“பெருந்தொற்றும் ஊரடங்கும் எங்களை பெரிய அளவில் பாதித்திருக்கிறது. ஆனாலும் கோவிட் பாதித்த இந்த நகரத்தை எங்களின் சந்தோஷ கானங்களால் உற்சாகப்படுத்த வந்திருக்கிறோம்,” என்கிறார் கடய் தாஸ்.
பிர்பும் மாவட்டத்திலுள்ள சந்திப்பூர் கிராமத்தின் தராபித் பகுதியில் வசிக்கும் தாஸ் ஒரு தாக்கி மேளவாத்தியக்காரர். தாக்கி என்பது வங்காளத்தின் பாரம்பரிய மேள வாத்திய வகை. ஒவ்வொரு வருட துர்கா பூஜைக்கும் வங்காள கிராமங்களிலிருந்து எல்லா தாக்கி வாத்தியக்காரர்களும் கொல்கத்தாவின் சீல்தா ரயில் நிலையத்தில் கூடி விடுவார்கள். மேளச்சத்தம் மற்றும் கானங்கள் கூடி வாத்தியக்காரர்களின் சத்தங்களுடன் ஒன்றிணைந்து மொத்த ரயில் நிலையத்திலும் எதிரொலிக்கும்.
பங்குரா, பர்தமான், மல்டா, முர்ஷிதாபாத் மற்றும் நாடியா பகுதிகளிலிருந்து வரும் வாத்தியக்காரர்களின் திறமை, கூட்டத்தை ஈர்க்கவல்லது. சிறு பூஜைகளிலும் வாடகை வாங்கி வாத்தியக்காரர்கள் வாசிப்பதுண்டு. ஆனால் இந்த வருடத்தில் ஒன்றும் நடக்கவில்லை. எல்லா நாட்டுப்புற கலைஞர்களை போல அவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ரயில்கள் ஓடவில்லை. குறைந்த வாத்தியக்காரர்களே கொல்கத்தாவுக்கு வந்தார்கள். முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஷேர்ப்பூரிலிருந்து வரும் வது தாஸ் என்கிற தாக்கி வாத்தியக்காரர், அவரின் ஊர்ப்பக்கத்திலிருந்து சுமாராக 40 பேர் ஒரு சிறு பேருந்து பிடித்து 22,000 ரூபாய் கொடுத்து நெருக்கியடித்துக் கொண்டு கொல்கத்தாவுக்கு வந்ததாக சொன்னார். வழக்கமான வருடங்களில் ஈட்டும் வருமானத்தில் பாதியையே இந்த வருடம் கொல்கத்தாவில் தாக்கிகளால் ஈட்ட முடிந்தது. பூஜைகள் நடத்தியோர் பலரும் பணம் இல்லாததால் ரெகார்டு இசையை பயன்படுத்திக் கொண்டது கிராமப்புற இசைஞர்களுக்கு மிகப் பெரிய இழப்பை கொடுத்தது.
நான் சந்தித்த எல்லா தாக்கிக் குழுக்களுக்கும் துர்கா தேவியிடம் ஒரே ஒரு வேண்டுதல்தான் இருந்தது: பழைய சந்தோஷமான நாட்களை முடிந்தவரை சீக்கிரமாக கொண்டு வந்து விடு.
தமிழில்: ராஜசங்கீதன்