“அரசியல்வாதிகள் எங்கள் பகுதிக்கு வரும்போது நிற்கக்கூட மாட்டார்கள். கையை அசைத்துக்கொண்டே அவர்களது கார்களில் பறந்துவிடுவார்கள். அவர்கள் பக்கத்தில் கூட நாங்கள் போகமுடியாது.” என்கிறார் புட்டண்ணா.
கர்நாடகா மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் மதுகிரி நகரில் புட்டண்ணா கையால் மனிதக் கழிவு அகற்றுவோராக 11 வருடங்களாக பணிசெய்கிறார். இந்தக் காலகட்டத்தில் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் வந்துபோய்விட்டன. இன்னொன்று வந்துகொண்டிருக்கிறது. ஏப்ரல் 18இல் தும்கூரில் தேர்தல் வந்தது. நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்டத் தேர்தல்கள் கர்நாடகத்தில் தொடங்கின.
இந்த தொகுதியில் மிகப்பெரும் தலைவர்கள் போட்டியிடுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடுகிற வேட்பாளர் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 77 வயதான ஜி.எஸ்.பசவராஜ். காங்கிரஸ்- ஜனதா தளம் (மதச்சார்பின்மை) கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் முன்னாள் பிரதமர் 86 வயதான ஹெச்.டி. தேவகவுடா.
மதுகிரி சுகாதார ஊழியர்களை அவர்களின் தொகுதியில் நிற்கிற வேட்பாளர்களில் யார் சிறந்தவர் என்று கேட்டுப்பாருங்கள். அவ்வளவு ஆர்வமாக யாரையும் சொல்லமாட்டார்கள். அவர்களில் ஒருவரான 45 வயதான புட்டண்ணா, சுரண்டப்படுகிற மாதிகா சாதியைச் சேர்ந்தவர் . மாதிகாக்கள் பெரும்பாலும் கையால் மனிதக் கழிவு அகற்றுவோராக உள்ளனர். (இந்தக் கட்டுரைக்காக நான் நேர்காணல் செய்த அனைத்து தொழிலாளர்களும் தங்களின் சாதிப்பெயர்கள் தெரியாமல் பயன்படுத்த வேண்டும் என்றனர்) தும்கூரில்தான் கர்நாடக மாநிலத்திலேயே அதிமான எண்ணிக்கையில் கையால் மனிதக் கழிவு அகற்றுவோர் உள்ளனர் என்கிறது கர்நாடக துப்புரவுப் பணியாளர்களுக்கான ஆணையம் 2017 ஆகஸ்ட் மாதத்தில் செய்த ஒரு ஆய்வு. மனிதத் தன்மையற்ற வேலைச் சூழல்கள், குறைவான சம்பளம், குடியிருப்பதற்கு வீடுகள் கிடைக்காமலிருப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் பல வருடங்களாக நீடிக்கின்றன. இவைதான் அவர்களுக்கு தங்களின் அரசியல்தலைவர்கள் மீது போதுமான அளவுக்கு அக்கறை இல்லை என்பதற்கான சாதாரணமான காரணங்கள்.







