“மூன்றும், இரண்டும் எத்தனை?“ என்று பிரதிபா ஹிலிம் கேட்கிறார். அவர் முன் தரையில் குழுவாக அமர்ந்திருக்கும் 10 குழந்தைகளுக்கு 7 முதல் 9 வயது வரை இருக்கும். அவர்கள் பதிலாக்க மாட்டேன் என்கிறார்கள். தனக்கு எதிரில் உள்ள பலகையில் (chalk board) எழுதிவிட்டு, குழந்தைகளை திரும்பி பார்த்து, தனது கைவிரல்களால் “5“ என்று கூறி, தலை திருப்பி அவர்களை மீண்டும் சொல்ல வைக்கிறார்.
பிரதீபா, இரும்பு மற்றும் தேலாலான, இரண்டு முட்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ள ரப்பர் கால்களின் உதவியுடன் நிற்கிறார். ஒரு வெள்ளை நிற சாக்பீஸ் அவரின் கைமூட்டுடன் கட்டப்பட்டுள்ள வெல்க்ரோ நாடாவுடன் சொருகப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடம் நடக்கிறது. இது பால்கர் மாவட்டம் கார்கேவில் உள்ள ஹிலிமின் 3 அறைகள் கொண்ட சிமெண்ட் வீடு. மஹாராஷ்ட்ராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விக்ரம்காட் தாலுகாவில் உள்ள ஆதிவாசி கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பிரதிபா, ஆங்கிலம், வரலாறு, மராத்தி மற்றும் கணிதம் ஆகியவற்றை ஜீலை 20ம் தேதி முதல் கற்பித்து வருகிறார். மாணவர்கள் ஒவ்வொரு பிரிவினராக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வருகிறார்கள். அவர்கள் 1,378 பேர் கொண்ட கிராமத்தின் 3 சில்லா பரிசத் பள்ளிகளில் வழங்கிய பாடபுத்தகங்களை எடுத்து வருகின்றனர்.
“அறுவைசிகிச்சை செய்தது முதல், ஒரு சிறிய விஷயம் கூட செய்து முடிக்கக்கூட நீண்ட நேரம் எடுக்கிறது. இதனுடன் எழுதுவது கூட மிகக்கடினமாக உள்ளது“ என்று பிரதிபா கூறுகிறார். அவருக்கு கைகளில் உள்ள வெல்க்ரோ நாடாவில் ஒரு சாக்பீசை சொருகிவிட ஒரு மாணவர் உதவுகிறார்.
கடந்தாண்டு வரை, வர்லி ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த பிரதிபா ஹிலிம், 28 ஆண்டுகளாக உள்ளூர் சில்லா பரிசத் பள்ளிகளில் பணியாற்றி வந்தார். 20 வயதில் திருமணமானவுடன், அவர் கணவர் பணிசெய்யும், கார்கேவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிவண்டி நகரத்திற்கு சென்றுவிட்டார். அவரது கணவர் பாண்டுரங் ஹிலிம் (50)மூத்த குமாஸ்தாவாக மாநில நீர்ப்பாசன அலுவலகத்தில் பணிபுரிகிறார். அவர் அருகில் உள்ள தானே மாவட்டம் கல்வா நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது, பிரதிபா அங்கிருந்து பிவண்டிக்கு, 2015ம் ஆண்டு ஆசிரியப்பணியை தொடர்வதற்காக மாற்றப்பட்டார்.
2019ம் ஆண்டு ஜீன் மாதம் முதல் பிவண்டி புதிய பள்ளியில் அவர் பணிபுரிய துவங்கினார். அவர்கள் கார்கேவில் உள்ள ஹிலிம் குடும்பத்தினரை மாதமொருமுறை வழக்கம்போல் சந்திக்கச்சென்றனர். அப்போது அவர்களின் பிரச்னைகள் துவங்கியது. 50 வயது பிரதிபா அப்போது தசைஅழுகல் நோயால் பாதிக்கப்பட்டார். உடலில் உள்ள திசுக்கள் அழியத்துவங்கும்போது இவ்வாறு ஏற்படும். இது உள்ளுக்குள் இருக்கும் காயம், தொற்று மற்றும் நோயால் ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுவதாகும்.
