"நாங்கள் மண்ணில் வாழ்பவர்கள், கான்கிரீட்கூட்டிலோ அல்லது உயரமான கட்டிடங்களுக்குள்ளோ அல்ல" என்கிறார் லக்ஷ்மி கெய்க்வாட். இப்போது, அவர் பழங்குடியினர் குக்கிராமமான பிரஜாபுர்பாதாவில் உள்ள இரண்டு ஏக்கர் விவசாயநிலத்திற்கு ஈடாகஒதுக்கப்பட்ட 269 சதுர அடி பிளாட்டில். 12ஆவது மாடியில் அமர்ந்திருக்கிறார்.
“எப்போதெல்லாம் நான் கீழே பார்க்கிறேனோ எனக்கு பயமாக உள்ளது. நான் கீழே விழுந்து விடுவேனோ எனத் தோன்றுகிறது. எங்களால் இங்கு இருக்க முடியவில்லை. என்னால் சுதந்திரமாக இங்கு நடக்கக் கூட முடியவில்லை" எனக் கண்ணீருடன் தெரிவித்தார் 75 வயதான லஷ்மி.
மும்பை குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அவருடைய சிறிய வீடு அந்தேரி நகரின் மேற்குப் பகுதியான சக்கலாவில் அமைந்துள்ளது. இது புறநகர் ஆரே பால் காலனியில் உள்ள பிரஜாபுர் பாதாவிலிருந்து 3.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த பால் காலனி 1949ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டது. இது கால்நடைகளுக்கான 3160 ஏக்கர் மேய்ச்சல் பகுதிகளுடன் பால் பண்ணையுடன் அமைந்துள்ளது. இங்கு 1990ஆம் ஆண்டிலிருந்து 27 ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்த 8000 மக்கள் வசித்து வருகின்றனர்.
மொத்தம் 300 பேர் உள்ள 70 கோக்னா ஆதிவாசிக் குடியிருப்புகளில் ஒரு குடும்பம் தான் கெய்க்வாட்டின் குடும்பம். மும்பை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏப்ரல் 2017ஆம் ஆண்டு 26 ஹெக்டேர் பரப்பளவில் கூரைகள் மற்றும் கிடங்குகள் அமைக்க அவர்களது நிலத்தை எடுத்துக் கொண்டபின் அவர்கள் இங்கு தஞ்சமடைந்தனர்.
ஆரேவில் இருந்த வந்த 100 குடும்பங்களுடன் 70 குடும்பங்கள் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் 16ஆவது தளத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 1995ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசால் தொடங்கப்பட்ட குடிசை மாற்று வாரியத் திட்டம் சேரிகளில் இருந்து வரும் மக்களுக்கு 250-300 சதுர அடியில் வீடுகளை ஒதுக்கீடு செய்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஆரேவில் கட்டட இடிப்பு நடைபெற்றபோது சரிபுத் நகர் மற்றும் பிரஜபுத்பட பகுதியில் வசித்த மக்களுக்கு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன. ”ஆனால் நாங்கள் அங்கு செல்ல தயாராக இருக்கவில்லை. எனவே காவல்துறையினர் எங்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்,” என்கிறார் யூனியன் வங்கியில் மேலாளராகப் பணியாற்றும் 35 வயதான சஞ்சய் பதாவி. கோக்னா ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த அவரது குடும்பம் வீட்டுத்தோட்டம் அமைத்திருந்த தங்களது 1.5 ஏக்கர் நிலத்தை இழந்தது. தற்போது அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் 5ஆவது தளத்தில் அதையெல்லாம் செய்ய முடியாது. "எங்களுக்கு வாழ்க்கை இங்கு மிகவும் கடினமாக உள்ளது. நாங்கள் ஒரு பறவையைப் போல இயற்கையுடன் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம்" எனத் தெரிவிக்கிறார் சஞ்சய். அவர் தனது பெற்றோர், மனைவி மற்றும் ஒரு வயதேயான மகளுடன் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளார்.
