டெல்லி நகரத்திற்கு வெளியே லால் குயானில் உள்ள புல் பெலாத் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் ‘தள்ளுவண்டி சிறுவன்’ அல்லது ‘சில்லி சிப்ஸ் சிறுவனை’ தெரிந்து வைத்துள்ளனர். இந்தப் பகுதியில் இளம் தள்ளுவண்டி வியாபாரி இவன்தான்.
குடிசை பகுதியில் உள்ள குறுகிய பாதை வழியாக அவன் செல்வதை நான் பார்த்துவிட்டேன். திறந்தவெளி சாக்கடையின் ஓரத்தில் காலியாக இருக்கும் இடத்தில் தனது தள்ளுவண்டியை நிறுத்துகிறான். வண்டி நகராமல் இருப்பதற்காக சக்கரத்தின் அடியில் கற்களை வைத்துவிட்டு அறைக்குள் செல்கிறான். இன்னும் கொஞ்ச நேரத்தில் தனது தள்ளுவண்டியில் வைத்து உருளைக்கிழங்கு சிப்ஸையும் மோமோஸையும் விற்கப்போகும் 14 வயதான அர்ஜூன் சிங்கிற்கு இது தினசரி வழக்கம்.
கூச்ச சுபாவம் கொண்ட, ஆனால் சுறுசுறுப்பான இந்த சிறுவன் கணவரை இழந்த தன் அம்மாவோடு வாழ்ந்து வருகிறான். அந்த சிறிய அறையின் உள்ளே எந்த மரச் சாமான்களும் இல்லை. அவர்களது வீட்டின் சுவற்றில் கண்ணாடி ஒன்று உள்ளது. அதன் மூலையில் இதய வடிவில் பழுப்பு நிற டேப் ஒட்டப்பட்டுள்ளது. அதில் லட்சுமி+அர்ஜூன் என எழுதப்பட்டுள்ளது. “இதை நான்தான் எழுதினேன். எங்கள் வீட்டிற்கு வரும் யாரும் எங்கள் உலகத்தை இதில் பார்ப்பார்கள்” என்கிறான் அர்ஜூன்.
இது தனிமையான, கடுமையான உலகம்.
ஜூலை 14, 2013 அன்று, இந்திராகாந்தி தேசிய கலை மையத்தில் உள்ள சாக்கடை குழியை சுத்தம் செய்யும் போது ராஜேஸ்வர் சிங் இறந்து போனார். 2011-ம் ஆண்டிலிருந்து அவர் அங்கு பணியாற்றி வருகிறார். விஷ வாயு தாக்கப்பட்டு இறந்த மூவரில் இவரும் ஒருவர். அசோக் குமார் மற்றும் சதிஷ் சிங் ஆகியோர் மற்ற இருவர். மூவருமே அரசாங்கம் நடத்தும் நிகழ்த்து கலை மையத்தின் ஒப்பந்த பணியாளர்கள். அதுமட்டுமல்ல, இறந்த மூவருமே வால்மீகி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் அனைவரும் தங்கள் குடும்பத்தோடு திரிலோகபுரியில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வந்தவர்கள். (கணவர் இறந்த பிறகு, திருமணமான தனது மகள் மினு வசிக்கும் லால் குயானுக்கு அர்ஜூனை அழைத்து சென்று விட்டார் லட்சுமி).
லால் குயானில் உள்ள அவர்களது வீட்டின் சுவற்றில் கண்ணாடி ஒன்று உள்ளது. அதன் மூலையில் இதய வடிவில் பழுப்பு நிற டேப் ஒட்டப்பட்டுள்ளது. அதில் லட்சுமி+அர்ஜூன் என எழுதப்பட்டுள்ளது. “இதை நான்தான் எழுதினேன். எங்கள் வீட்டிற்கு வரும் யாரும் எங்கள் உலகத்தை இதில் பார்ப்பார்கள்” என்கிறார் அர்ஜூன். இது தனிமையான வித்தியாசமான உலகம்.