தொடர்ந்து அவரின் இரண்டு கைகள் முட்டி வரையும், இரண்டு கால்கள் முட்டி வரையும் நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
“எனக்கு இவ்வாறு நேரும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. எனக்கு அதிக காய்ச்சல் வந்தபோது நான் இங்கே (கார்ஹே) இருந்தேன்“ என்று பிரதீபா கூறுகிறார். 2019ம் ஆண்டு ஜீன் மாதம் 16ம் தேதி இரவு 8 மணிக்கு இது நடந்தது. “நான் அதற்காக ஒரு பேரசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொண்டேன். காய்ச்சல் சரியாகிவிடும் என்று எண்ணினேன். ஆனால், அடுத்த நாள் காலை எனக்கு மிக கஷ்டமாக இருந்தது. அதனால், எனது மகனும், எனது கணவரும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் அதுகுறித்து நினைவு இல்லை. நாள் முழுவதும் நான் நினைவை இழந்துவிட்டேன்“ என்று அவர் மேலும் கூறினார்.
ஜீலை 17ம் தேதி காலை, அவர், அவர்களின் காரில், 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்வாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். “நான் மிகவும் அபாயகட்டத்தில் இருப்பதாகவும், எனவே உடனடியாக என்னை தானேவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்“ என்று பிரதிபா கூறினார். அதே நாள் அவரது குடும்பத்தினர் அவரச ஊர்தியில் அங்கு அழைத்துச்சென்றனர்.
“இறுதியாக நான் எழுந்து பார்த்தபோது, நான் மருத்துவமனையில் இருந்ததை உணர்ந்தேன். மருத்துவர்கள் எனக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக கூறினர். நான் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது எனக்கு ஏதேனும் ஏற்பட்டதா என்று கேட்டார்கள். நாங்கள் வார இறுதி நாட்களில் பாபாவை சந்திக்க வரும்போது வயல்வெளிகளில் வேலை செய்வோம். அவர் வயதானவர், நாங்கள் அவருக்கு உதவி செய்வோம். எங்கள் நிலத்தில் நெல் நடவு செய்துள்ளோம்“ என்று அவர் கூறினார். பாண்டுரங்கின் தந்தைக்கு கார்கேவில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் அவர்கள் குடும்பத்தினர் நெல், பருப்பு, உளுந்து, சிறுதானியங்கள் பயிரிடுவார்கள். “பருவமழை மாற்றத்தால், நாங்கள் வயலில் அதிகம் வேலை செய்வதை நிறுத்திவிட்டோம்“ என்று பிரதிபா மேலும் கூறினார்.
ஜீன் 19ம் தேதி, தானே தனியார் மருத்துவமனையில் இருந்தபோது, அவரது கால்கள் மற்றும் கைகள் கருமை நிறமாக மாறியதை கவனித்தார். “வயலில் ஏதேனும் விஷப்பூச்சிகள் கடித்திருக்கும் என்று கூறியபோது, நான் அதை நம்பவில்லை. ஆனால், காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது. எனது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இரு கால்களிலும், வலது கையிலும் எரிச்சல் ஏற்பட்டது. முதலில் மருத்துவர்கள் நான் குணமடைந்துவிடுவேன் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த நாள் இரவு எனது கைகள் மற்றும் கால்கள் ஜில்லென்று ஆகிவிட்டது. நான் கத்திக்கொண்டிருந்தேன். பின்னர், 19 நாட்கள் நான் கத்திக்கொண்டே இருந்தேன். கைகளைவிட, கால்களில் அதிக வலி, எரிச்சல் இருந்தது“ என்று அவர் கூறினார்.
3 நாட்கள் கழித்து, பிரதிபாவுக்கு தசை அழுகல் நோய் வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. “முதலில், மருத்துவர்களுக்கு இது எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியவில்லை. அவர்கள் நிறைய பரிசோதனைகள் செய்தனர். எனது காய்ச்சல் குறையவே இல்லை. எனக்கு வலியும் அதிகம் இருந்தது. எனது கால்களில் ஏற்பட்ட எரிச்சலால் நான் கத்திக்கொண்டேயிருந்தேன். ஒரு வாரம் கழித்து, தற்போது குணமாகி வருவதாக தெரிவித்தனர். ஏனெனில், எனது இடது கையின் 3 விரல்கள் அப்போது வரை இயங்கிக்கொண்டிருந்தன. எனது கணவருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனது மகன் அனைத்தையும் கவனித்துக்கொண்டார்“ என்று அவர் மேலும் கூறினார்.
