18 வயதில் 12ஆம் வகுப்பு முடித்த பிறகு பண்டலா லக்‌ஷ்மணா ராவ் கல்வியைத் தொடர முடியவில்லை. “என்னிடம் சாதிச் சான்றிதழ் கேட்டார்கள் [அஸ்வராவ்பேடா நகர பட்டப் படிப்பு கல்லூரியில் சேர்வதற்கு]. என்னிடம் இல்லை என்பதால் படிப்பை பின்தொடர முடியாமல் போனது,” என்கிறார் அவர்.

இப்போது 23 வயதாகும் லக்‌ஷ்மனா தனது குடும்பத்தின் ஒரு ஏக்கர் பொது நிலத்தில் [வன நிலத்தை விளைச்சலுக்கு பயன்படுத்துவது] வேலை இல்லாதபோது நயகுலகுடம் குக்கிராமத்தில் விவசாய தொழிலாளியாக வேலை செய்கிறார்.

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம் டி. நரசபுரம், சிந்தலபுடி மண்டலங்களைச் சேர்ந்த 30 கிராமங்களில் வசிக்கும் நாயக்போட் பழங்குடியினருக்கு சொல்வதற்கு என இதுபோன்ற பல கதைகள் உள்ளன. 18 வயதாகும் குசினி சீதா மற்றும் குசினி நாகமணியும் அவர்களின் குக்கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மர்ரிகுடேமில் பழங்குடியின உறைவிட பள்ளியில் பட்டியலின பழங்குடியினருக்கான சான்றிதழ் கேட்டதால் 5ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். “எங்களால் மேற்கொண்டு படிக்க முடியாது,” எனும் நாகமணி “எங்களுக்கு திருமணமாகிவிட்டது. நாங்கள் பொது நிலத்தில் அல்லது பிறருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்ய வேண்டும்,” என்கிறார்.

நாயகுலகுடம் குக்கிராமத்தில் (பழங்குடியினரால் பெயரிடப்பட்டது) வசிக்கும் சுமார் 100 நாயக்போட் குடும்பங்கள் அருகில் உள்ள வனப்பகுதியில் நெல், ரஜ்மா போன்ற பயிர்களை பயிரிடுகின்றனர். வாழ்வாதாரத்திற்கு வனத்தை நம்பியுள்ள இவர்கள் தேன்களை சேகரிக்கின்றனர் அல்லது முடைவளிமா என்னும் விலங்கினத்தை (உணவிற்காக) வேட்டையாடுகின்றனர், அவற்றை டி நரசபுரம் நகரில் உள்ள வாரச் சந்தையில் விற்கின்றனர்.

PHOTO • Rahul Maganti

சாதிச் சான்றிதழ்கள் இல்லாததால், பந்தலா லக்‌ஷ்மணா ராவ் (இடது), அல்லம் சந்தர் ராவ் (வலது) ஆகியோர் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

“நடுநிலைப் பள்ளிகளில் கல்வி உதவித்தொகைக்கு சாதிச் சான்றிதழ் கேட்பதால் தொடக்கப் பள்ளிக்கு பிறகு பெரும்பாலான மாணவர்கள் இடைநின்று விடுகின்றனர். கல்வி உதவித்தொகை இல்லாமல் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க முடியாது,” என்கிறார் பள்ளியிலிருந்து பாதியில் இடைநின்ற 25 வயது நாகராஜூ குசினி. “[உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து] இடைநின்று கிராமத்திற்கு திரும்பியதும் பலருக்கும் திருமணமாகிவிடுகிறது.”

