ஹது பஹேராவிற்கு தினசரி 12 மணி நேரத்திற்கு ஒரு “வீடு” சொந்தமாக இருக்கிறது. 51 வயதாகும் இந்தத் தறி தொழிலாளர், வடக்கு சூரத்தின் வேத் ரோட்டில் உள்ள ஒரு மங்கலான அறையில் ஆறுக்கு மூன்று அடி இடத்தில் வசிக்கிறார்.
அடுத்த 12 மணி நேரத்திற்கு, இதே இடத்தை அவரது சகத் தொழிலாளி உபயோகப்படுத்திக் கொள்வார். இது அவர்களது வேலைநேரத்தை பொறுத்தது - காலை 7 மணி முதல் மாலை 7 வரை அல்லது அதற்கு எதிர்மறையாக. எப்பொழுதாவது வரும் ‘விடுமுறை’ நாட்கள், அதுவும் மின்தடை இருக்கும் சமயங்கள், அச்சம் தரக்கூடியவை. அந்த நாட்களில், பஹேரா தற்போது இடத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் மஹாவீர் மெஸ்ஸில், கிட்டத்தட்ட 60 பணியாளர்கள் ஒரு 500 சதுர அடி இடத்தில் அடைந்துக் கிடக்க வேண்டும்.
வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடிய கோடைக் காலங்கள் கொடூரமானவை. “சில ஹால்கள் (தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பெரிய அறைகள்) இருட்டாகவும் காற்றோட்டம் இல்லாமலும் இருக்கும்,” என்று 1983 ஆம் ஆண்டு ஒரிசாவின் கஞ்சம் மாவட்டத்தின் புருசோத்தம்பூர் பிளாக்கில் உள்ள குசலப்பள்ளி கிராமத்திலிருந்து சூரத்திற்கு வந்த பெஹெரா கூறுகிறார். “பகல் முழுவதும் தறியில் கடினமாக வேலை செய்த பிறகும், எங்களால் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியாது”.
பெஹெராவைப் போலவே, ஒரிசாவின் கஞ்சம் மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்த சூரத்தின் விசைத்தறி தொழிலாளர்கள் பலரும், இது போன்ற விடுதிகள் அல்லது ’மெஸ் அறை’களில் தான் வசிக்கிறார்கள். (பார்க்க: செயற்கை த் துணி, அசலான வலி ) கஞ்சமுக்கு தங்கள் வருடாந்திர விடுமுறைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, முதலில் வருபவர்களுக்கு முதல் வாய்ப்பு என்கிற அடிப்படையில் இங்கே இடம் கிடைக்கும். பெரும்பாலும் தொழிற்துறை பகுதிகளிலேயே உள்ள இந்த அறைகள், சில சமயம் தறி ஆலைகளில் இருந்து சில மீட்டர் தூரத்தில் இருக்கும். கடினமான 12 மணி நேர வேலை நேரத்தை முடித்துவிட்டு, தங்களது தற்காலிகப் படுக்கைகளில் ஓய்வெடுக்கும் போது கூட இயந்திரங்களின் உயர் டெசிபல் கட-கட சத்தம் இவர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
கஞ்சமில் இருந்து குறைந்தது 800,000 தொழிலாளர்கள் சூரத்தில் வசிக்கிறார்கள் என்று சூரத் ஓடியா நலச்சங்கம் கணக்கிட்டுள்ளது. குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவின் புலம்பெயர் தொழிலாளர்களுடன் பணியாற்றும் ஆஜீவிகா பணியகம், 600,000-திற்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் நகரத்தில் உள்ள 15 லட்சம் தறி இயந்திரங்களில் வேலை செய்கிறார்கள் என்று கணக்கிடுகிறது.
இவர்கள் 500 முதல் 800 சதுர அடி அளவுள்ள அறைகளில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு அறையிலும் இரண்டு ஷிப்ட்களுக்கு இடையில், 60 முதல் 100 தொழிலாளர்கள் சுழற்சி முறையில் தங்குகிறார்கள். நைந்து போன, சில சமயம் மூட்டைப்பூச்சிகள் நிறைந்த படுக்கைகளில் படுத்து உறங்குகிறார்கள். அழுக்கடைந்த சுவர்களில் நசுக்கப்பட்ட மூட்டைப்பூச்சிகளின் ரத்தக் கறைகள் ஆங்காங்கே தெரிகின்றன. சில சுவர்களில், தொழிலாளர்கள் தங்கள் பெயர்களை ஓடியாவில் எழுதி வைத்துள்ளனர். இங்கே கறையான்களையும், சில நேரம் அங்கும் இங்கும் ஓடும் எலிகளையும் கூடப் பார்க்கலாம். கோடை காலத்தில் இந்தத் தொழிலாளர்கள் வெறும் தரையிலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்களின் மீதோ தான் படுக்க விரும்புகிறார்கள். படுக்கைகள் பகிர்ந்து கொள்ளப்படுவதால், அவை வியர்வையில் ஈரமாகி துர்நாற்றம் வீசுவது தான் காரணம்.
பகிர்ந்து கொள்ளப்படும் ஒவ்வொரு இடத்தின் தலைமாட்டிலும், பெட்டிகளும் பைகளும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சராசரியாக மூன்று மாற்று உடைகள் மற்றும் சில தனிப்பட்ட பொருட்கள் தவிர, இவற்றில் குளிர்ந்த இரவுகளில் உபயோகிக்க மெல்லிய போர்வை ஒன்று, கொஞ்சம் பணம் மற்றும் கடவுள் படங்கள் ஆகியவை இருக்கிறது..