அவர்களின் 27 வயது மகன் சுமித்தால், அவரின் விடுப்பை நீட்டிக்க முடியவில்லை. அவர் மும்பையைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்தார். தாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், வேலையையே விட்டுவிட்டார். “எனது அறுவைசிகிச்சை குறித்து அவரே அனைத்து முடிவுகளையும் எடுத்தார். அவரே அனைத்து தாள்களிலும் கையெழுத்திட்டார். அவரே உணவு ஊட்டுவார், குளிப்பாட்டுவார். அனைத்தும் செய்தார் என்று பிரதிபா நினைவு கூறுகிறார்.
கடந்தாண்டு ஜீன் இறுதியில், தானே மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவரின் வலது கரத்தை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது, “அவர்கள் அறுவைசிகிச்சையை சரியாக செய்யவில்லை. அவர்கள் வலது கையை மோசமாக துண்டித்துவிட்டனர்“ என்று சில தழும்புகளை குறிப்பிட்டு சுமித் கூறுகிறார். “அவர்கள் ஒரு கையை அறுவைசிகிச்சை செய்ய ரூ.3.5 லட்சம் பெற்றும் நன்றாக செய்யவில்லை. அம்மா வலியால் துடிப்பார்கள். இதற்கு மேல் நம்மால் இந்த மருத்துவமனையில் வைத்து செலவு செய்ய முடியாது என என் தந்தை கூறினார்“ என்று அவர் மேலும் கூறினார்.
பிவண்டியில் உள்ள பள்ளி பிரதிபாவின் 3 மாத சம்பளத்தை ஆகஸ்ட் மாதத்தில் சில செலவுகளை சமாளிப்பதற்கு கொடுத்தது. அவரின் மாத வருமானம் ரூ.40 ஆயிரம். “நாங்கள் நிறைய பணத்தை தானே மருத்துவமனையில் இழந்துவிட்டோம். அவர்கள் 20 நாட்கள் சிகிச்சைக்கு ரூ.13 லட்சம் வசூலித்தனர். எனது சகோதரர் கொஞ்சம் கடன் கொடுத்தார். பள்ளியில் உள்ள நண்பர்கள் உதவினார்கள். எனது கணவரும் கடன் வாங்கினார். நாங்கள் ஒன்றுமின்றி விடப்பட்டோம்“ என்று பிரதிபா கூறுகிறார்.
ஜீலை 12ம் தேதி வாக்கில், அவர்களால் முடிந்ததைவிட அளவுக்கு அதிகமாகவே செலவு செய்தபின்னர், பிரதிபாவின் குடும்பத்தினர், அவரை தெற்கு மும்பையில் உள்ள அரசு நடத்தும் ஜேஜே மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் ஒரு மாதம் இருந்தார். “ஜேஜே மருத்துவமனைக்கு வந்தபின்னரும் எனது இடது காலில் வலி இருந்தது. யாராவது எனது காலை தொட்டுவிட்டால், நான் கத்துவேன்“ என்று அவர் நினைவு கூறுகிறார். “9 நாட்கள் என்னால் ஒன்றுமே சாப்பிட முடியவில்லை. நான் தூங்கவில்லை. எனது கால்கள் பயங்கரமாக எரிந்தது. மருத்துவர்கள் 3 நாள் கண்காணிப்பில் வைத்துவிட்டு பின்னர் அறுவைசிகிச்சை செய்தனர்“ என்று அவர் மேலும் கூறினார்.
5 மணி நேர அறுவைசிகிச்சை முடிந்தவுடன், அவரின் எஞ்சிய ஒரு கை மற்றும் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டிருந்தன.
