்டுவரும் என்று அரசு கூறுகிறது. பால்வளத் துறையில் ஏற்கனவே போதிய தனியார் நிறுவனங்கள் உள்ளன. இருந்தும் எங்களுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்கள் தங்களின் சொந்த லாபத்தையே நோக்கமாக கொண்டுள்ளன,” என்றார் அவர்.
கெய்க்வாட் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம் 65 வயதாகும் விவசாயத் தொழிலாளர் கலேபாய் மோர் இருக்கையை தேடிக் கொண்டிருந்தார். உம்ரானியில் அவர் பேரணியில் இணைந்தவர். “எல்லா டெம்போக்களும் நிரம்பிவிட்டன,” என்றார் பதற்றத்துடன். “எனக்காக தனியாக ஒன்றை அவர்கள் வாடகைக்கு எடுக்க மாட்டார்கள். நான் உண்மையில் டெல்லி செல்ல விரும்புகிறேன்.”நாஷிக்கின் திண்டோரி தாலுக்கா ஷின்வாத் கிராமத்திலிருந்து வந்த இளஞ்சிவப்பு அச்சு புடவை கட்டியிருந்த கலேபாய் வாகனங்களில் தங்குவதற்கு இடம் தேடி கொண்டிருந்தார். அவர் நியாயப்படுத்தி, இடம் கேட்டார். திடீரென ஓட்டுனர்களிடம் கத்தினார். இதனிடையே டெம்போவில் அவருக்கான அறையை சிலர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதனால் அவரது கோபமான முகம் சாந்தமடைந்தது. தனது புடவையை சரிசெய்து கொண்டு டெம்போவில் ஏறினார். அவரது முகத்தில் குழந்தையின் சிரிப்பு தவழ்ந்தது.
“விவசாயத் தொழிலாளியான நான் தினமும் ரூ.200 கூலிப் பெறுகிறேன்,” என்று அவர் என்னிடம் சொன்னார். “அதையெல்லாம் விட்டுவிட்டு போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ளேன்.” வேலைவாய்ப்பிற்கு பிற விவசாயிகளை சார்ந்துள்ள கலேபாய், அறுவடையில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்றார். “அவர்களுக்குப் பணம் கிடைக்காவிட்டால், என்னைப் போன்ற பணியாளர்களை வேலைக்கு வைக்க மாட்டார்கள்,” என்றார் அவர். “மின்கட்டணம் அதிகரித்தால், உற்பத்தி விலையும் உயரும், இது எனது வேலைவாய்ப்பைக் குறைத்துவிடும்.”
கோலி மகாதேவ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் கலேபாய். ஷிண்ட்வாடில் வனத்துறையின் கீழ் வரும் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் அவர் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்கிறார். நாஷிக்கின் பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்த அவரைப் போன்ற பல விவசாயிகளும் சிறிதளவு வெற்றியுடன் தங்களின் நில உரிமைக்காக போராடி வருகின்றனர்.
பேரணியில் பயணிக்கும் ஏஐகேஎஸ் தலைவர் அஷோக் தாவாலி பேசுகையில், இந்தியா முழுவதும் பழங்குடியினர் வசிக்கும் வனப்பகுதிகளில் பெரு முதலாளிகளால் மோசமான அனுபவங்களைப் பெற்றுள்ளனர். “இந்த மூன்று வேளாண் சட்டங்களும் முதலாளித்துவத்திற்கு மேலும் வழிவகுக்கும். இதைத்தான் பழங்குடியினர் எதிர்க்கின்றனர்,” என்றார் அவர். “இதனால்தான் அவர்களில் பெரும்பாலானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.”டிசம்பர் 22ஆம் தேதி 150 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்த இப்பேரணி மத்தியப் பிரதேச மாநில எல்லையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துலே மாவட்டம், ஷிர்பூர் நகரில் நின்றது. தடினமான ஸ்வெட்டர்களுடன் பேரணி தொடர்ந்தது. கடும் குளிரின் தாக்கத்தால் சில குழுவினர் திரும்பிச் செல்ல முடிவு செய்தனர். கெய்க்வாட்டிற்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டது. “என்னால் டெல்லி செல்ல முடியாது,” என்று அடுத்த நாள் காலையில் அவர் என்னிடம் சொன்னார். 2-3 நாட்களுக்கு மேல் வேலையை விட்டு வர முடியாது என்று சிலர் திரும்பினர்.
