இந்தாண்டு வெயில் சுட்டெரிக்கும் ஒரு நாளில், தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட எட்டு குவிண்டால் மிளகாயை விற்கும் நம்பிக்கையுடன் நுசண்டிலா மண்டலம் திரிபுராபுரம் கிராமத்திலிருந்து லாரியில் 105 கிலோமீட்டர் பயணித்து குண்டூருக்கு வந்தார் கோத்தம் ஹனிமி ரெட்டி. இதுவே அவரது கடைசி அறுவடை. ஏப்ரல் மாதத்தில் மூன்று முறை சந்தைக்கு வந்து குவிண்டாலுக்கு முறையே ரூ. 6000 முதல் ரூ.8000 வரை என மிர்ச்சி LCA334 மற்றும் குண்டூர் சன்னம் மிளகாயை அவர் விற்றார்.
இப்போது அவர் விலை ஏறினால் சரக்கை விற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் நகரில் உள்ள என்டிஆர் வேளாண் சந்தை குழுவிற்கு மீண்டும் வந்து மூன்று நாட்களாக காத்திருந்தார். 2017-18ஆம் ஆண்டிற்கான வேளாண் பருவம் முடியும் நாளில் மண்டியின் உணவகத்திற்கு வெளியே அமர்ந்திருந்ததாக அவர் தெரிவித்தார். “இன்று விலை மேலும் சரிந்துவிட்டது. ஒரு குவிண்டாலுக்கு 4,200 ரூபாய் மட்டுமே தர முடியும் என்கின்றனர் கமிஷன் முகவர்கள். அவர்கள் விருப்பத்திற்கு விலையைத் தீர்மானிக்கின்றனர்.”
இக்கட்டான இச்சூழலில் சரக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் குளிர்பதன கிடங்கில் வைக்க வேண்டும் அல்லது குறைந்த விலைக்கு அவர் விற்க வேண்டும். “என்னால் ஏசிக்கு [குளிர்சாதனப் பெட்டி] செலவு செய்ய முடியாது, ஒரு குவிண்டால் அளவிலான தலா 50 கிலோ கொண்ட இரண்டு பைகளை ஒரு முறை கொண்டு வருவதற்கு 1000 ரூபாய் செலவாகிறது,” என விளக்கும் அவர், குறைந்த விலைக்கு விற்பது தான் ஒரே வழி என்கிறார். மவுனமாக சிறிது நேரம் இருந்துவிட்டு குறைந்த ஒலியில் அவர் பேசினார், “தரகர்களுக்கும், ஏசிக் காரர்களுக்கும் [ஏசி பெட்டக உரிமையாளர்கள்] இடையேயான உறவு நன்றாக தெரிந்ததுதான். இது அவர்கள் இருவருக்குமே சாதகம்தான்.”
விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தொழிலாளர் கூலி என ஏக்கருக்கு சுமார் ரூ.2 லட்சம் வரைக்கும் ரெட்டி செலவிட்டுள்ளார். அவரும் அவரது மனைவியும் சேர்ந்து வேலை செய்துள்ளனர். 2017-18 மிளகாய் பருவமான அக்டோபர் முதல் மார்ச் மாதத்தில் ஏக்கருக்கு 20 குவிண்டால் கிடைத்தது. சுமார் ரூ.10 லட்சம் செலவில் மொத்தம் சுமார் 100 குவிண்டால் கிடைத்தது. 2015-16 என முந்தைய ஆண்டுகளில் குவிண்டால் விலை மிக அதிகமாக ரூ.12,000-15,000 வரை (சர்வதேச சந்தையில் ஏற்பட்ட திடீர் தட்டுப்பாடு காரணமாக) கிடைத்தது கொஞ்சம் லாபம் அளித்தது. சில ஆண்டுகளில் குறைந்தது ரூ.10,000 கூட கிடைத்தது விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்தது.
“இந்தாண்டு மட்டும் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை இப்போது எனக்குச் சொல்லுங்கள்?” என்றார் ரெட்டி. “கடந்தாண்டு [2016-17] எனக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இப்போது எனக்கு 36 சதவீதம் எனும் வட்டி விகிதத்தில் 9 லட்சம் கடன் [சில வங்கிக்கடன்களும், தனியாரிடம் வட்டிக்கு வாங்கிய பணமும்] உள்ளது.”
2016-2017ஆம் ஆண்டு வேளாண் பருவத்தின்போது சந்தையில் மிளகாய் குவிந்து கிடந்தது. 2015-16ஆம் ஆண்டு கிடைத்தது போன்ற நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல விவசாயிகள் அதை பயிரிட்டு இருந்தனர். பிங் புழு தாக்கத்தால் பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டதால் பல விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மிளகாய்க்கு மாறியிருந்தனர். ஆனால் விலை இதுவரை இல்லாத வகையில் குவிண்டாலுக்கு ரூ.1,500-3000 என சரிந்தது. ஆந்திரப் பிரதேசம் எங்கும் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக உள்ளூர் செய்தித்தாள்களில் வெளிவந்தன (பெனுகொலானுவில் இனி மிளகாய் காரமில்லை எனும் கட்டுரையை பாருங்கள்).
