சதர் நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் திங்கள்கிழமை காலை திறக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, சுனிதா தத்தா தனது கணவருடன் அங்கு வந்தார். ஆனால், ஒரு துணை செவிலியர் மருத்துவச்சி (ஏ.என்.எம்) சுனிதாவை மகப்பேறு அறைக்கு அழைத்துச் சென்றப்போது, அந்த தம்பதியர் விரைவாக ஆரம்ப சுகாதார மையம் பி.எச்.சி (ஆரம்ப சுகாதார மையம் )யை விட்டு வெளியேறினர். "இஸ்மே கைஸ் ஹோகா பச்சா, பஹுத் காண்ட்கி ஹை இதார் [இந்த இடத்தில் நான் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும், இங்கே மிகவும் அசுத்தமாக இருக்கிறது]" என்று, அவர்கள் அங்கு வந்த அதே ரிக்ஷாவில் ஏறும்போது சுனிதா கூறினார்.
"இன்று அவளுக்கு குழந்தை பிறப்புக்கான தேதி - எனவே இப்போது நாங்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்," என்று அவர்கள் ரிக்ஷா புறப்பட்டபோது அவரது கணவர் அமர் தத்தா, கூறினார். இந்த ஆரம்ப சுகாதார மையத்தில் சுனிதா தனது மூன்றாவது குழந்தையை பிரசவித்தாள். ஆனால், இந்த முறை, தனது நான்காவது குழந்தைக்கு அவர் வேறு இடங்களுக்குச் செல்ல முடிவு செய்திருந்தார்.
காலை 11 மணியளவில், சதர் ஆரம்ப சுகாதார மையத்தின் மகப்பேறு அறை, ரத்தக் கறை படிந்த தளத்தைத் துடைக்க தூய்மை பணியாளர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறது - முந்தைய நாளின் பிரசவத்திலிருந்து இன்னும் அதே கோலத்தில் இருக்கிறது.
"என் கணவர் என்னை அழைத்து செல்வதற்காக நான் காத்திருக்கிறேன். எனது வேலை நேரம் இன்று முடிந்துவிட்டது. எனக்கு இரவு நேரப்பணி இருந்தது, நோயாளிகள் யாரும் இல்லை, ஆனால் கொசுக்கள் காரணமாக என்னால் தூங்க முடியவில்லை ”என்று 43 வயதான புஷ்பா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகிறார். புஷ்பா பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் சதர் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் துணை செவிலியர் மருத்துவச்சியாக பணிபுரிக்கிறார். அவர் எங்களுடன் அலுவலகப் பகுதியில் பணியில் இருக்கும் போது இருக்கையில் அமர்ந்தபடி பேசுகிறாள். நாற்காலியின் பின்னால் ஒரு மேஜை அதில் சில காகிதங்கள், மற்றும் ஒரு மர படுக்கை உள்ளன. புஷ்பா தனது பதற்றமான இரவைக் கழித்த அதே படுக்கைதான்.
ஒரு காலத்தில் பழுப்பு நிற கொசு வலையாக படுக்கைக்கு மேலே தொங்கவிடப்பட்டு இருந்தது இப்போது வெளுத்த, பூச்சிகள் எளிதில் நுழைவதற்கு போதுமான பெரிய துளைகளால் சூழப்பட்டுள்ளது. கீழே உள்ள படுக்கை மடித்து தலையணையுடன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது - அடுத்த இரவு நேரப்பணிக்காக துணை செவிலியர் மருத்துவச்சி பயன்படுத்தப்பட வேண்டும்.
“எங்கள் அலுவலகமும் தூங்கும் பகுதியும் ஒன்றே. இது இப்படிதான் இருக்கிறது, ”என்று புஷ்பா கூறுகிறார். ஒரு குறிப்பேட்டில் கூடியிருந்த கொசுக்குழுவை விரட்டியடிக்கிறார். புஷ்பாவுக்கு கிஷன் குமாருடன் (47) திருமணமாகியிருந்தது. அவர் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தர்பங்கா நகரில் ஒரு சிறிய கடை உரிமையாளர். இவர்களது ஒரே குழந்தை, 14 வயதான அம்ரிஷ்குமார், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பில் படிக்கிறார்.