ராஜேஸ்வர் இறக்கும்போது அவர்களது மகன் அர்ஜூனுக்கு பத்து வயது கூட ஆகவில்லை. “என் அப்பா மிகவும் அழகானவர். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். எனது கண் புருவங்கள் அவருக்கு இருப்பதைப் போலவே உள்ளது. அவரைப் போலவே நானும் குறைவான உயரம். அவருக்கு வெண்டைக்காய் பிடிக்கும், எனக்கும் தான். அவர் சமையல் செய்ய விரும்புவார், நானும் இப்போது கட்டாய தேவைக்காக சமைக்கிறேன். அவர் அன்பானவர். என்னை சிண்டூ-ன்னு கூப்பிடுவார்” என தன் நினைவுகளை பகிர்கிறான் அர்ஜூன்.
தன் அப்பா அடிக்கடி பாடும் – ‘என்னை அவ்வுளவு எளிதில் நீ மறந்து விட முடியாது’ - பாடலை நன்றாக நியாபகம் வைத்துள்ளான் அர்ஜூன். “இனி யாரையும் நான் அப்பா என கூப்பிட முடியாது என்பதுதான் இப்போது எனக்கு மிகப்பெரிய பிரச்சனை. என் அப்பா இறக்கும்போது எனக்கு பத்து வயது கூட ஆகவில்லை. என் அம்மா கவலையில் எப்போதும் அழுதுகொண்டே இருப்பார். யாரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை. உறவினர்கள் அனைவரும் எங்களை கைவிட்டு விட்டனர். நான் வேகமாக வளர வேண்டும். அப்போதுதான் என் அம்மாவிற்கு நல்ல வசதியை ஏற்படுத்தி கொடுக்க முடியும்” என்கிறான் அர்ஜூன்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மணி 3 இருக்கும். தனது பொருட்களோடு அர்ஜூன் கிளம்ப வேண்டிய நேரமிது. சாக்குகளில் இருந்து உருளைக்கிழங்கை எடுத்து ஒவ்வொன்றாக வெட்டுகிறான். சிப்ஸை கழுவிய பிறகு அதில் மசாலாவை சேர்க்கிறான். இதையெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் சமையல் நிபுணர் போல் நம்மிடம் விவரிக்கிறான். பிறகு மோமோஸ் தயார் செய்ய தொடங்குகிறான். இறுதியில், கேஸ் சிலிண்டர், அடுப்பு, பாத்திரம், தட்டு, சட்னி அனைத்தையும் தள்ளுவண்டியில் எடுத்து வைத்து கிளம்ப தயாராகிறான். சோளத்தை அடுக்கிவைக்க அவனது அம்மா உதவுகிறார்.
தினமும் பள்ளி முடிந்து வந்ததும் ஸ்னாக்ஸை விற்பனை செய்கிறான் அர்ஜூன். நன்றாக வியாபாரம் ஆகும் நாட்களில் 100 முதல் 150 ரூபாய் வரை லாபம் இடைக்கிறது. சில நாட்களில் 50 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கிறது. ஒரு சிலர், ஒரு தட்டு ஸ்னாக்ஸின் விலையான 10-15 ரூபாயை கூட கடன் சொல்லி வாங்குகிறார்கள். பொதுவாக வார இறுதி நாட்களிலும் திருவிழா காலங்களிலும் விற்பனை அதிகமாக இருக்கும்.
இது நிச்சியமற்ற வாழ்க்கை. அரசாங்க மூலம் கிடைக்கும் கணவரை இழந்தவருக்கான உதவிதொகையான 2000 ரூபாய் மட்டுமே இதர வருமானம் என்பதால் இதை தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. அருகிலுள்ள மக்கள், குறிப்பாக ஆண்கள் எங்கள் சிறு வளர்ச்சியை கண்டு பொறாமை அடைகிறார்கள். சாலையோர சாப்பாடு கடையால் தான் இந்த இடம் குப்பையாகிறது என எங்களை குறை கூறுகிறார்கள் என்கிறார் லட்சுமி. “தனியாக இருக்கும் ஒரு பெண், அதுவும் குறிப்பாக வால்மீகி சாதியைச் சேர்ந்த பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை இந்த ஆண்கள் விரும்புவதில்லை. எப்போது தள்ளுவண்டியை அப்புறபடுத்தலாம் என அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் அருகில் வசிக்கும் மெருனிஸா கதும்.
