தேசிய நெடுஞ்சாலை 30ல் நீங்கள் சட்டிஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து பாஸ்டர் மாவட்ட தலைநகர் ஜக்தல்பூருக்கு செல்லும் வழியில், கான்கெர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் ச்சர்மா. அதற்கு முன்னர், ஒரு மலைக்கணவாய் உள்ளது. சில வாரங்களுக்கு முன், அங்கு காரில் சென்றபோது, 10 முதல் 15 கிராமத்தினரை பார்த்தேன். அதில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்கள் அருகில் உள்ள காடுகளிலிருந்து விறகுகளை சேகரித்து தலையில் சுமந்து வந்தார்கள்.
அந்த நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அந்தப்பெண்கள். அவை கான்கெர் மாவட்டத்தில் உள்ள கொச்வாஹி மற்றும் பாலோட் மாவட்டத்தில் உள்ள மாச்சந்தூர் ஆகும். அதில் பெரும்பாலானோர் கோண்ட் பழங்குடிகள். அவர்கள் வேளாண் கூலித்தொழிலாளர்களாகவும், சிறு விவசாயிகளாகவும் உள்ளனர்.
அந்தக்குழுவில் உள்ள சில ஆண்கள் சைக்கிளில் விறகுகளை எடுத்துச்செல்கின்றனர். ஒரு பெண்ணைத்தவிர மற்ற பெண்கள் தலையில் சுமந்து வருகிறார்கள். நான் அவர்களிடம் பேசினேன். அவர்கள் அதிகாலையிலே கிளம்பி விறகு சேகரிக்கச்சென்றுவிட்டு, காலை 9 மணியளவில் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதாக கூறினார்கள். பெரும்பாலும் அவர்கள் ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் செல்கிறார்கள்.
அவர்கள் அனைவருமே வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே விறகுகள் சேகரிக்கவில்லை. சிலர் அவற்றை சந்தையில் விற்பதற்காகவும் சேகரிப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்தவர்கள் இப்பகுதியில் அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் இந்த விறகுகுள் விற்பதன் மூலம் கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறார்கள். நெருக்கடி நிறைந்த இப்பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு இது ஒரு வழியாகும்.
தமிழில்: பிரியதர்சினி. R.