“திங்கட்கிழமை (மார்ச் 16) முதல் எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எங்கிருந்து நாங்கள் பணத்தை கொண்டு வருவது?”, 5 ரூபாய் கேட்டுக்கொண்டிருக்கும் தன் 7 வயது பேத்தியைச் சுட்டிக்காட்டி கேட்டிகிறார் வந்தனா உம்பர்சதா.
பல்கர் மாவட்டத்தில் கவடேபாடாவில் தன் முற்றத்தில் அமர்ந்துக்கொண்டு, 55 வயதாகும் வந்தனா கேட்கிறார் - “எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வெளியில் ஏதோ நோய் பரவிகிறது, அதனால் வீட்டை விட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என அரசு கூறியிருப்பதாக என் மகன் சொல்கிறான். எங்களையும் வீட்டில் இருக்கும்படி கூறுகிறான். வந்தனா, மகாரஷ்ட்ராவில் வடா தாலுகாவிலுள்ள பல்வேறு கட்டுமான தளங்களுக்கு பணிக்கு செல்பவர்.
மாலை 4 மணி. வந்தனாவின் அக்கம்பக்கத்தினர் அவரின் வீட்டு வாசல் முன் கூடி, பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தனர், குறிப்பாக தற்போதைய கோவிட் 19 நெருக்கடி குறித்து. அவர்களில் ஒரு இளம்பெண் மட்டும், பேசும்போது ஒருவருக்கொருவர் தள்ளி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். கவடேபாடாவில் கிட்டதட்ட 70 வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் அனைவரும், ஆதிவாசியின் வர்லி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
என் மகன்களுக்கும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. நாங்கள் வேலை எதுவும் செய்யாமல் உணவு வாங்க வேண்டும்; எங்களுக்கு எப்படி பணம் கிடைக்கும்? எங்களிடம் இருக்கும் மளிகை பொருட்களும் தீரும் நிலையில் உள்ளது. நாங்கள் என்ன வெறும் சட்னியை மட்டும் செய்து, எங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதா? இந்த நிலை விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.”
வந்தனாவுக்கு மூன்று மகன்கள், 11 பேரக்குழந்தைகள். அவரின் மகன்கள் வடாவில் செங்கல் சூளை அல்லது கட்டுமான தளங்களில் வேலை செய்கின்றனர். இந்த தாலுகாவில் 168 கிராமங்கள் உள்ளன; அதில் 154,416 மக்கள் உள்ளனர். வந்தனாவின் கணவர் லக்ஷ்மண், அதீத குடிப்பழக்கம் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி 15 வருடங்களுக்கு முன்னர் இறந்து போனார். அவர் ஒரு சிறுக் கடையில் வேலை பார்த்துவந்தார் .







