பேரம் பேச முடியாத காரணத்தால், புலம்பெயர் தறி தொழிலாளர்களுக்கு விபத்துகள், இறப்புகள் நிகழ்ந்தால், சிறிதளவு இழப்பீடு வழங்கப்படுகிறது, என்கிறார் சூரத் நகராட்சி நிர்வாகத்தின் உதவி துப்புரவு ஆய்வாளர் ஜே.கே. காமித். “தொழிலாளர்களின் குடும்பங்கள் மிக தொலைவில் தங்கள் கிராமங்களில் உள்ளனர். அவர்களின் நண்பர்களும் நகரின் தறிகளில் வேலை செய்கின்றனர். எனவே இதை பின்தொடர்வதற்கோ, காவல்நிலையம் செல்வதற்கோ நேரம் இருப்பதில்லை,” என்கிறார் அவர். “காயமுற்றோர், மரணித்தோர் குறித்த அதிகாரப்பூர்வ ஆவணப்படுத்துதல் என்றும் எதுவுமில்லை. உடனடியாக வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.”
பொதுவாக தறியில் மரணம் நிகழ்ந்தால் காவல்துறை வழக்கு பதிவு செய்கிறது. ஆனால் இது ஒரு சட்டப்பூர்வ, மருத்துவ நடைமுறை மட்டுமே. கைதுகள் மிக அரிதாகவே நிகழ்கின்றன. இழப்பீடு பெறுவதற்கு குடும்பத்தினர் தொழிலாளர் நலத் துறையை அணுக வேண்டும். காயமடைந்தால், இழப்பீடு கோருவது முதலாளியை எதிர்க்கும் செயல் என்பதால் தொழிலாளரின் வேலைக்கு ஆபத்து வந்துவிடும். நீதிமன்றத்திற்கு வெளியே பெரும்பாலும் தீர்த்துக் கொள்கின்றனர்.
சிறுவன் பிகாஷ் கவுடா இறந்து நான்கு நாட்களுக்குp பிறகு ஏப்ரல் 29ஆம் தேதி அவனது குடும்பத்திற்கு ரூ.2.10 லட்சம் முதலாளியால் வழங்கப்பட்டது. மேற்கொண்டு எதுவும் கேட்கக் கூடாது என்று குடும்பத்தினரிடம் உறுதியும் பெறப்பட்டுள்ளது. வழக்கை முடித்துவைக்க முதலாளிகள் பெரும்பாலும் ரூ.50,000 மட்டுமே தருவார்கள். இதற்கு பல மாதங்கள் ஆகும். இதுபோன்ற தருணங்களில் பிஎஸ்எஸ்எம், ஆஜீவிகா பீரோ தலையிட்டால், இழப்பீட்டு தொகை அதிகரிப்பதோடு, வேகமாக கிடைக்கப் பெறும்.
மூவரின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டதால் குடும்பமும் ஒப்புக் கொண்டது.
கஞ்சமிலிருந்து குஜராத்திற்கு
கஞ்சமிலிருந்து குறைந்தது 800,000 தொழிலாளர்கள் சூரத்தில் இருப்பார்கள் என மதிப்பீடு செய்கிறார் சூரத் ஒடியா நலச் சங்கத்தின் உறுப்பினரான ராஜேஷ் குமார் பதி. அவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் நகரின் விசைத்தறி பிரிவில் வேலை செய்கின்றனர். “ஒடிசா மற்றும் சூரத் இடையே புலம்பெயர்வு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது,” என்கிறார் அவர். “எனினும் கஞ்சம் ஒடிசாவில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கருதப்படுகிறது,” என்கிறது பிடிஆர்சி அறிக்கை. மேலும் “இயற்கை வளங்கள் சுருங்குதல், வேளாண் நிலங்கள் குறைதல், தொடர் வெள்ளம், வறட்சி போன்றவை புலம்பெயர்வுக்குக் காரணமாகின்றன.”
சூரத்தின் மிகப் பெரும் தொழிலான வைரங்களில் கஞ்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என குறிப்பிடுகிறார் ஜகதிஷ் படேல். “அங்கு உள்ளூர் குஜராத்தி பணியாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. ‘தங்களின் நம்பிக்கைக்குரிய‘ ஆட்களை மட்டுமே முதலாளிகள் வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். தறி ஆலைகளின் இறுதிநிலை வேலைகளைத் தான் கஞ்சம் தொழிலாளர்கள் செய்கின்றனர். ஆண்டின் எல்லா நாட்களிலுமே தொடர்ச்சியாக இயந்திரங்களை ஓட வைக்கும் வேலைகளை மட்டுமே அவர்கள் செய்கின்றனர்.”
எனினும் உள்ளூரைவிட இச்சூழல் சிறப்பாக உள்ளதாக தொழிலாளர்கள் இப்போதும் சொல்கின்றனர். பிஎஸ்எஸ்எம் உறுப்பினரான சிமஞ்சலா சாஹூ சொல்கிறார், “கஞ்சமின் நிலை மிகவும் சவாலானது. தொடக்கத்தில் சில தொழிலாளர்கள்தான் வந்தனர், பிறகு பெருங்குழுக்களாக வரத் தொடங்கினர், சிலர் குடும்ப உறுப்பினர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து வருகின்றனர்.”