அவர் எழுபதுகளின் பிற்பகுதியில் இருக்கும் ஒரு ஸ்ட்ராபெரி விவசாயி. பழைய மஹாபலேஷ்வரில் உள்ள அவரது மூன்று ஏக்கர் நிலத்தில் தோண்டப்பட்ட கிணறு தூர்ந்துவிட்டது. அவரது மனைவியும் அவரும் பண்ணையை தொடர்ந்து நடத்த போராடி வருகின்றனர். அவர்களது ஆழ்துளைக் கிணறில் இன்னமும் தண்ணீர் இருப்பதால் அதை வைத்து சமாளித்து வருகின்றனர். ஆனால் அவர் அந்தக் கொஞ்சத்தையும் இலவசமாக அவரது நிலத்திற்கு அருகில் இருக்கும் கோயிலுடன் பகிர்ந்து கொள்கிறார். தீவிர வறட்சி அவரது விளைச்சலை பாதித்துள்ளது, அவரது தாராள குணத்தை அல்ல. அவரது பெயர் யூனுஸ் இஸ்மாயில் நலாபந்து - அவர் அந்த நீரை சதாரா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நதியின் மூலத்தில் இருக்கும் மிகப்பழமையான அடையாளமான கிருஷ்ணம்மை கோவிலுடன் ஆனந்தமாக பகிர்ந்து கொள்கிறார்.
"இது உண்மையில் என்னுடைய தண்ணீரா?" என்று அவர் கேட்கிறார். "இது எல்லாமே மேலே இருப்பவனுக்கு (இறைவனுக்கு) சொந்தமானது இல்லையா?". 70-களில் இருக்கும் அவரது மனைவி ரோஷன் நலாபந்தும் அதனை ஆமோதித்து தலை அசைக்கிறார். அவர்கள் இருவரும் ஸ்ட்ராபெரி பழங்களை சிறிய டப்பாக்களில் அடைத்து கொண்டிருந்தனர். "வர்த்தகர்கள் அதனை எடுத்துச் செல்வதற்கு வருவார்கள்", என்று கூறினார் ரோஷன். பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு விலை அதிகமாக இருக்கிறது ஆனால் மோசமான மகசூல் மற்றும் பயிரின் தரம் குறைவாக இருப்பதால் அதனை அது ஈடு செய்துவிடுகிறது. அவர்களது வேலையை நிறுத்தாமலே தண்ணீர் பற்றாக்குறை அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் பேசினர். ரோஷன் மட்டுமே ஒரு நிமிடம் வேலையை நிறுத்தி எங்களுக்கு தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கினார்.
நலாபந்துக்களின் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் வரும் போது தவிர மற்ற நேரங்களில் கிருஷ்ணம்மையின் குந்தா (கோவில் குளம்) காலியாகவே உள்ளது. இந்த வருடம் குளம் வறண்டுவிட்டது. அதிகமாக பார்வையிடப்படுகின்ற பஞ்சகங்கா கோவிலிருந்து சில நிமிட நடை பயண தூரத்திலேயே கிருஷ்ணம்மை இருக்கிறது, பஞ்சகங்கா என்பது கிருஷ்ணா, கொய்னா, வீணா, சாவித்திரி மற்றும் காயத்ரி ஆகிய நதிகளின் மூலத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அவற்றின் உண்மையான மூலமும் இங்கிருந்து வெகு தொலைவில் இல்லை. கிருஷ்ணமையே வை - மஹாபலேஷ்வர் பகுதியில் உள்ள மிகப் பழமையான கோவிலாகும். அழகான, சிறிய நதிக்கான தெய்வத்தின் கோவிலாக இது உள்ளூர் மக்களால் பார்க்கப்படுகிறது.