நாயகுலகுடம் பகுதி குழந்தைகள் 5ஆம் வகுப்பு வரை உள்ளூர் அரசு நிர்வாகத்தின் மண்டல் பரிஷத் தொடக்கப் பள்ளியில் படிக்க முடியும். பிறகு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மரகவனிகுடம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு நடந்து அல்லது மிதிவண்டியில் செல்ல வேண்டும். அல்லது மர்ரிகுடமில் உள்ள பழங்குடியின உறைவிடப் பள்ளிக்கு செல்ல வேண்டும். இரு மண்டலங்களிலும் உள்ள ஒரே உறைவிட பள்ளியில் 180-200 மாணவர்கள் (சிறுவர், சிறுமியருக்கு தனித்தனி விடுதி) 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கலாம். இங்கு சேர்வதற்கு நாயக்போட்சின் இத்தலைமுறையினரிடம் இல்லாத சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே ஏதேனும் இடம் காலியிருந்தால், பள்ளி அதிகாரிகளின் விருப்பத்தின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

பழங்குடியின நலத்துறையிடமிருந்து கல்வி உதவித்தொகையாக 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மாதம் ரூ.100-150 கிடைக்கிறது. கல்லூரிகளில் பட்டம் பயில ஆண்டிற்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது. இதற்கும் சாதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது. நாயக்போட் சிறுவர்கள் 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டாலும் கூட அதற்கு பிறகு படிப்பது கடினமாகிவிடுகிறது.

PHOTO • Rahul Maganti

நாயகுலகுடம் பகுதியில் உள்ள மண்டல் பரிஷத் தொடக்கப் பள்ளியில் (வலது) மாணவர்கள் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்கின்றனர்

நாயக்போட் பழங்குடியைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் சாதி சான்றிதழ் இல்லாமல் கடந்த சில ஆண்டுகளில் படிப்பைவிட்டு இடைநின்றிருப்பதாக நாயகுலகுடமில் நன்கு படித்தவர் என்கிறார் கிராமத்தினரால் அறியப்படும் அல்லம் மரேசு. “அரசு சாரா பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்கூட பழங்குடியினருக்கான கட்டாய பட்டியலின சான்றிதழ் இல்லாத காரணத்தால் இடஒதுக்கீட்டை பெற முடிவதில்லை.”

நாயகுலகுடமிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஸ்வராவ்பேட்டா நகரில் (இப்போது தெலுங்கானாவின் கொத்தகுடம் மாவட்டம்) உள்ள தனியார் கல்லூரியில் 27 வயது மரேசு வணிகவியல் பட்டம் பெற்றவர். அவர் பகலில் கல்லூரிக்கும், இரவில் காவலாளி, பெட்ரோல் பம்பில் வேலை, உணவகத்தில் பரிமாறுபவர் என பல வேலைகளை செய்துள்ளார். “பட்டியலின சான்றிதழ் தர இயலாததால் எனக்கு கிரிஜன் நல விடுதியில் சேர முடியவில்லை, கல்வி உதவித்தொகையும் பெற முடியவில்லை. எனவே நான் கடினமாக உழைத்து கல்விக் கட்டணங்கள், பிற கட்டணங்களை செலுத்தினேன்,” என்கிறார் அவர். மரேசு தற்போது கட்டுமான பணியாளராக இருக்கிறார். ஒரு பழங்குடியின சான்றிதழ் இருந்தால் அரசு இடஒதுக்கீட்டில் வேலை கிடைத்துவிடும்.

பத்தாண்டுகள் முன்புகூட மண்டல வருவாய் அலுவலரிடம் நாயக்போட்ஸ் பழங்குடியினர் என சாதி சான்றிதழ் பெற்று வந்தனர்.ஆனால் சிந்தலபுடியின் மண்டல் வருவாய் அலுவலர் மைக்கல் ராஜூ பேசுகையில், நாயக்போட்சின் பழங்குடியின அந்தஸ்து எப்போதும் கேள்விக்குறியது. 2011ஆம் ஆண்டு அரசு உத்தரவு (ஜி. ஓ) அவர்களை பழங்குடியினர் இல்லை என்று சொல்கிறது. “சமவெளிகளில் [ஒதுக்கப்படாத பகுதிகள்] வாழும் நாயக்போட்ஸ்கள் பழங்குடிகளாக கருத முடியாது என அரசு ஜி.ஓ பிறப்பித்துள்ளது. இதனால் அவர்கள் பட்டியலின சான்றிதழ் பெறுவதற்கான தகுதியை இழக்கின்றனர்,” என்கிறார் அவர்.