பிரஜபுத்படவிலிருந்து மக்கள் வெளியேற மறுப்பு தெரிவித்தபோது அவர்களுக்கு 72 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டது. ஒடுங்கிய ஒரு அலுமினியப் பாத்திரத்தைக் காட்டி ஏப்ரல் 28ஆம் தேதி நடந்ததை கண் முன் விவரிக்கிறார் லஷ்மி. ”காவலர்கள் இதை தூக்கி எறிந்தார்கள். அவர்கள் கோடாரி, அரிவாள், கலப்பை உள்ளிட்ட எனது விவசாயக் கருவிகளை தூக்கி எறிந்தார்கள். அவற்றை நான் பல வருடங்களாக பாதுகாத்து வந்திருக்கிறேன். அங்கு கும்பலாகக் காவலர்களும், மெய்க்காப்பாளர்களும் இருந்தனர். புல்டோசர்களும் இருந்தன. அன்றைய தினம் மிகுந்த குழப்பமானதாக இருந்தது. நான் சத்தமாக கத்தினேன். அழுதேன். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் என் கண் முன்னே என்னுடைய வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர்.”
கெய்க்வாட் தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு பல்கார் மாவட்டத்தில் உள்ள தஹனு தாலுக்காவிலிருந்து பிரஜபுர்படவிற்கு குடி புகுந்தார். அவர் தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை விவசாயம் மற்றும் மரங்களுக்கு மத்தியில் செலவிட்டதால் இந்த மறுகுடியமர்வு அவருக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் மெட்ரோ ரயில் கட்டுமானம் குறித்த முன்மொழிவு 2014ஆம் ஆண்டு செய்திகளில் வெளியானபோது அவரது ரத்த அழுத்தத்தின் அளவு திடீரென அதிகரித்தது. அவரது மிகச்சிறிய குடியிருப்பிற்குள் அவரது செயல்பாடுகள் சுருங்கிப் போய்விட்டதால் அவரது கணுக்கால்கள் வீக்கமடைந்துள்ளன.
லக்ஷ்மியின் கணவர் ராம்ஜி வயது தொடர்பான நோய்களால் 2010இல் உயிரிழந்தார். அவர்களின் பரம்பரை நிலத்தில் விவசாயம் செய்வது மட்டுமே குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்தது. லக்ஷ்மியின் மூன்று மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. தற்போது திருமணமாகாத மகள் சங்கீதாவுடன் வசித்து வருகிறார். அவரது இரண்டு மகன்களும் அவர்களது குடும்பங்களும் அதே அடுக்குமாடி கட்டடத்தின் வேறு குடியிருப்பில் வசித்து வந்தனர்.
அவர்களுக்கு விவசாயம்தான் எல்லாம். 40 வயதான சங்கீதா கூறுகையில், “நானும், என் தாயாரும் விவசாயம் செய்து அதில் விளைந்த விளைச்சல் மூலம் தான் வாழ்ந்து வந்தோம் அனைவரும் ஒன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளோம். அதனால், வேறு எந்த வேலையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை” என்றார்.
அவர்களின் குடும்பத்தின் இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் 500 வாழை மரங்கள் பயிரிடப்பட்டிருந்தன. இவற்றின் மூலம், மாதம்தோறும் சுமார் 150 மரங்கள் அறுவடைக்குத் தயாராகின. அதன்மூலம், சுமார் 1,800 டஜன் வாழைப்பழங்கள் காய்களாகவும், பழமாகவும் கிடைக்கும். “சிறு வியாபாரிகள் மற்றும் பிற வியாபாரிகள் எங்களுக்கு ஒரு டஜனுக்குரூ. 12 முதல் 15 வரை கொடுப்பார்கள். இதன்மூலம், மாதம் ரூ. 27,000 கிடைக்கும்” என்றார் சங்கீதா.
மேலும், பருவ காலங்களில் 10 முதல் 15 கிலோ வெள்ளரி, கீரை மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகளை பயிரிடுவது மற்றும் வாழை இலைகளை விற்பனை செய்வதன் மூலம் கூடுதலாக மாதம் ரூ. 1,000 கிடைத்து வந்தது. அவர்களிடமிருந்த 20 கோழிகளின் முட்டைகளை வழக்கமான வாடிக்கையாளருக்கு விற்பனை செய்வதன் மூலம் மேலும் ரூ. 3,000 கிடைத்தன. “இங்கே வருவதற்கு முன்பே நாங்கள் அனைத்தையும் விற்றுவிட்டோம்” என்கிறார் சங்கீதா.