தங்களது எதிர்காலத்திற்காக சிறு சிறு கனவுகளை லட்சுமியும் அர்ஜூனும் கொண்டுள்ளனர். அவித்த முட்டைகளை விற்பது, சிறு கடை அமைத்து தினசரி தேவைப்படும் பொருட்களை விற்று வருமானத்தை பெருக்குவது. ஆனால் இந்த சிறு கனவை நிறைவேற்றவும் முதலீடு தேவைப்படுகிறது. இழப்பீடாக கிடைக்கும் 10 லட்சம் முதலீட்டிற்கு போதுமானதாக இருக்கும். கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்க பாடுபடும் சஃபாய் கர்மாச்சாரி அண்டோலன் அமைப்பு, இழைப்பீடு தொகையை பெற போராடி வரும் லட்சுமிக்கு உதவி வருகிறது. ஆனால் ராஜேஸ்வர் சிங் முழுநேர பணியாளர் அல்ல, ஒப்பந்த தொழிலாளர் மட்டுமே என்பதை காரணம்காட்டி முழுதொகையை கொடுக்காமல் தவிர்த்து வருகிறது அந்நிறுவனம்.
துக்ளாபாத்தில் உள்ள அரசாங்க பள்ளியான சர்வோதயா பால வித்யாலயாவில் அண்டோலன் உதவியோடு ஆறாம் வகுப்பில் சேர்ந்துள்ளார் அர்ஜூன். பள்ளியில் சேர்வதற்கு தேவைப்படும் முகவரி சான்று அவர்களிடம் இல்லை. அர்ஜூன் படித்த முந்தைய பள்ளியில் மாற்று சான்றிதழ் வழங்கவும் தாமதித்தனர். தற்போது அர்ஜூன் மறுபடியும் பள்ளியில் சேர்ந்திருப்பதால், அவர் பெரிதாக கனவு காணலாம். வங்கி மேலாளராகவும் சமையல் நிபுணராகவும் ஆவதே அவனது கனவு.
முழு இழப்பீடு பெறும்வரை நான் ஓயமாட்டேன் என்கிறார் லட்சுமி. கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்க உறுதியோடு இருக்கிறார். “என் கனவரை நான் இழந்தது போல் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்ககூடாது. இதை சொல்வதற்கு எங்கு வேண்டுமானாலும் செல்ல நான் தயாராக இருக்கிறேன். சமீபத்தில் பீம் யாத்ராவில் சேர்ந்துள்ளேன் ( சாக்கடை குழியில் இறக்கும் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பல பிரச்சனைகளுக்கு எதிராக போராடுவதற்காக 2015-16 ஆண்டு நாடெங்கும் சென்ற பேருந்து பயணம்) ஆனால் அரசாங்கம் கேட்க தயாராக இல்லை. எங்கள் மக்கள் யாராவது இறந்தால், இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. ஏனென்றால், எங்கள் நெற்றியில் எங்கள் சாதி எழுதப்பட்டுள்ளது. மலம் அள்ளும் தொழிலும் எங்கள் சாதியும் இணைத்து பேசப்படும் வரை, இந்த நரகத்திலிருந்து நாங்கள் வெளியேற முடியாது” என்கிறார் லட்சுமி..
“இதுபோன்று பலர் இறந்தாலும் அரசாங்கம் எதுவும் செய்யாமல் இருப்பதை நினைத்தும் போது எனக்கு மிகுந்த கோபம் வரும். சாக்கடை குழியை சுத்தம் செய்வதற்கு நம் நாட்டில் எந்த தொழில்நுட்பமும் இல்லையா? அரசாங்கத்தின் தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் ஆராவாரம் எங்கும் கேட்கிறது. ஆனால் சாக்கடையை சுத்தம் செய்ய இன்றும் மனிதர்கள் சென்றால், எப்படி தூய்மையான நாடாக இருக்க முடியும்?” என லட்சுமி கேட்கிறார்.
தமிழில்: வி கோபி மாவடிராஜா