“கடந்த 10 ஆண்டுகளில் முதலீட்டு விலை 30,000 ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாய் என உயர்ந்துவிட்டபோதிலும் விற்பனை விலையில் மாற்றமில்லை,” என்கிறார் அனைத்து இந்திய கிசான் சபா (AIKS) அமைப்பின் விஜயவாடாவைச் சேர்ந்த நாகாபோய்னா ரங்காராவ். குறைந்த விலை காரணமாக விவசாயிகள் பலரும் வேறு பயிருக்கு மாறிவிட்டனர். ஆந்திர பிரதேசம் முழுவதும் 2016-17 ஆண்டில் 4.65 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு மொத்த உற்பத்தியான 93 லட்சம் டன்கள் என்பது 2017-18ஆம் ஆண்டு 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தில் (குண்டூர் கொள்முதல் நிலையத்தின் செயலாளர் அளித்த தரவுப்படி ) மொத்த உற்பத்தி 50 லட்சம் டன்கள் என சுருங்கியது.
“கடந்தாண்டு ஏற்பட்ட விலைச் சரிவிற்கு அதிக உற்பத்தியும், குறைந்த தேவையும் காரணம் என்கின்றனர் தரகர்களும், அதிகாரிகளும். ஆனால் இந்தாண்டு உற்பத்தி குறைவு, தேவை அதிகம் என்று இருந்தபோதும் விலை அவ்வளவு உயரவில்லை,” என்கிறார் பிரகாசம் மாவட்டம் திரிபுராந்தகம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது முகமது காசிம். இவர் விலை சரிவை கண்டிக்கும் விதமாக குண்டூர் கொள்முதல் நிலையத்திற்கு முன்பு 2017 மார்ச் மாதம் தனது உற்பத்தியின் ஒரு பகுதியை தீயிட்டு எரித்துள்ளார்.
இழப்பிற்கு நடுவே விவசாயிகள் பயிரிட்டாலும், அவர்கள் பணியமர்த்தும் விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மிளகாய் சாகுபடிக்கு கூடுதல் உழைப்பு தேவைப்படுவதால் நான்கு சுற்றுகளாக விவசாயம் செய்கின்றனர் – முதலில் விதைகளை விதைக்கின்றனர், அடுத்தது களைகளை அகற்றுகின்றனர், அதன்பிறகு பயிர்களை அறுப்பது, மிளகாய்களை வகை பிரிப்பது. “முதல் இரண்டு சுற்று வேலைகளையும் பெண்களே செய்துவிடுவார்கள். பயிர் அறுப்பதை ஆண்கள் செய்வதால் ஒரு ஏக்கருக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாய் செலவாகும் – ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டு நாட்கள் மிளகாய் பறிக்க 300 தொழிலாளர்கள் வேலை செய்வார்கள்,” என்கிறார் கிருஷ்ணா மாவட்டம் கம்பலகுடம் மண்டலத்தின் மேடுரு கிராமத்தில் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள அல்துரி ராமி ரெட்டி.
திருவுரு மண்டலத்தின் அருகில் உள்ள கனுகாபடு கிராமத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரம் டிராக்டரில் பயணித்து ராமி ரெட்டி பண்ணைக்கு வேலைக்கு வரும் ஜனுபோய்னா அங்கலம்மா சொல்கிறார், “கூலியை உயர்த்துமாறு [ஆண்களுக்கு ரூ.250, பெண்களுக்கு ரூ.150 என வழங்காமல் சமமாக அளிக்க வேண்டும்] விவசாயிகளிடம் கேட்டால், அவர்கள் ஏற்கனவே கூடுதலாகவே தருவதாக வருத்தப்படுகின்றனர். மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்காததால் தாங்களே இழப்பில் உள்ளோம் என்கின்றனர். விவசாயிகளின் உற்பத்திக்கு லாபமளிக்கும் நல்ல விலையை அரசு உறுதிசெய்தால் ஒருவேளை எங்களுக்கும் கூலி உயரக் கூடும்.”
ஆசியாவின் மிகப்பெரிய குண்டூர் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள், வியாபாரிகள் அல்லது ஏற்றுமதியாளர்களிடையே 400க்கும் மேற்பட்ட கமிஷன் முகவர்கள் செயல்படுகின்றனர். விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு ரூ.100க்கும் அவர்களுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை தரகு கிடைக்கிறது. இது விவசாயிகள் பெறும் இறுதித் தொகையில் கழிக்கப்படுகிறது. “அவர்களில் பாதி பேரிடம் உரிமங்கள் கூட கிடையாது என்றாலும் அரசியல்வாதிகளுடனான தொடர்பில் செயல்படுகின்றனர். அதிகாரிகள், தரகர்கள், அரசியல்வாதிகளிடையே உள்ள இணக்கத்தால் விலை குறைவாக நிர்மாணிக்கப்படுகிறது. அன்றாடம் விவசாயிகளும் லட்சக்கணக்கான ரூபாய் இழக்கின்றனர்,” என்கிறார் AIKS அமைப்பைச் சேர்ந்த நாகபோய்னா ரங்காராவ். சங்கம். குழு முறை மற்றும் குறைந்த விலைக்கு எதிராக இந்த அமைப்பு போராடி வருகிறது.