“அறுவைசிகிச்சை குறித்து மருத்துவர்கள் என்னிடம் கூறியபோது, நான் அதிர்ச்சியடைந்தேன்“ என்று பிரதிபா கூறுகிறார். “நான் எனது எதிர்காலம் குறித்து எண்ணத்துவங்கினேன். நான் இனிமேல் பள்ளிக்கு சென்று கற்பிக்க முடியாது. நான் முற்றிலும் வீட்டிலிருந்து, மற்றவர்களை சார்ந்தே வாழ வேண்டும். என்னால் இனி சமைக்க முடியாது என்பதை எண்ணி நான் அழுதேன். ஆனால், எனது நண்பர்களும், உறவினர்களும் என்னை தினமும் வந்து சந்தித்தனர். அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர். மருத்துவர்களும், துண்டிக்கப்பட்ட கால் மற்றும் கைகளுடனே மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம், முன்புபோல் அனைத்து வேலைகளும் செய்யலாம் என்று ஊக்கப்படுத்தினர். அவர்களே அனைத்தையும் எனக்கு சுலபமாக்கினர். நான் மிகவும் பயந்திருந்தேன். எனது பெற்றோர் கூட எனக்கு தைரியம் கொடுத்தனர். அறுவைசிகிச்சைக்குப் பின்னர் உதவினர். நான் அவர்களுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன்“ என்று பிரதிபா கூறினார்.
2019ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி ஜேஜே மருத்துவமனையில் இருந்து வந்தவுடன், பிரதிபா தனது தாயுடன் இருப்பதற்கு சென்றுவிட்டார். அவரது தாய் சுனிதா வாகுக்கு 65 வயது. விவசாயி மற்றும் இல்லத்தரசி ஆவார். பால்கர் மாவட்டம் ஜவஹர் தாலுகாவில் உள்ள சலாட்வட் கிராமத்தில், பிரதிபாவின் பெற்றோருக்கு 6 ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. அதில் அவர்கள் சோளம், அரிசி, பருப்பு மற்றும் சிறுதானியங்கள் பயிரிடுகிறார்கள். அவரின் 75 வயதான தந்தை அரவிந்த் வாக், தற்போதும் மற்ற விவசாய கூலித்தொழிலாளர்களுடன் வயல்வெளிகளில் வேலை செய்கிறார். ஊரடங்கால், அவரது குடும்பத்தினர் கார்கே கிராமத்திற்கு திரும்பிச் செல்லும் வரை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பிரதிபா அங்கு தங்கினார். (ஜவஹர் தாலுகாவில் உள்ள நீர்ப்பாசன அலுவலகம் சென்று வேலை செய்வதற்காக, கிராமத்தில் தங்கி, இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் அவரது கணவர் கார்கேவுக்கு திரும்பிச்சென்றார்).
கடந்தாண்டில் பிரதிபா 3 முதல் 4 முறை வரை ஜேஜே மருத்துவமனைக்கு தொடர்ந்து சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் நடத்தப்படும், தெற்கு மும்பையில் உள்ள அகில இந்திய உடல் மருத்துவ மற்றும் மறுவாழ்வு ஹாஜி அலி மையத்தில் இயன்முறை சிகிச்சையை துவங்கினார். அவரின் வலது கை நன்றாக குணமாகும் வரை மருத்துவர்கள் காத்திருந்தனர். அம்மையம் சலாட்வடில் இருந்து 160 கிலோ மீட்டரில் உள்ளது. அவரது மகன் சுமித் ஒருநாள்விட்டு ஒரு நாள் அவரை காரில் அங்கு அழைத்துச் செல்வார். அப்பயணம் ஒரு வழிக்கு மட்டும் 4 மணி நேரமாகும். “எனது அனைத்து காயங்களும் குணமடைந்த பின்னர் என்னை சிகிச்சைக்கு வருமாறு கூறிக்கொண்டனர். ஆனால் எனது வலது கை தினமும் வலிக்கும்“ என்று பிரதிபா நினைவு கூறுகிறார். “வீட்டு வேலைகள் அனைத்தையும் எனது மகள் மாதுரி எடுத்துக்கொண்டார். இப்போது கூட அவர்தான் எனக்கு உணவு ஊட்டிவிடுகிறார். நான் இந்த நாடாவைப்பயன்படுத்தி சாப்பிட முயற்சி செய்வேன். ஆனால், கரண்டி விழுந்துவிடும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