ஒவ்வொரு மாதமும் சதர் ஆரம்ப சுகாதார மையத்தில் சராசரியாக 10 முதல் 15 பிரசவங்கள் நடைபெறுவதாக புஷ்பா கூறுகிறார். இது கோவிட் -19 பரவுவதற்கு முன்பு, அந்த எண்ணிக்கையை விட இரு மடங்காக இருந்தது என்று கூறுகிறார். பி.எச்.சியின் மகப்பேறு அறையில் இரண்டு மகப்பேறு மேஜைகள் மற்றும் மொத்தம் ஆறு படுக்கைகள் உள்ளன - அவற்றில் பிறப்புக்கு பிறகான பராமரிப்பு (பி.என்.சி) வார்டில் ஒன்று உடைந்துவிட்டது. "இந்த படுக்கைகளில், நான்கு நோயாளிகளாலும், இரண்டு மம்தாக்களாலும் (மருத்துவச்சிகள்) பயன்படுத்தப்படுகின்றன." என்று புஷ்பா கூறுகிறார். மருத்துவச்சிகளுக்கு தூங்க வேறு இடமில்லை.
‘மம்தாக்கள்’ பீகாரில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களின் மகப்பேறு வார்டுகளில் ஒப்பந்த சுகாதார ஊழியர்களாக பணிபுரிக்கின்றனர். இது இந்த மாநிலத்திற்கு மட்டும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் சுமார் ஒரு மாதத்திற்கு ரூ. 5,000 ஈட்டுக்கிறார்கள். மேலும், அவர்கள் மேற்பார்வையிடும் அல்லது உதவி செய்யும் ஒவ்வொரு பிரசவத்திற்கும், சில நேரங்களில் குறைவாகவோ கூடுதலாகவோ ரூ. 300 ‘ஊக்க’ தொகையாக வழங்கப்படுகிறது. ஆனால் சம்பளம் மற்றும் ‘சலுகைகள்’ ஆகியவற்றிலிருந்து ஒரு மாதத்திற்கு 6,000 ரூபாய் ஈட்டுபவர்களை கண்டறிவது மிகவும் கடினம். இந்த ஆரம்ப சுகாதார மையத்தில் அவர்கள் இருவரும் மற்றும் மாநிலம் முழுவதும் 4,000 க்கும் அதிகமானோர் உள்ளனர்.
இதற்கிடையில், அவர் காத்திருந்த ’மம்தா’ தொழிலாளி பேபி தேவி (பெயர் மாற்றப்பட்டது) வந்தவுடன் புஷ்பாவின் காத்திருப்பு முடிந்தது. "கடவுளுக்கு நன்றி! நான் புறப்படுவதற்கு முன்பு அவர் இங்கே இருக்கிறார். இன்று அவருக்கு காலை நேரப்பணி உள்ளது. மற்றொரு துணை செவிலியர் மருத்துவச்சியும் இப்போது விரைவில் வந்துவிடுவார்,”என்று அவர் மேலும் கூறுகிறார். அவர் நேரத்தை பார்க்க பழைய கால அலைபேசியில் ஒரு பொத்தானை அழுத்துகிறார் - அவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை. இந்த ஆரம்ப சுகாதார மையத்தின் மகப்பேறு அறையில் பணியாற்ற மேலும் மற்ற நான்கு துணை செவிலியர் மருத்துவச்சிகள் உள்ளனர். - அதனுடன் தொடர்புடைய மாவட்டத்தின் பல கிராமங்களில் உள்ள அதன் சுகாதார துணை மையங்களுக்கு 33 பேரும் வெளியிலிருந்து வருவார்கள். ஆரம்ப சுகாதார மையத்தில் ஆறு மருத்துவர்கள் பணிபுரிகின்றனர் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணருக்கான பணியிடம் காலியாக உள்ளது. மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் யாரும் இல்லை - அந்த வேலை வெளியில் இருந்து செய்யப்படுகிறது. இரண்டு தூய்மை பணியாளர்கள் உள்ளனர்.