2018, பிப்ரவரி 1ஆம் தேதி குண்டூர் மிளகாய் கொள்முதல் நிலையம் eNAM (மின்னணு தேசிய வேளாண் சந்தைகள்) டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. இதன் மூலம் வியாபாரிகள் நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் வாங்க முடியும். நாட்டின் 585 வேளாண் உற்பத்தி சந்தை குழு (ஏபிஎம்சி) சந்தைகளில் குண்டூர் நிலையமும் ஒன்றும். இங்கு இத்திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 2016, ஏப்ரல் 16ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. அனைத்து இந்திய மின்னணு வர்த்தக போர்டலாக திகழ்ந்து வேளாண் விளைபொருட்களுக்கான தேசிய இணையவழி ஒருங்கிணைந்த சந்தையாக இருந்து அனைத்து ஏபிஎம்சி மண்டிகளையும் இணைக்கும் நோக்கில் செயல்படுகிறது. இத்திட்டம் முறையாக செயல்பட்டால், வியாபாரிகளிடையே போட்டியை அதிகரிக்கும், உள்ளூர் தரகு முறைகளை ஒழிக்கும் என்பதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்கிறது அரசு.
டிஜிட்டல் மயமாக்கலுக்கு குண்டூர் தரகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் எந்த உற்பத்தி பொருளையும் வாங்க மறுக்கின்றனர். மாறாக, இந்தாண்டு மார்ச்சில், வாங்க மறுக்கும் தரகர்களை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். “எங்களால் சரக்குகளை திருப்பி எடுத்துச் செல்ல முடியாது. எனவே நாங்கள் சிலாகலுரிபேட் சாலையை [நிலையத்திற்கு அருகமையில் உள்ளது] மறித்தோம். சில காலங்களுக்கு eNAM முறையை நிறுத்தி வைக்குமாறு நிர்வாகத்திடம் வலியுறுத்தினோம்,” என்கிறார் காசிம்.
குண்டூரில் ஏப்ரல் மாதம் eNAM முறை மீண்டும் தொடங்கப்பட்டது. சந்தையின் செயலாளர் வெங்கடேஸ்வரா ரெட்டி கூறுகையில், “இந்த முறை மீண்டும் வந்துவிட்டது. ஆனால் எங்களால் இச்சந்தையுடன் நாட்டின் பிற சந்தைகளை இணைக்க முடியவில்லை,” இதனால் டிஜிட்டல் முறை மிளகாயின் விலையை உயர்த்தவில்லை. “சந்தைகள் இணைக்கப்பட்டால்தான் eNAM முறை பயன்தரும். இல்லாவிடில், ஆஃப்லைனில் வாங்கும் தரகர்களே இணைய வழியிலும் இப்போது வாங்குவார்கள்,” என்கிறார் ஏஐகேஎஸ் அமைப்பின் அனைத்து இந்திய துணைத் தலைவரான ஹைதராபாத்தைச் சேர்ந்த சரம்பல்லி மல்லா ரெட்டி. “மேலும் eNAM முறை என்பாது வேளாண்மையை நிறுவனப்படுத்தும் மற்றொரு முயற்சி. இதனால் பெருநிறுவனங்களுக்கு வேளாண் துறை திறக்கப்படுகிறது.” தரகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த விலை இப்போது பெருநிறுவனங்களில் பிடிக்கு மாறுகிறது, அவ்வளவுதான்.
“இதற்குப் பதிலாக அரசு குறைந்த ஆதரவு விலையை (எம்எஸ்பி) அறிவிக்க வேண்டும். இதுவே விவசாயிகளின் கோரிக்கை,” என்கிறார் மல்லா ரெட்டி. “விவசாயிகள் மீது தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்முறைகளை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக ஆந்திரப் பிரதேச மாநில கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் இந்திய கூட்டமைப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகள் இதில் ஈடுபட வேண்டும்,, குறிப்பாக eNAM ஐ செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு இல்லாத இடங்களில். 1991ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் காரணமாக இந்த முறைகள் ஒழிந்து போயின.” கடந்த காலங்களில் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. தரகு முகவர்களின் பங்கும் குறைவாக இருந்தது.
வாக்குறுதிகளுடன் அல்லது வாக்குறுதிகள் இல்லாமலோ அல்லது டிஜிட்டல் மயமாக்கலின் ஆபத்துகளோ இல்லாமலோ, ஹனிமி ரெட்டி போன்ற விவசாயிகள் தங்களின் உற்பத்தியை நல்ல விலைக்கு விற்பதற்கு கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது. அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பக் கூடாது.
தமிழில்: சவிதா