மும்பையில் நான் வளர்ந்த குடிசைப் பகுதிக்கு அருகே இருக்கும் மளிகைக் கடை தினமும் மாலை 6 மணி அளவில் நிரம்பியிருக்கும். அது 2000ம் ஆண்டு. அந்த பெரிய கடையில், கால் கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கு மிளகாய்த் தூள், உப்பு, இரண்டு ரூபாய்க்கு சமையல் எண்ணெய், 25 காசுக்கும் 50 காசுக்கும் கடுகு, மஞ்சள் தூள், ஒன்றிரண்டு வெங்காயம், கால் கிலோ பருப்பு, கோதுமை மாவு, அடுப்புக்கான மண்ணெண்ணெய் கொஞ்சம் ஆகியவற்றை வாங்குவதற்காக சிறு வாடிக்கையாளர்கள் குவிந்திருப்பார்கள்.
மக்கள் தங்களின் தினக்கூலியான 150 ரூபாயில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பொருட்களை வாங்குவார்கள். அன்றைய நாட்களில் 25 காசு, 50 காசு நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. அந்தக் கடையில் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும், 24 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பும் வாங்க முடியும். பெரும்பாலும் கால் கிலோ அல்லது அரைக் கிலோ தான் வாங்குவார்கள். ஏன் நம்முடைய ரேஷன் கடைகள் சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவற்றை மட்டுமே தருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. ஏனைய பொருட்களை நாங்கள் தனியார் மளிகைக் கடையில்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
காலை 8 மணி முதல் இடையறாது உழைத்துக் களைத்த அந்த வாடிக்கையாளர்கள், 3-4 பேர்களுக்கான பசியைப் போக்க, ரூ.70-80க்கு மளிகைப் பொருட்களை வாங்குவார்கள். மாதக் கடைசியில், வீட்டு வாடகை, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்ற செலவுகள் போக, மீதமுள்ள தொகையை – பெரும்பாலும் ரூ.2000க்கு குறைவாக – கிராமத்தில் இருக்கும் தங்கள் குடும்பத்திற்கு, அஞ்சலகம் மூலமாகவோ அல்லது தெரிந்தவர்கள் ஊருக்குப் போகும்போது கொடுத்தனுப்பவோ செய்வார்கள்.
அன்றாடம் சம்பாதிக்கவும், அன்றாடம் செலவிடவுமாக அவர்களது வாழ்க்கை கழியும். எங்களுடைய வீட்டிற்கும் பச்சை மிளகாய், எலுமிச்சை விற்பனை செய்து கிடைக்கும் அன்றாட சம்பாத்தியம்தான். என் அம்மா மிளகாய்த் தூள், உப்பு, அரிசி போன்றவற்றை வாங்க தினமும் என்னை கடைக்கு அனுப்புவாள். கடையில் இருக்கும் வயதான பாட்டி, “உனக்கு என்ன வேணும்?” என்று என்னைப் பார்த்து கேட்கும் வரைக்கும் நான் நின்று கொண்டே இருப்பேன்.
ரேஷன் கடைக்கு வரும் பெரும்பாலான முகங்கள் எனக்குப் பரிச்சயமானவை. எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொள்வோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு தெரிந்த ஒரே மொழியான மராத்தி பேசாதவர்கள். அவர்கள் சினிமாவில் பேசுவதைப் போல இந்தி பேசுவார்கள். அவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் இல்லை; வெளி மாநிலத்தவர்கள் என்பது எனக்கு அப்போது தெரியாது.
நாங்கள் 10க்கு 10 அளவுள்ள ஒண்டிக்குடித்தனத்தில் இருந்தோம். அதைவிடவும் சிறிய, அடுக்கி வைக்கப்பட்ட குழாய்களைப் போன்ற தங்குமிடங்கள் இப்போது நகரத்தில் பெருகிவிட்டன. இத்தகைய அறைகளில் 10-12 நபர்கள், பெரும்பாலும் ஆண்கள் தங்கியிருப்பார்கள். சில இடங்களில் இந்த சிறிய அறைகளில் குடும்பமாகவும் தங்கியிருப்பார்கள்.