துணை செவிலியர் மருத்துவச்சிகள் பீகாரில் ரூ. 11,500 சம்பளத்திற்கு பணியைத் தொடங்கினார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இருக்கும் புஷ்பா, சுமார் மூன்று மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்.
52 வயதான மம்தா, பேபி தேவி, தனது கையில் ஒரு பல் துலக்கு குச்சியுடன் ( பல் துலக்குவதற்காக பயன்படுத்தப்படும் வேப்பின் மெல்லிய ஒரு கிளை, சுமார் 20 சென்டிமீட்டர் நீளம்) ஆரம்ப சுகாதார மையத்திற்கு வருகிறார். "அரே தீதி ஆஜ் பில்குல் பாக்தே-பாக்தே ஆயே ஹைன் [சகோதரி, நான் இன்று ஓடி வந்துவிட்டேன்]," என்று புஷ்பாவிடம் கூறுகிறாள்.
இன்று என்ன வித்தியாசம்? அவரது 12 வயது பேத்தி, அர்ச்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவருடன் வேலைக்கு வருகிறார். ஒரு இளஞ்சிவப்பு-மஞ்சள் நிற ஆடை அணிந்து, குறைபாடற்ற பழுப்பு நிற தோலும், பொன்னிற-பழுப்பு நிற தலைமுடி தூக்கிவாரி கட்டப்பட்டிருக்கும் அர்ச்சனா, ஒரு மதிய உணவை வைத்திருக்கும் பிளாஸ்டிக் பையை பிடித்துக்கொண்டு பாட்டியின் பின்னால் நடந்து வருகிறார்.
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள மம்தா பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பிரசவம் முதல் பிரசவத்திற்கு பிறகான பராமரிப்பு மற்றும் மகப்பேறு வார்டில் நடக்கும் எல்லாவற்றிலும் அவர் உதவுகிறார். இருப்பினும், பேபி தேவி கூறுகையில்,"தாயும் குழந்தையும் பிரசவத்திற்குப் பிறகு பார்த்துக்கொள்வதே எனது கடமை, ஆனால், ஆஷா தீதி (ஆஷா பணியாளர்கள்)யுடன் பிரசவத்தை நான் கவனித்துக்கொள்கிறேன், பின்னர் தூய்மை பணியாளர்கள் விடுப்பில் இருக்கும்போது படுக்கையையும் மகப்பேறு அறையையும் சுத்தம் செய்கிறேன்" என்று மேசை தூசுயை தட்டிக்கொண்டே பேபி கூறுகிறார்.
ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரே மம்தாவாக இருந்தபோது தான் அதிகம் சம்பாதித்ததாக அவர் சொல்கிறார். "நான் ஒரு மாதத்திற்கு 5,000-6,000 ரூபாய் ஈட்டுவேன், ஆனால் அவர்கள் மற்றொரு மம்தாவை நியமித்ததிலிருந்து, நான் பிரசவங்களில் ஊக்கத் தொகையில் ஒவ்வொன்றிற்கும் 300 ரூபாய் என்ற கணக்கில் 50 சதவீதம் மட்டுமே சம்பாதிக்கிறேன்,. தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து பி.எச்.சியில் பிரசவங்கள் எண்ணிக்கை குறைந்ததால், ஒவ்வொருவரும் ஒரு மாதத்தில் பெறக்கூடியது ரூ.3,000 அல்லது ஒருவேளை குறைவாகவும் இருக்கும் . அந்த ரூ. 300 ‘ஊக்கத்தொகை’ ஐந்து ஆண்டுகளாக மட்டுமே உள்ளது. 2016 வரை இது வெறும் ஒரு பிரசவத்திற்கு ரூ. 100 ஆக இருந்தது.
