ஏப்ரல் 1996 அன்று, மஜல்கான் தாலுகாவில் உள்ள பீம் நகருக்குச் சென்று முக்தாபாய் ஜாதவ் பாடிய ஓவியை நாங்கள் கேட்டோம். அடுத்த சில மணி நேரங்களில், அந்த கிராமத்தில் வசித்த பல பெண்களின் பாடல்களை பதிவு செய்தோம்.
“முக்தாபாய் வீடு எங்கிருக்கிறது?” என நாங்கள் கேட்டதும், 10-க்கு 15 அடியுள்ள, ஒரு பக்கம் தகரத்தால் மூடப்பட்ட சிறிய அறையை சுட்டிக் காட்டுகிறார் அந்தப் பெண்மணி. வேலியின் சிறிய இடைவெளியில் மூடப்படாத வாசலை நாங்கள் பார்த்தோம். அதிலிருந்து வயதான பெண்மணி வெளியே வந்தார்.
தற்போது, சரியாக 21 வருடங்கள் கழித்து, ஏப்ரல் 2017-ல் மீண்டும் நான் பீம் நகர் வந்துள்ளேன். மெதுவாக கதவைத் திறந்த முக்தாபாய், “யா தேவா!” என அழைத்து எங்களை உள்ளே வருமாறு கூறினார். நீல நிற சேலை உடுத்தியிருந்த அவர், கழுத்தைச் சுற்றி பெரிய பாசி மணிகளும், நெற்றியில் கருப்பு மற்றும் வெள்ளை வண்ண சாந்தையும் சூடியிருந்தார். இன்றும் கருப்பு நிறமாக இருக்கும் முடி, அவரது உண்மையான வயதை மறைத்தது. தோராயமாக 60 வயதிற்குள் இருக்கும் முக்தாபாய், குனிந்து “வாருங்கள், கடவுளே” என மறுபடியும் எங்களை வரவேற்றார்.
அவரின் தகரக் கொட்டகை முன்பு இரண்டு குழிகள் இருக்கின்றன. அவை தண்ணீரை சேமித்து வைப்பதற்காக இருக்கக்கூடும். வீட்டின் ஓரமாக ஓடிக்கொண்டிருந்த சாக்கடையை கவனமாக தாண்டி வீட்டிற்குள் சென்றோம். முக்தாபாயின் சிறிய வீட்டில் பொருட்கள் நிரம்பியிருக்கின்றன. பாபாசாகேப் அம்பேத்கர் புகைப்படம் தொலைக்காட்சிக்கு அடுத்து வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொலைக்காட்சியில் ஆன்மீக ஆஸ்தா சேனல் ஓடிக்கொண்டிருக்கிறது. அம்பேகர் மற்றும் அவர் கூறிய 22 உறுதிமொழிகள் (விவரக் குறிப்பை பார்க்கவும்) அடங்கிய மற்றொரு புகைப்படம் சுவரை அலங்கரிக்கிறது. அதற்கருகிலேயே துல்ஜா பவானி கடவுளின் புகைப்படம் உள்ளது. சைலானி பாபா, பிரஜபிதா பிரம்ம குமாரி போன்ற மதத் தலைவர்கள் மற்றும் கடவுள்களின் பல புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் அவரது வீட்டின் சுவரை அலங்கரிக்கின்றன. இது போதாதென்று அவரது சிறிய பூஜை அறையில் பல கடவுள்கள் இடம் பிடித்துள்ளார்கள். இப்படி கடவுளின் நெரிசலுக்கு இடையே எங்கள் நால்வரையும் தாராளமாக உள்ளே அமர வைத்தார் முக்தாபாய்.



