“மக்கள் எங்களை வசதியான, பெரிய விவசாயிகள் என நினைக்கின்றனர்,” என்கிறார் தாதாசாஹேப் சபிக். “எங்களின் நிழல் வலைகளைக் காணும்போது இப்படி ஒரு பொது கருத்து வருவதுண்டு. ஆனால் விவசாயம் என்று வரும்போது நீங்கள் கசப்பான உண்மையை காணலாம். நாங்கள் பெரிய கடனில் இருக்கிறோம். எங்களால் எந்த கடனையும் திருப்பிச் செலுத்த முடியாது.”
நாஷிக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் தாதாசாஹேபும் அமைதியாக பங்கேற்றார். அவருடன் ராஜேந்திர பகவத்தும் வந்திருந்தார் – இருவரும் வெவ்வேறு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான விவசாயிகளைப் போன்று இவர்களும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள். (குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மகாராஷ்டிரா அரசு உறுதி அளித்ததால் பிப்ரவரி 21ஆம் தேதி விவசாயிகளின் பேரணி நிறுத்தப்பட்டது.)
'பணம், தண்ணீர், சந்தைகள் என அனைத்திலும் நெருக்கடி. நாங்கள் சிக்கிக் கொண்டுள்ளோம்,' என்கிறார் தாதாசாஹேப் சபிக்
51வயது சபிக்கும், 41 வயது பகவத் இருவருக்கும் அகமது நகரின் வறண்டு போன சங்கம்நர் தாலுக்காவில் தலா ஐந்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இருவரும் தங்களின் இரண்டு ஏக்கர் நிலத்தில் நிழல் வலைகளை அமைத்துள்ளனர். ஆலங்கட்டி மழை, பலத்த மழை, பூச்சிகள், கடும் வெயில் போன்ற கடுமையான பாதிப்புகளில் இருந்து இந்த வலைகள் பாதுகாப்பைத் தருகின்றன. ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. புதைக்கப்பட்ட குழாய்கள் மூலம் வலைகளுக்குள் உள்ள செடிகள் அல்லது பயிர்கள் மீது நீர் தெளிக்கப்படுகிறது.
ஒரு ஏக்கர் நிலத்தில் நிழல் வலை அமைப்பதற்கு ரூ.15 – 20 லட்சம் முதலீடு தேவைப்படுகிறது. அதுவே நெகிழி குடில் அமைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை தேவைப்படும் என்கின்றனர் சபிக்கும், பக்வத்தும். நெகிழி குடில்களில் முன் தயாரிக்கப்பட்ட எஃகு மற்றும் குழாய் கட்டமைப்புகள் பிரத்யேகமாக செய்யப்பட்ட நெகிழி அட்டைகளால் மூடப்பட்டு இருக்கும். பூக்கள் குறிப்பாக ரோஜா, ஜெர்பெரா போன்றவை ஏற்றுமதிக்காக வடக்கு மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் நெகிழி குடில்கள் அமைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு, மாநில அரசும், வங்கியும் நிதியுதவி, மானியங்கள் மூலம் வறண்ட நிலங்களில் இந்த அமைப்பை பிரபலப்படுத்த தொடங்கின. மழை மறைவு மண்டலத்தில் சங்கம்நர் தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த தாலுக்கா. குறைந்த நீர் பயன்பாடு, நிச்சயமற்ற தட்பவெப்பத்திலிருந்து பாதுகாத்து உயர் ரக வேளாண் விளைபொருட்களைக் கொடுக்க இத்தொழில்நுட்ப வடிவங்கள் உதவும் என பிரபலப்படுத்தப்பட்டது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிழல் வலையை இரு விவசாயிகளும் அமைத்தனர். முதல் இரண்டு ஆண்டுகள் லாபம் கிடைத்ததால் மேலும் தலா இரண்டு ஏக்கர் நிலங்களுக்கு விரிவுப்படுத்த இருவரும் ஊக்கம் கொண்டனர். “2009-10 கால வாக்கில், எங்கள் பகுதியில் நிழல் வலைகளும், நெகிழி குடில்களும் பெருகின, குடை மிளகாய், பூக்கள் போன்ற உயர் ரக விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தது. இப்போது விலை சரிந்துவிட்டது, [அதிக உற்பத்தி, சந்தையில் விலை ஏற்றத்தாழ்வு காரணமாக], தண்ணீர் சுத்தமாக கிடையாது,” என்கிறார் பக்வத்.