பெரும்பாலான நாட்களில், ஆரம்ப சுகாதார மையத்தில் வருபவர்கள் ’ஆஷா’ பணியாளர்கள், கிராமங்களில் இருந்து கர்ப்பிணிப் பெண்களை தங்கள் பராமரிப்பில் பார்த்துக்கொண்டு, பிரசவத்திற்காக இங்கு அழைத்து வருவார்கள். சுனிதாவுடனும் அவரது கணவருடனும் ஒருவர்கூட வரவில்லை. இந்த நிருபர் இருந்தபோது யாரும் உள்ளே வரவில்லை, ஒருவேளை கோவிட் -19 தொற்றுநோய் தொடங்கியவுடன் ஆரம்ப சுகாதார மையத்திற்கு நோயாளிகளின் வீழ்ச்சியை இது பிரதிபலிக்கலாம். இருப்பினும், பிரசவத்திற்கு வரும் நோயாளிகளுடன் பெரும்பாலும் ’ஆஷா’ பணியாளர்கள் வருகிறார்கள்.
ஆஷா என்பது ‘அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்’ மற்றும் அவர்கள் கிராமப்புற சமூகத்தை பொது சுகாதார அமைப்புடன் இணைக்கும் பெண்கள் ஆவர்.
பீகாரில் 90,000 ஆஷா பணியாளர்கள் உள்ளன, இது நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களில் இரண்டாவது பெரிய குழுவாகும். அரசாங்களால் அவர்கள் ‘தன்னார்வலர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இதனால், அவர்களுக்கு நன்கொடை அல்லது வெகுமானம் வழங்கப்படுவது நியாயப்படுத்தப்படுகிறது. பீகாரில், அவர்கள் ஒரு மாதத்திற்கு 1,500 ரூபாய் பெறுகின்றனர். மேலும், மையத்தில் நடக்கும் பிரசவங்கள், நோய்த்தடுப்பு மருந்துகள், வீட்டிற்கு சென்று சோதனை செய்பவர்கள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பணிகளுக்கு மற்ற ‘சலுகைகள்’ கூடுதல் தொகையாக வழங்கப்படுக்கின்றது. இந்த அனைத்து பணிகளிலிருந்தும் அவர்களில் பெரும்பாலோர் சராசரியாக ஒரு மாதத்திற்கு 5,000-6,000 ரூபாய் கிடைக்கும். அவர்களுள் 260 பேர் சதர் பி.எச்.சி மற்றும் அதன் பல துணை மையங்களுடன் தொடர்புடையவர்கள்.
பேபி தனது பேத்தியை பிளாஸ்டிக் பையில் இருந்து உணவை எடுக்கச் சொல்கிறார். மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில். “இங்கு எப்போதும் இடம், படுக்கைகள் மற்றும் வசதிகளின் பற்றாக்குறை இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். ஆனால் சிறந்த வசதிகளை நாங்கள் கேட்டால், நாங்கள் இடமாற்றம் செய்யப்படுவோம் என்று அச்சுறுத்தப்படுகிறோம். மழைக்காலத்தில், நீர் தேக்கம் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அந்த பருவத்தில் பல முறை, பிரசவத்திற்கு வரும் நோயாளிகள் நிலைமையைக் கண்டு வீடு திரும்புகிறார்கள், ”என்று தெரிவிக்கிறார். "அவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கிறார்கள்."
"என்னுடன் வாருங்கள், எங்கள் பிஎன்சி (பிரசவத்திற்கு பிறகான பராமரிப்பு) வார்டை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்," என்று அவர் கூறுகிறார், இந்த நிருபரை தன்னுடன் இழுத்துச் செல்கிறார். “பாருங்கள், பிரசவத்திற்கு பிறகான எல்லாவற்றிற்கும் எங்களிடம் உள்ள ஒரே அறை இதுதான். எங்களுக்கும் நோயாளிகளுக்கும் அவ்வளவுதான். ” இந்த வார்டில் உள்ள ஆறு படுக்கைகள் தவிர, புஷ்பா போன்ற துணை செவிலியர் மருத்துவச்சிகள் அலுவலக பகுதியில் இருப்பார்கள், மற்றொருவர் மகப்பேறு வார்டுக்கு வெளியே உள்ளார். "மம்தாக்கள் இந்த இரண்டு படுக்கைகளை சில நேரங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இரவு நேரப்பணியின்போது அனைத்து படுக்கைகளும் நோயாளிகள் இருந்தால், அவர்கள் பெஞ்சுகளில் தூங்க வேண்டும். நாங்களும் எங்களின் துணை செவிலியர்களும்கூட தரையில் தூங்க வேண்டிய நாட்கள் இருந்தன.”
