”சில நேரங்களில் ஒரு பெண் என்னை தொடர்பு கொள்வார் அல்லது அவரது ஆண் உறவினரை இரவில் ஆணுறை பாக்கெட் வாங்க என் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்,” என்கிறார் கலாவதி சோனி. பின்னிரவு நேரங்களாக இருந்தாலும் இந்த 54 வயது ‘கிடங்கு அக்கா’ கவலைப்படுவதில்லை. பெண்களின் அத்தியாவசியங்களை அவர்தான் திகாரி கிராமத்தில் வழங்குகிறார். “இரவில் கூட என்னை அணுகலாம்,” என்கிறார் அவர் உத்தரப்பிரதேசக் கிராமத்திலிருக்கும் அவரின் சிறுவீட்டு வராண்டாவில் ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து நகைச்சுவையாக. “இது ஒன்றும் பெரிய விஷயமில்லை,” என தன் வேலையைப் பற்றி சொல்கிறார் கலாவதி.
கிராமத்தில் செயல்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் கூறிய ‘கிடங்கு அக்கா’ என்கிற வார்த்தைக் கொடுத்த ஆர்வத்தில் நாங்கள் அவரின் வீட்டுக்குச் சென்றோம். “ஏய்.. போய் அந்தப் பையை எடுத்து வா,” என கலாவதி அவரின் பேரனை அழைக்கிறார். நொடிகளில் அச்சிறுவன் இரண்டு மாடிக் கட்டடத்துக்குள்ளிருந்து புடைத்திருக்கும் ஒரு பிளாஸ்டிக் பையுடன் ஓடி வருகிறான். பல ஆணுறைகள், சானிடரி நாப்கின்கள், கருத்தடை மாத்திரைகள், நீர்ச்சத்து திரவப் பாக்கெட்டுகள் பையிலிருந்து வெளியே விழுகின்றன. அவற்றை அவர், கயிற்றுக்கட்டிலில் பார்வைக்கு வைப்பது போல் வரிசையாக அடுக்குகிறார்.
“இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல,” என அவர் அலட்சியமாக சொல்கிறார். “முதலில் நான் வீடு சம்பந்தப்பட்ட சிறு விஷயங்களைப் பேசுவேன். அவர்களின் குடும்பச் சூழல், மாமியார் மீதான புகார்கள், குழந்தைகள் பற்றிக் கொஞ்சம் போன்ற விஷயங்களை நாங்கள் பேசுவோம். நான் நன்றாகப் பேசக் கூடியவள். மெல்ல இந்த உரையாடல்களின் மூலம் எல்லா பெண்களும் ஒரே பிரச்சினைகளைதான் எதிர்கொள்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளலாமே என தொடங்கினேன். அவ்வளவுதான்,” என்கிறார் திகாரி கிராமத்தின் ‘கிடங்கு அக்கா’வாக அவர் எப்படி ஆனார் என்பதைப் பற்றி.
‘கிடங்கு அக்கா’ என்ற பெயர், சுகாதார முறைகளுக்கான அத்தியாவசியங்களைப் பெண்களுக்கு வழங்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் பெயர். ஆனால் கலாவதி அங்கன்வாடி ஊழியரோ சுகாதார செயற்பாட்டாளரோ இல்லை. அவர்கள்தான் கிராமங்களின் கிடங்குகள் நடத்துபவர்களாக இருப்பவர்கள். உரிமமற்ற மருத்துவப் பயிற்சியாளரும் அவர் இல்லை. அடிப்படையான இனவிருத்தி சுகாதாரத்துக்கு தேவைப்படும் எல்லா விஷயங்களையும் அவர் வாங்கி வைத்திருப்பார். பெண்களின் இனவிருத்தி மற்றும் பாலுறவு பிரச்சினைகளைப் பற்றியும் அவர்களுடன் பேசுவார்.