2014 தேர்தல்களுக்கு முன் சில நாயக்போட்ஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளனர் – அவர்களில் பெரும்பாலானோர் முதன்மை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள். “உள்ளூர் அமைப்பில் சில இடங்கள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படுவதால் போட்டியிடுவோருக்கு சான்றிதழ் தேவைப்படுகிறது. இதனால் சிலருக்கு மட்டும் சாதிச் சான்றிதழ் கொடுக்கப்பட்டது, ” என்கிறார் நாயகுலகுடமின் விவசாய தொழிலாளியான புஜங்கா ராவ்.

PHOTO • Rahul Maganti

குசின் ரமுலம்மா, குசினி சீதா, குசினி நாகமணி (இடமிருந்து வலம்) என அனைவரும் 5ஆம் வகுப்புடன் பள்ளி படிப்பிலிருந்து இடைநின்றுவிட்டு வனத்தில் உள்ள குடும்பத்தின் பொது நிலத்தில் அல்லது விவசாய தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்

நாயக்போட் (அல்லது நாயக்) சமூகத்தினரில் சுமார் 12,000 பேர் ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களில் வசிப்பதாக உள்ளூர் செயற்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட பகுதிகளுக்குள் வசிக்கும் நாயக்போட்ஸ்களை மட்டுமே மாநில அரசு ஐந்தாவது பட்டியலினமான பழங்குடியினராக கருதுகிறது. அரசியமைப்பின் ஐந்தாவது பட்டியலில் இந்தியா முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பழங்குடியின மக்கள் அங்கீகரிக்கப்பட்டு, பழங்குடியினருக்கான கலாச்சார அடையாளங்களை பாதுகாத்து வருகின்றனர். டி நரசபுரம், சிந்தலபுடி மண்டலங்களில் மிகவும் குறைந்த சதவீத பழங்குடியினரே வசிப்பதால் ஐந்தாவது அட்டவணை பகுதிகளில் வரவில்லை. எனினும் அருகில் உள்ள ஜீலுகுமில்லி, புட்டயாகுடம் மண்டலங்கள் ஐந்தாவது அட்டவணையில் வருகின்றனர். அங்குள்ள நாயக்போட்ஸ்களுக்கு பட்டியலின சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

“இது அரசியலமைப்பின் 14 வது பிரிவின் கீழ் (சட்டத்திற்கு முன்பு சமம்) மீறலாகும், பட்டியலின பகுதிகள், பட்டியலற்ற பகுதிகள் என்ற பெயரில் ஒரே சமூக மக்களிடம் அரசு பாகுபாடு காட்டுகிறது,”என்கிறார் ஆந்திர பிரதேச விவசாய விருதிதருலா [வேளாண்மை மற்றும் இணை தொழில்கள்] சங்கத்தின் செயற்பாட்டாளரான ஜூவ்வலா பாப்ஜி. “இவர்கள் பழங்குடிகளாக கருதப்படுவதில்லை. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் (எஸ்சி) அல்லது மிகவும் பிற்படுத்தட்ட வகுப்பு (ஓபிசி) என எந்த பிரிவிலும் சேர்க்கப்படுவதில்லை. பிறகு அவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள்?”

ஆந்திர பல்கலைக்கழக மானுடவியலாளர் அளித்த அறிக்கையில், அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள ராஜ் கோண்டுகள், தெலுங்கானாவின் வாராங்கல் மாவட்ட நாயக்குகள் கடலோர ஆந்திர மாவட்டங்களான மேற்கு கோதாவரி, கிருஷ்ணாவில் வாழும் நாயக்போட்ஸ் பழங்குடியினரும் ஒரே குழுவினர் என்று சொல்கிறது. “ராஜ் கோண்டுகள், நாயக்குகள் பட்டியலின சான்றிதழுக்கு தகுதியுள்ளவர்கள் என்றால், எங்களுக்கு ஏன் அது கொடுக்கப்படுவதில்லை?” என கேட்கிறார் புஜங்கா ராவ்.