எந்தவொரு மூத்த ஊழியரும் எங்களின் உரையாடலைக் கேட்கிறார்களா என்று பேபி சுற்றிப் பார்க்கிறார், பின்னர் தொடர்கிறார், “எங்களுக்கு வெதுவெதுப்பான நீருக்கான எந்த ஏற்பாடும் வழங்கப்படவில்லை. துணை செவிலியர்கள் இப்போது நீண்ட காலமாக அதைக் கேட்டு வருகின்றனர். ஆனால் அதுவும் வீண்தான். எங்கள் பக்கத்து வீட்டு தேநீர் கடைக்காரர் மட்டுமே எங்களுக்கு உதவுகிறார். நீங்கள் வெளியே செல்லும்போது, இந்த ஆரம்ப சுகாதார மையத்தின் வாயிலின் வலது பக்கத்தில் ஒரு சிறிய தேநீர் கடை இருப்பதைக் காணலாம். ஒரு பெண்மணியும் அவரது மகளும் நடத்துக்கின்றனர். எஃகு பாத்திரத்தில் நமக்குத் தேவைப்படும்போது அவர் வெதுவெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் கொண்டு வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் அதைக் கொண்டு வரும்போது நாங்கள் அவருக்கு ஏதாவது கொடுப்போம். பொதுவாக, 10 ரூபாய் தருவோம்”.
அவர் சம்பாதிக்கும் இந்த குறைந்த தொகையை அவர் எவ்வாறு சமாளிக்கிறார்? "நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?" பேபி கேட்கிறார். "நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 3,000 ரூபாய் போதுமானதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என் குடும்பத்தில் நான் மட்டுமே சம்பாதிக்கும் உறுப்பினர். என் மகன், மருமகள் மற்றும் இந்த பெண் [பேத்தி] என்னுடன் வசிக்கின்றனர். எனவே நோயாளிகள் எங்களுக்கு கொஞ்சம் தொகையை தருகின்றனர். துணை செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் எல்லோரும் அதை எடுத்துக்கொள்கிறார்கள். இதன்மூலம் நாங்களும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறோம். சில நேரங்களில் ஒரு பிரசவத்திற்கு 100 ரூபாய். சில நேரங்களில், 200 கூட. நாங்கள் நோயாளிகளை கட்டாயப்படுத்த மாட்டோம். நாங்கள் அதைக் கேட்கிறோம், அவர்கள் எங்களுக்கு மகிழ்ச்சியுடன் தருகிறார்கள். முக்கியமாக, ஒரு ஆண்பிள்ளை பிறக்கும்போது!.”
பாரி மற்றும் கெளண்டர்மீடியா அறக்கட்டளையின் கிராமப்புற இந்தியாவில் பதின்வயது பெண்கள் மற்றும் இளம் பெண்கள் குறித்த நாடு தழுவிய செய்தி சேகரிப்பு திட்டம், ‘பாபுலேஷன் ஃபோண்டேஷன் ஆஃப் இந்தியா’வின் ஒரு பகுதியாகும். இது சாதாரண மக்களின் குரல்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் முக்கியமான இன்னும் ஒதுக்கப்பட்ட மக்களின் நிலைமையை ஆராய்வதற்கான முயற்சி ஆகும்.
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய வேண்டுமா? [email protected] என்ற முகவரிக்கும் CCயுடன் [email protected] என்ற முகவரிக்கும் எழுதுங்கள்.
ஜிகியாசா மிஸ்ரா தாகூர் குடும்ப அறக்கட்டளையின் சுயாதீன பத்திரிகை மானியத்தின் மூலம் பொது சுகாதாரம் மற்றும் குடியியல் உரிமைகள் குறித்து செய்தி அளிக்கிறார். இந்த செய்திகளின் உள்ளடக்கங்கள் குறித்து தாகூர் குடும்ப அறக்கட்டளை எந்த தலையங்கக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.
தமிழில்:
ஷோபனா
ரூபகுமார்