ஐந்தாண்டுகளாக அவரும், சபிக்கும் குடைமிளகாய் சாகுபடியில் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். எனினும் தங்களின் கடன் குறித்துப் பேச அவர்கள் தயங்குகின்றனர். “வாயைத் திறந்து பேசுவது மிகவும் கடினம்,” என்கிறார் பக்வத். “நாங்கள் கடனில் இருப்பதை உறவினர்களும், நண்பர்களும் அறிந்தால் எங்கள் சமூக அந்தஸ்து பாதிக்கப்படும் என நாங்கள் அஞ்சுகிறோம். நமது அரசிடம் இப்பிரச்னைகளை கொண்டு செல்வதற்கு இதுவே உகந்த நேரம்.”
அகமத்நகர் மாவட்டத்தில் இதேபோன்று நிழல் வலைகள் அல்லது நெகிழி குடில்களை தங்கள் விவசாய நிலங்களில் அமைத்த பல விவசாயிகளும் மலைப் போன்ற கடனில் சிக்கி தங்களின் திட்டங்களை கைவிட்டுள்ளதாக தாதாசாஹேப் சொன்னார். ஷீரடி அருகே உள்ள தனது கங்குரி கிராமத்தில் வங்கிகளில் இருந்து இனி கடன்பெற முடியாது என்பதால் பணமின்றி பலரும் வெளியேறிவிட்டனர் என்கிறார் அவர். “பணம் புரட்டுவது, தண்ணீர், சந்தைகள் என பலவற்றிலும் நெருக்கடி. நாங்கள் சிக்கிக் கொண்டுள்ளோம். குடும்பத்தை நடத்துவதற்கு என்னிடம் ஓய்வூதியம் உள்ளது. ஆனால் மற்றவர்களுக்கு அப்படி எதுவும் கிடையாது...”
அண்மையில் அனைத்து இந்திய கிசான் சபா (ஏஐகேஎஸ்) ஒருங்கிணைத்த போராட்டத்தில் இருவரும் இணைந்து கொண்டனர். நிழல் வலை மற்றும் நெகிழி குடில் விவசாயிகள் குறித்து பிப்ரவரி 13ஆம் தேதி அக்மத்நகரில் நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்றனர். பேரணியில் இந்த விவகாரமும் எடுத்துரைக்கப்படும்.
சபிக் மற்றும் பக்வத்திற்கு வங்கியில் அடைக்கப்படாமல் தலா ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கடன் உள்ளது. அவர்களைப் போன்ற பலருக்கு இதைவிட பெரிய கடன் தொகை உள்ளதாக அவர்கள் கூறினர். ஏஐகேஎஸ் விடுத்த கோரிக்கைகளில் நிழல் வலை மற்றும் நெகிழி குடில் விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது.
இந்த விவகாரத்திற்கும் தீர்வு காணப்படும் என்று பிப்ரவரி 21ஆம் தேதி இரவு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. “இதுபோன்ற விவசாயிகளை முதலில் கணக்கெடுத்துவிட்டு அவர்களின் பாரங்களை குறைப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும்,” என்றார் மகாராஷ்டிராவின் நீர்வளத் துறை அமைச்சர் கிரிஷ் மஹாஜன். ஏஐகேஎஸ் தலைவர்களுடன் மாலையில் பேச்சுவார்த்தை நடத்திய அவர் போராட்டம் கைவிடப்பட்டதும் விவசாயிகளிடம் பேசினார்.
“கடன் தள்ளுபடி திட்டம் இப்போதுள்ள வடிவில் எங்களுக்கு எந்த பயனும் தராது,” என்றார் தாதாசாஹேப். “எங்களின் கடன்தொகை பெரியது. எங்களால் பணத்தை திரும்பிச் செலுத்த முடிந்திருந்தால், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தியிருக்க மாட்டோம்.” தங்களின் நிலத்தை விற்றால்கூட இக்கடன்களை தீர்க்க முடியாது, என்கிறார் அவர். “நாங்கள் பேச முடிவு செய்தால் மற்றவர்களும் இணைந்து கொள்வார்கள். அரசின் கதவுகளைத் தட்டுவதற்கு நமக்கு வாய்ப்பு இருக்கும்போது நாம் தூக்கில் தொங்குவதில் அர்த்தமில்லை.”
தமிழில்: சவிதா