PHOTO • Rahul Maganti

நாயக்போட்ஸ்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வனங்களைச் சார்ந்துள்ளனர். வலது: பந்தலா மங்கா ராவ், குசினி சீத்தய்யா தாங்கள் செய்யும் மூங்கில் கூரைகளை காட்டுகின்றனர்

கல்வியின் மீதான நேரடி தாக்கத்தைத் தாண்டி பட்டியலின சான்றிதழ் இல்லாததால் அரசியல் நகர்வுகள், வளர்ச்சி போன்றவற்றிலும் நாயக்போட்ஸ் விலகியே உள்ளனர். “பட்டியலினத்தோருக்கு ஒதுக்கப்படும் பிரிவின் கீழ் நாங்கள் போட்டியிட முடியாது,” என்கிறார் ராவ். “ஒருங்கிணைக்கப்பட்ட பழங்குடியின வளர்ச்சி முகமையிலிருந்து எங்களுக்கு ஒரு பைசா கிடைத்தது கிடையாது, ஆனால் பிற பழங்குடியின குழுக்கள் விவசாய உதவிகள், கால்நடைகள் வாங்குவதற்கு, கடைகள் அமைப்பதற்கு, கடன் உதவிகள் பெறுகின்றனர்.”

தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் பிரிவினருக்கான நலத்திட்டங்களும் நாயக்போட்ஸ்களுக்கு கிடைப்பதில்லை. “பிற பழங்குடியினருக்கு வழங்கப்படும் வீட்டு வசதி திட்டத்திற்கான கடன்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை. அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டால் அவர்களின் பதிவேட்டின்படி நாங்கள் பழங்குடிகள் இல்லை என்கின்றனர். சந்திரன்னா பீமா திட்டத்திற்கான பயனாளிகளை கண்டறிய அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், எங்களிடம் சாதி சான்றிதழ் இல்லை என்பதால் எங்கள் பெயரை சேர்க்கவில்லை,” என்கிறார் மரேசு. மாநிலம் முழுவதும் முறைசாரா பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டமே சந்திரன்னா பீமா எனப்படுகிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. “இக்காப்பீட்டைப் பெறுவதற்கு உங்களுக்கு சாதிச் சான்றிதழ் தேவையில்லை, ஆனால் அதிகாரிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் நிதிக்காக அலைக்கழிக்கப்படுவதால், அதை ஒரு சாக்காகப் பயன்படுத்துகின்றனர்,” என்கிறார் பாப்ஜி.

2008ஆம் ஆண்டு முதல் சாதி சான்றிதழ் உள்ளிட்ட தங்கள் உரிமைகள் கோரி நாயக்போட்ஸ்கள் ஒருங்கிணைக்கத் தொடங்கிவிட்டனர். அடுத்தடுத்த தேர்தல்களில், பல முதன்மை அரசியல் கட்சிகள் இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சத்தியம் செய்தனர். ஆனால் எதுவும் செய்யவில்லை. 2015ஆம் ஆண்டு இளம் நாயக்போட்ஸ்கள் இணைந்து நாயக்போட் சங்கத்தை அமைத்து தங்களின் பிரச்னைகள் முன்னிறுத்தி பேரணி மற்றும் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர். அவர்களின் சாதிச் சான்றிதழ் கோரிக்கையை அரசு இதுவரை ஏற்கவில்லை.

தமிழில்: சவிதா

Rahul Maganti

ଆନ୍ଧ୍ର ପ୍ରଦେଶର ବିଜୟୱାଡ଼ାରେ ରହୁଥିବା ରାହୁଲ ମାଗାନ୍ତି ଜଣେ ସ୍ୱାବଲମ୍ବୀ ସାମ୍ବାଦିକ ଏବଂ 2017ର PARI ଫେଲୋ।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Rahul Maganti
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Savitha