பேரணியின் மூன்றாவது நாளான டிசம்பர் 23ஆம் தேதி 1000 பேர் டெல்லி நோக்கிச் சென்றனர்.
பேரணியின் நெடிய பயணத்தில் பல பெருநகரங்களும், நகரங்களையும் கடந்தன. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் ஏஐகேஎஸ் வாகனப் பேரணியை வழிநடத்தியது. இதற்கு சிவசேனா, காங்கிரஸ் போன்ற பிற அரசியல் கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. சமூக ஆர்வலர்களும் பேரணியில் பங்கேற்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டம் செந்துவாவில் செயற்பாட்டாளர் மேதா பட்கர் விவசாயிகளை வரவேற்றார். மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய அவர் பேரணியில் சிறிது தூரம் பங்கேற்றார்.
மத்திய பிரதேசத்தில் அவர்களுக்கான வரவேற்பு திட்டமிட்டதைவிட அதிக நேரம் நீடித்தது. இரவு 10 மணிக்கு பேரணி இந்தூரின் புறநகரை மட்டுமே அடைந்தது - ஆனால் 320 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜஸ்தானின் கோட்டாவிற்கு அன்றிரவு பேரணி சென்றிருக்க வேண்டும்.
தீவிர ஆலோசனைக்கு பிறகு குழுவினர் ராஜஸ்தானை நோக்கி புறப்பட்டனர். கடும் குளிரில் வாகனங்கள் டிசம்பர் 24ஆம் தேதி, கோட்டாவிற்கு அதிகாலை 7 மணிக்கு வந்தடைந்தது.
திறந்த டெம்போக்களில் இருந்த விவசாயிகள் இரவு முழுவதும் கடும்குளிரை தாங்கினர். அகமத்நகர் மாவட்டம் ஷின்டோடி கிராமத்தைச் சேர்ந்த 57 வயது மதுரா பார்டி பேசுகையில், மூன்றடுக்கு துணிகள் போர்த்தப்பட்டும் குளிர் தாக்கியது என்றார். “என்னால் பல அடுக்கு துணிகளை போர்த்த முடியவில்லை. என் காதுகளை மூடியபடி இரவைக் கடந்தேன்,” என்றார் குருத்வாராவில் காலையில் சமூக சமையற்கூடத்தில் உணவு உண்டபடி அவர். நகரின் சீக்கிய சமூகத்தினர் விவசாயிகளை வரவேற்று ரொட்டி, பருப்பு கிரேவி, கிச்சடி அளித்தது. சோர்வடைந்த குழுவினர் குருத்வாரா அருகே ஓய்வெடுத்து, வெயில் காய்ந்தனர்.டிசம்பர் 24ஆம் தேதி 250 கிலோமீட்டரை கடந்த வாகனப் பேரணி இரவு ஜெய்ப்பூரில் நின்றது.
ராஜஸ்தான், ஹரியானா எல்லையான ஷாஜஹான்பூரை டிசம்பர் 25ஆம் தேதி இரவு 12.30 மணிக்கு இறுதியாக பேரணி வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்களின் வருகையால் போராட்டக் களம் சூடுபிடித்தது. மகாராஷ்டிரா குழுவினரை வரவேற்ற விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்48), இரண்டு வாரங்களுக்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனங்களில் இருந்து இறங்கிய விவசாய தலைவர்கள் இறுதியாக ஹரியானா அரசின் தடுப்புகளின் மீது நடந்தனர். தடுப்புகளின் பின்னால் நின்ற காவல்துறையினரில் சிலர் விவசாயிகளின் பிள்ளைகள் என்று என்னிடம் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் நடந்து வரும் விவசாயிகளை தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துவிட்டு பாக்கெட்டில் உடனடியாக வைத்து கொண்டார்.
மதிய நேரங்களில் விவசாய தலைவர்கள் போராட்டக் களத்தில் உரையாற்றினர். மாலையில் குளிர் அதிகரிக்கும் போது மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு இடமளிக்க மேலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. உறுதிமொழியுடன் டெல்லியை நோக்கி அவர்கள் புறப்பட்டனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு இதுவே தொடக்கம்.
முகப்புப் படம்: ஷ்ரத்தா அகர்வால்
தமிழில்: சவிதா