அவர்களின் பூர்வீக இடத்தி்லிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, குடும்பத்தின் வருமானம் வெகுவாக குறைந்தது. லக்ஷ்மியின் மூத்த மகனான லடாக் (48 வயது) மட்டும் கட்டுமான வேலைகளுக்கு செல்கிறார். அவருக்கு தினசரி ஊதியமாக ரூ. 300 கிடைக்கும். அவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் திருமணமானவர். மற்றொரு மகள் நகை பட்டறையில் பணிபுரிகிறார். மற்றவர்கள் பள்ளி படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். லக்ஷ்மியின் இளைய மகன் ஜானு (38 வயது) மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் இல்லத்தரசியான அவரது மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்டுமானத் தளங்களில் மாதம் 15 நாட்கள் பணிபுரிகிறார். “நாங்கள் எங்கள் சேமிப்பில் வாழ்கிறோம்” என்கிறார் லக்ஷ்மி. “இந்த வயதில் எனக்கு யார் வேலை தரப் போகிறார்கள்? நான் என்ன செய்ய முடியும்? நான் எப்படி உயிர் வாழ்வது? என அவர் கேள்வி எழுப்புகிறார்.
பிரஜாபுர்பாதாவிலிருந்து இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் பருவகாலங்களில் பயிரிடும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தேரி மற்றும் ஜோகேஸ்வரி ஆகியப் பகுதிகளின் அருகிலுள்ள சந்தைகளில் விற்பனை செய்து வரும் வருமானத்தை நம்பியிருந்தனர். அவர்கள் தங்களது சொந்தப் பயன்பாட்டுக்காக நெல் உள்ளிட்டப் பயிர்களை பயிரிட்டு வந்தனர். குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவு ஆதாரங்களை இழந்தது மட்டுமின்றி, குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பிற்கு மாதம்தோறும் பராமரிப்பு கட்டணமாக ஒரு பிளாட்டிற்கு ரூ. 1,000 வழங்க வேண்டும்.
கோக்னா குடும்பங்களை சேர்ந்த யாருக்கும் பண இழப்பீடு அல்லது திட்டத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற சான்றிதழோ கிடைக்கவில்லை என்கிறார் படாவி. மகாராஷ்டிர அரசின் திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள், மறுவாழ்வு சட்டம், 1999இன் படி, பண இழப்பீடு பெற வேண்டும். மேலும், திட்டத்தால் பாதிக்கப்பட்டவர் என்றச் சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதன்மூலம், குடும்ப உறுப்பினர் ஒதுக்கீட்டின் கீழ் வேலை பெற முடியும்.
பிரஜாபுர்பாதாவின் முதல் பட்டதாரியான படாவி கூறுகையில், “இடிக்கப்பட்ட நிலத்திற்காக எந்த மீள்குடியேற்றத்தையும், அழிக்கப்பட்ட மரங்களுக்காக எந்த நிதியும் நாங்கள் பெறவில்லை. அவர்கள் இழப்பீடு தருவதாக வாய்மொழி உறுதியளித்தனர,” என்கிறார். மகாராஷ்டிர அரசாங்கத்தின் குறை தீர்க்கும் மையத்திற்கு புகார் அளித்தும், அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
மேலும், “நாங்கள் குடிசைவாசிகள் அல்ல. நாங்கள் ஆரே காட்டின் ஆதிவாசிகள். பால் காலனி அமைக்கப்படாத காலத்தில் எங்கள் முன்னோர்கள் இங்கு வாழ்ந்தனர். வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் பழங்குடியினர் மற்றும் எங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புற போக்குவரத்து திட்டக் கொள்கை 2000-ல் கூட எங்களுக்கான தனி வளர்ச்சித் திட்டத்தை மும்பை மெட்ரோ நிர்வாகம் பரிசீலனை செய்யவில்லை. எங்களுக்கான இழப்பீடு தர வேண்டுமானால், வசிப்பிட சான்றிதழ் மற்றும் நிலத்திற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மும்பை மெட்ரோ நிர்வாகம் தெரிவிக்கிறது," எனக் கூறினார்.