பிரதிபாவின் இளைய மகள் மாதுரி (25) சவான்ட்வாடி தாலுகாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மருத்துவம் படிக்கிறார். பிரதிபாவிற்கு ஜேஜே மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நடந்தபோது, மாதுரிக்கு தேர்வுகள் இருந்ததால், அவரால் பிரதிபாவிற்கு உறுதுணையாக இருக்க முடியவில்லை. “ஆனால், கடவுள் எங்கள் தாய்க்கு இரண்டாவது வாய்ப்பாக இந்த வாழ்க்கையை கொடுத்துள்ளார்“ என்று மாதுரி கூறுகிறார். “நான் இப்போது, இந்த துன்பத்தை எதிர்த்து போராட உதவி செய்கிறேன். சில நாட்கள் அவர் கை, மற்றும் கால்களை இழந்ததை எண்ணி வருந்தி அழுவார். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எங்களின் அனைத்து தேவைகளையும் அவரே நிறைவேற்றினார். தற்போது இது எங்கள் முறை, நாங்கள் இருக்கிறோம் என்று அடிக்கடி அவரிடம் கூறுவோம். நாங்கள் உங்களுக்கு கால்களாகவும், கைகளாகவும் இருப்போம் என்று கூறுவோம் என மேலும் அவர் கூறினார். பிரதிபாவின் மூத்த மகள் பிரனாளி டாரோத்தே (29), உதவி வேளாள் அலுவலராக மாவட்ட வேளாண் அலுவலகத்தில் பணிபுரிகிறார். அவருக்கு ஒரு வயதில் மகன் உள்ளார்.
பிரதிபாவும், அவரது குடும்பத்தினரும், ஹாஜி அலி மையத்திலிருந்து வரும் அவரின் செயற்கை கை, கால்களை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளனர். அங்கிருந்துதான் தற்போது அவர் இயங்குவதற்கு பயன்படுத்தும் உபகரணங்களைப் பெற்றார். “நான் எனது கைகளையும், கால்களையும் (செயற்கை) மார்ச் மாதத்தில் வாங்கிவரச்சென்றேன். அவை என்னுடைய அளவிற்கு ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டன என்று அவர் கூறுகிறார். “ஆனால், ஊரடங்கால், அவற்றை சில மாதங்களுக்குப்பின்னர் வந்து பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறிவிட்டனர். மையம் திறந்தவுடன் எனக்கு மீண்டும் பயிற்சியும் கிடைக்கும். கைகளும், கால்களும் எனக்கு பொருத்துவார்கள் என்று அவர் மகிழ்ச்சியுடன் மேலும் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் முதல் பிரதிபாவின் இரண்டு கால்களின் முட்டியிலும் அவர் இயங்குவதற்கு உதவும் ரப்பர் கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. “அம்மையம் இதை வழங்கியுள்ளது. ஏனெனில் இது எனக்கு நடப்பதற்கும், விழுந்துவிடாமல் சமநிலையில் இருப்பதற்கும் உதவுகிறது. ஆரம்பத்தில் இதை அணிந்துகொள்ளும்போது கால்களில் உறுத்தியது. இதனுடன் நடக்கப்பழகுவதற்கு எனக்கு ஒரு மாதமானது“ என்று அவர் கூறுகிறார். அம்மையம் மேலும் அவருக்கு எவ்வாறு நடப்பது, அமருவது, நிற்பது மற்றும் மற்ற அடிப்படை விஷயங்களை, செயற்கை கை, கால்களை பயன்படுத்தி எவ்வாறு செய்வது என்று கற்றுக்கொடுத்தது. மேலும் அவரது தசைகளை வலுப்படுத்தும், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தது. மேலும் வெல்க்ரோ நாடா இனணக்கப்பட்ட கைகள் மூலம் கரண்டி, பேனா, சாக்பீஸ் போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்றும் அங்கு அவருக்கு கற்பிக்கப்பட்டது.
