எந்த தமாஷா குழுவிலும் அதிக சம்பளம் பெறுவது, பெண் நடன கலைஞர்களை - இந்த குழுவில் சுமார் 16 பேர் உள்ளனர், என்று மங்களாத்தாயின் மகனும் பாட்டின் மேலாளருமான, 45 வயதான, அனில் பன்சோட் கூறுகிறார். "2016 - 2017 ஆம் ஆண்டு தமாஷா பருவத்தில், அதிகபட்ச சம்பளமாக ரூபாய் 30,000, பெண் நடன கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது", என்று அவர் கூறினார். இவர்களே மிகப் பெரிய கூட்டத்தை ஈர்கிறார்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து உரத்த பாராட்டுக்களையும் பெறுகின்றனர். ஆனால் 8 மாதங்களுக்கு பயணம் செய்ய விரும்பும் நடன கலைஞர்களை கண்டுபிடிப்பது எளிதல்ல என்று அனில் கூறுகிறார். "அதிக சம்பளமே அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள ஒரே வழி", என்றும் கூறுகிறார்.
இந்தப் பருவத்தில், பல பாடல்களுக்கு முன்னணி நடன கலைஞராக சுஷ்மா மாலியே இருந்தார். அவர் தனது தமாஷா வாழ்க்கையை 12 - 13 வயதில் துவங்கினார், தனது தாய் பாட்டில் ஆடுவதை பார்த்துக் கொண்டே அவர் வளர்ந்தார். சுஷ்மாவின் இந்த தமாஷாவில் கலைஞராகும் முடிவில் அவரது தாய் முதலில் அதிருப்தியில் இருந்தார், ஏனெனில் அவர் சந்தித்த அதே கஷ்டங்களை அவரது மகளும் எதிர்கொள்வதை அவர் விரும்பவில்லை. ஆனால் சுஷ்மா தனது முடிவில் நீடித்து இருந்து விட்டார், ஏனெனில் அவருக்கு தமாஷா வழங்கும் நிதி சுதந்திரம் பிடித்திருந்தது. "எனது கணவர் (ஒரு விவசாயி) அவருக்கும் நான் பாட்டில் வேலை செய்வதில் உடன்பாடு இல்லை, ஆனால் எனக்கு 8 வயதில் ஒரு தம்பியும் மற்றும் 3 வயதில் ஒரு மகளும் கவனித்துக் கொள்வதற்கு இருக்கிறார்கள்", என்று அவர் கூறுகிறார். சுஷ்மாவும் தனது மகள் இந்தத் துறையில் நுழைவதை விரும்பவில்லை மேலும் அவர் ஒரு தமாஷா நடனக் கலைஞர் என்பதை அவரது மகளிடம் இன்னும் தெரியப்படுத்தவில்லை.
குழுவில் இருக்கும் பெற்றோர் அல்லது மூத்த உடன்பிறப்புகள் வேலை செய்வதன் காரணமாக பலர் தமாஷாவில் இணைகின்றனர். இது விவசாய உழைப்பை விட நிலையான வாழ்வாதாரமாக பார்க்கப்படுகிறது. பாட்டில் இருப்பது கலைஞர் என்ற அங்கீகாரத்தையும், உயர்ந்த சமூக அந்தஸ்தையும் அவர்களுக்கு பெற்றுத் தருகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
சங்லி மாவட்டத்தில் உள்ள தூபல் துல்கவுன் கிராமத்தைச் சேர்ந்த சார்தா காடே வைப் போன்றோருக்கு குடும்பத்தை போன்றது தமாஷா. சார்தா நடன கலைஞர் மற்றும் வாக் நாட்டியாவின் (நாட்டுப்புற நாடகம்) கலைஞராகவும் இருக்கிறார். அவரது மகன்களில் ஒருவர் தாள வாத்தியாராகவும், மற்றொருவர் வயர் மேனாகவும் மற்றும் அவரது கணவர் ஒரு நடிகராகவும் இருக்கின்றனர். தமாஷா தொழிலே அவர்களுக்கு ஒரு சிறந்த வழி. விவசாயத் தொழிலாளர்களாக உள்ள அவர்களது சொந்தக்காரர்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 200 தான் சம்பாதிக்கின்றனர் மேலும் அவர்களின் தினசரி வேலையும் நிச்சயம் அற்றதாக இருக்கிறது.
ஆனால் தமாஷாவிலிருந்து வரும் நிலையான வருமானமும் ஒரு சில செலவுடன் தான் வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் ஒரு கூடாரத்தை அமைத்து இருப்பது என்பது சுகமான வழிமுறை இல்லை, என்று சார்தா கூறுகிறார். பின்னர், ஒழுங்கற்ற கால அட்டவணைகள், இரவு நேர வேலை, ஒழுங்கற்ற உணவு மற்றும் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவையும் இதில் இருக்கின்றது.