இதுதொடர்பாக, PARI-லிருந்து தொடர்ச்சியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மும்பை மெட்ரோ நிர்வாகம் பதிலளிப்பதாக உறுதியளித்தன. இருப்பினும் வாரங்கள் கழிந்தும் பதில் இடைநிறுத்தப்பட்டது. பட சமூகத்தினர் தங்கள் பூர்வீக அந்தஸ்தை நிரூபிக்கும் ஆவணங்கள் இல்லை என்று மும்பை மெட்ரோ நிர்வாகம் ஒரு செய்தி அறிக்கை யில் கூறியுள்ளது. “நிலம் அவர்கள் வசம் இருப்பதை நிரூபிக்கும் ஆவணங்களை அவர்களிடம் கேட்டபோது, அவர்களால் அதை சமர்ப்பிக்க முடியவில்லை. வனஉரிமைச் சட்டம் வழிகாட்டுதல்கள் பற்றி மிகத் தெளிவாக உள்ளது. அவர்களின் கட்டமைப்புகள் அரசாங்க நிலத்தில் இருந்தன. நாங்கள் அதைக் காலி செய்ய வேண்டியிருந்தது” என்று மெட்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாக அறிக்கையில் மேற்கோளிடப்பட்டுள்ளது.
ஆரே மக்கள் தங்கள் வெளியேற்றம் மற்றும் மறுகுடியமர்வை அபத்தமாக கருதுகின்றனர். இடிக்கப்பட்ட பிரஜாபுர்பாதாவில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெல்டிபாடாவில் வசிக்கும் பெஸ்ட் பேருந்துகளின் பராமரிப்புப் பணியாளர் பிரகாஷ்போயர், 46, கூறுகையில், “நாங்கள் ஆதிவாசிகள். இந்த நிலமே எங்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக ஆதாரம். அந்த உயரமான கட்டடங்களில் விவசாயம் செய்ய முடியுமா? மண்ணும் மரமும் இல்லாமல் எங்களால் வாழ முடியாது." என்கிறார்.
2016-ல் நீதிமன்றத்தின் அனுமதியின்றி 27 ஆதிவாசிகளின் குக்கிராமங்கைளில் திட்டத்தை செயல்படுத்த மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. திட்டத்தை செயல்படுத்த தகுதியான இடங்களை மதிப்பிடுவதற்கான கணக்கெடுப்பை நடத்த மாநகராட்சியிடம் இருந்து குக்கிராமங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. “மும்பை மெட்ரோ, உயர்நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளது. ஆதிவாசிகளின் உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன” என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், மும்பை வனசக்தி தொண்டு நிறுவனத்தின் இயக்குநருமான ஸ்டாலின் தயானந்த். அக்டோபர் 2017 இல், அவரது அமைப்பானது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில் ஆரே ஒரு காடு என்றும், அங்கு எந்த வளர்ச்சி நடவடிக்கைகளும் நடைபெறக் கூடாது என்றும், அதன் ஆதிவாசிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவின் முடிவுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.
தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர படாவி திட்டமிட்டுள்ளார். “இதன்மூலம், அரசு எங்கள் மீது கவனம் செலுத்தும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, லஷ்மியின்
ஜன்னலில் இருந்து மற்ற உயரமான கட்டடங்களையும், ஏற்கெனவே இயங்கிவ ரும் மெட்ரோ - 1-ஐயும் பார்த்துக்
கொண்டிருக்கிறார். தன் 20 கோழிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த திறந்தவெளி அருகில்
இல்லை. ஏழு குடியிருப்புகளுக்கும் பொதுவான ஒரு பாதை மட்டுமே உள்ளது. விவசாயம் செய்து
வந்த அவரின் ஜன்னல் ஓரத்தில் தற்போது சிறிய பானையில் செம்பருத்தி மற்றும் பச்சை சாமை
மட்டுமே உள்ளது.
கூடுதல் செய்தியாளராக அனுஷ்கா ஜெயினும் இயங்கினார்.
தமிழில்: அன்பில் ராம்