பசந்த் பிந்த் வீட்டுக்கு வந்து சில நாட்கள்தான் ஆகின்றன. விவசாயத் தொழிலாளரான அவர் கடந்த சில மாதங்களாக பாட்னாவின் வயல்களில் பணிபுரிந்து கொண்டிருந்தார். ஜெஹனாபாத் மாவட்டத்தில் அவரது வீடு இருக்கும் சலெமன்பூர் கிராமத்திலிருந்து பாட்னாவுக்கு சில மணி நேரங்கள் தூரம்தான்.
சங்கராந்தி விழா ஜனவரி 15, 2023-ல் முடிந்த அடுத்த நாள் தனது தினக்கூலி வேலைக்கு அவர் திரும்ப வேண்டும். பிகாருக்கு ஒன்றாக செல்வதற்காக பிற ஊழியர்களை அழைக்க அருகாமை கிராமம் சந்தரியாவுக்கு அவர் சென்றார். அந்த தொழிலாளர் குழுவுக்கு நிச்சயம் வேலை கிடைத்திருக்கும்.
அங்கு சிலருடன் அவர் பேசிக் கொண்டிருந்தபோது காவலர்களையும் கலால் துறை அதிகாரிகளையும் கொண்ட வாகனம் வந்தது. அவர்கள், பிகார் மதுவிலக்கு மற்றும் கலால் (திருத்த) சட்டம் 2016-ன்கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட மதுவுக்கு எதிரான படையைச் சேர்ந்தவர்கள். “பிகார் மாநில எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு மது விலக்கு மற்றும் போதை விலக்கு ஆகியவற்றை அமல்படுத்தி, உறுதிபடுத்துவது” அவர்களின் பணி.
காவலர்களை பார்த்ததும் மக்கள் ஓட ஆரம்பித்தனர். பசந்தும் ஓடத் தொடங்கினார். ஆனால்,”என் காலுக்குள் உலோகம் வைக்கப்பட்டிருப்பதால் வேகமாக ஓட முடியாது,” என்கிறார். ஒரு நிமிடம்தான். “என் சட்டையை யாரோ பிடித்து வண்டிக்குள் போட்டனர்,” என்கிறார் 27 வயது நிரம்பிய அவர்.
படையில் இருந்தவரிடம் தன்னிடமும் தன் வீட்டிலும் மது இருக்கிறதா என சோதனை செய்து பார்க்க சொன்னார் அவர். ஆனால் அவர்கள் செய்யவில்லை. “காவலர்கள் கலால் இலாகாவில் விடுவித்து விடுவதாக சொன்னதும்,” அவர் சற்று நிம்மதி அடைந்திருக்கிறார்.
ஆனால் பசந்தும் மதுவிலக்கு படையும் காவல் நிலையத்தை அடைந்ததும், ஏற்கனவே 500 மிலி மதுபானத்தை அவரிடம் கண்டெடுத்ததாக காவலர்கள் குறிப்பெழுதியிருந்ததை தெரிந்து கொண்டார். மது கொண்டிருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தண்டனை ஐந்து வருட சிறை. முதல் முறை குற்றமிழைப்பவர்கள் 1 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.