அவரின் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட பின்னர், அவரது ஆசிரியப்பணியும் தடைபட்டது. பின்னர் மார்ச் மாதத்தில் கோவிட் – 19 ஊரடங்கும் போடப்பட்டது. கிராமத்தில் உள்ள குழந்தைகள் ஊரடங்கு காலத்தில் படிக்க முடியாமல் சிரமப்படுவதை அவர் உணர்ந்தார். அவர் அக்குழந்தைகள் அங்குமிங்கும் சுற்றுவதோ அல்லது வயல்களில் வேலை செய்வதையோ பார்த்தார். “இவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்றால் என்னவென்று புரியாது. அவர்கள் எவ்வாறு ஆன்லைன் கல்வி கற்க செல்போன் வாங்குவார்கள்“ என்று அவர் கேட்கிறார்.
எனவே அவர் அக்குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்க முடிவெடுத்தார். “ஆதிவாசி குழந்தைகளின் சூழ்நிலை இங்கு மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் இரண்டு வேளை மட்டுமே உணவு உண்பார்கள். சில நேரங்களில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கும் சேர்த்து என் மகள் உணவு சமைப்பார். நாங்கள் அவர்களுக்கு வழக்கமாக வாழைப்பழங்கள் கொடுப்பபோம். விஷேச நாட்களில் கத்வியும், சாக்லேட்களும் கொடுப்போம்“ என்று அவர் கூறுகிறார்.
ஆனால், “நிறைய குழந்தைகள் அறுவடை காலத்தையொட்டி, எனது வீட்டில் நடக்கும் பள்ளி கூடத்திற்கு வருவதில்லை. அவர்களின் பெற்றோர் அவர்களை வயல்களுக்கு அழைத்துச்சென்றுவிடுகின்றனர் அல்லது பெரிய குழந்தைகள் தங்களின் இளவல்களை கவனித்துக்கொள்வதற்காக வீடுகளிலே இருந்துவிடுகின்றனர். “எனக்கு மட்டும் கால்கள் இருந்தால், கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சென்று பிள்ளைகளை படிக்க என்னிடம் அனுப்புங்கள் என்று கேட்பேன்“ என அவர் மேலும் கூறுகிறார்.
ஆகஸ்ட் மாதம் 2020ம் ஆண்டு பிரதிபா பிவண்டியில் இருந்து கார்கேவுக்கு இடமாற்றம் கோரியிருந்தார். அவர் இப்போதும் வேலையில்தான் இருக்கிறார். 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை கிடைத்த மூன்று மாத சம்பளத்திற்குப்பின்னர், தற்போது அவருக்கு கட்டணமில்லாத விடுப்பு கிடைத்துள்ளது. “பள்ளிகள் திறக்கும் வரை நான் எனது வீட்டிலே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பேன்“ என்று அவர் கூறுகிறார். செயற்கை கை, கால்கள் அவருக்கு அவரது வேலையை தொடர உதவும்“ என்று உறுதியாக கூறுகிறார்.
“நான் எனது சொந்தக்காலில் நிற்க வேண்டும். நான் மீண்டும் பள்ளிக்குச் சென்று கல்வி கொடுக்க வேண்டும். நான் எனது வேலைகளை தானாகவே செய்துகொள்ள வேண்டும்“ என்று அவர் கூறுகிறார். “பள்ளிதான் எனது உலகம். குழந்தைகளுடன் இருக்கும்போது நான் வழக்கம்போல் இயல்பாக இருப்பதாகவே உணருகிறேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார். அவர் தொடர்ந்து சோபாவிலிருந்து எழுந்து, வாசல் கதவுக்கு அருகில் நிற்கும் என்னை பார்க்க முயல்கிறார். ஆனால் அவரது ரப்பர் கால்கள் இணைக்கப்படாததால், அவரால் நிற்கமுடியாமல் விழப்போகிறார். ஆனாலும் எழுந்து நிற்க முயற்சி செய்கிறார். முடியாததால், சோகமாகிறார். “அடுத்த முறை நீங்கள் வரும்போது எங்களுடன் உணவு அருந்துங்கள்“ என்று அவர் கூறுகிறார். சோபாவில் இருந்து பின்னால் திரும்பி நமக்கு கையசைத்து வழியனுப்புகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.