அனைத்து அறைவாசிகளின் உபயோகத்திற்கென்று, ஒவ்வொரு அறையின் மூலையிலும் இரண்டு கழிப்பறைகள் இருக்கின்றன. சமையலறை பொதுவாக கழிப்பறைகளின் அடுத்துதான் இருக்கும். குடிப்பதற்கு, குளிப்பதற்கு மற்றும் சமைப்பதற்கான நீர் ஒரே இடத்திலிருந்துதான் வருகிறது. பெரும்பாலான மெஸ்களில் நீர் தொட்டிகளிலோ பிளாஸ்டிக் ட்ரம்களிலோ சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் முறையாக வருவதில்லை என்பதால் தொழிலாளர்களால் தினசரி குளிக்க முடிவதில்லை.
ஒவ்வொரு அறையிலும் உள்ள ஒன்றிரண்டு மின்விசிறிகள் வெப்பத்தைக் குறைப்பதற்கு ஒன்றுமே செய்வதில்லை. நகரின் மையத்தில், மஹாவீர் மெஸ் அமைந்துள்ள பகுதியில், மின்தடை அரிது. ஆனால், அஞ்சனி மற்றும் சயான் போன்ற புறநகர் பகுதிகளில், வாரத்திற்கு ஒருமுறை தக்ஷின் குஜராத் வித்யுத் கம்பெனி லிமிடெட் 4 முதல் 6 மணி நேரம் வரை மின்சாரத்தை நிறுத்தி விடுவதுண்டு. மேலும் மஹாவீர் மெஸ்ஸில் மூன்று ஜன்னல்கள் உள்ளன. இதனால் எல்லோராலும் அதிகம் விரும்பப்படும் இடமாக அது இருக்கிறது. சில மெஸ் அறைகளில் ஜன்னல்களே கிடையாது. உதாரணமாக வடக்கு சூரத்தின் ஃபுல்வாடி பகுதியில் உள்ள காஷிநாத் பாய் மெஸ்சின் சில அறைகள். நீண்ட செவ்வக வடிவ ஹால்களின் ஒரு கோடியில் இருக்கும் ஒரு சிறிய கதவின் வழியாக மட்டும் சிறிது காற்றும் வெளிச்சமும் உள்ளே வரும்.
மோசமான காற்றோட்டம், நெருக்கடியான தங்குமிடம் மற்றும் நீர்த் தட்டுப்பாடு ஆகியவை காரணமாக அடிக்கடி நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன. பிப்ரவரி 2018-ல், 28 வயது விசைத்தறித் தொழிலாளரான கிருஷ்ண சுபாஷ் கௌட், 18 மாதங்களுக்கு முன் பீடித்த காசநோயின் காரணமாக மரணமடைந்தார். இவர் ஃபுல்வாடியில் இருக்கும் ஷம்புநாத் சாஹுவின் ஒரு மெஸ் அறையை 35 பேருடன் பகிர்ந்து கொண்டிருந்தார். காசநோய் பாதித்தவுடன் அவர் கஞ்சமிற்கு திரும்பச்சென்று காசநோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள ஆரம்பித்தார். ஆனால் பணத்தட்டுப்பாடு காரணமாக, மீண்டும் சூரத்திற்கே திரும்பிவிட்டார். இங்கே அவரால் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள முடியவில்லை. மேலும் நெருக்கடி மிகுந்த அறைகளில் நிம்மதியாக உறங்குவது கூட அவருக்கு கடினமாக இருந்தது.
“காசநோய் போன்ற வியாதிகள் அதிவேகமாக தொற்றக்கூடியவை. மேலும் மெஸ் அறைகளில் உள்ள இட நெருக்கடியிலிருந்தும் அழுக்கிலிருந்தும் தப்பிச்செல்ல வழியும் கிடையாது”, என்று கூறுகிறார் சூரத் ஆஜீவிகா பணியகத்தின் மைய ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் படேல். இவர் கௌட் குடும்பத்துக்கு நஷ்டஈடு பெற்றுத்தர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். “கௌட் தனது அறையில்தான் உயிரிழந்தார், ஆலையில் இல்லை என்ற காரணத்தினால் அவருடைய முதலாளி நஷ்டஈடு வழங்க மறுக்கிறார். ஆனால் பணியிடம் மற்றும் வாழ்விடம் இரண்டும் மிக நெருக்கமாக இணைந்து இருப்பதால், இந்தச் சுரண்டலை பிரித்துப்பார்ப்பது மிகவும் கடினம்”.
இது நடந்து வெறும் நான்கு மாதங்களுக்குள், ஜூன் 2018 இல், கஞ்சமின் புகுடா தாலுகாவில் உள்ள பிரஞ்சிபூர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதான சந்தோஷ் கௌடா என்ற விசைத்தறி தொழிலாளர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். காய்ச்சல், சளி மற்றும் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே இவர் மினா நகரிலிருக்கும் பகவான் பாய் மெஸ்ஸில் உள்ள கழிப்பறையின் உள்ளே இறந்து விட்டிருந்தார். “அவர் மருத்துவரிடம் கூட செல்லவில்லை”, என அவருடைய அறையில் தங்கியிருக்கும் சக பணியாளர் ஒருவர் கூறுகிறார். “அவர் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக சூரத்தில் இருக்கிறார். ஆனால் அவருக்கு இங்கே உறவினர்களோ நெருங்கிய நண்பர்களோ யாரும் கிடையாது. அவருடைய உடலை வீட்டிற்கு அனுப்பாமல், நாங்களே இங்கே சூரத்தில், இறுதிச் சடங்குகளை நடத்திவிட்டோம்.”
கட்டிடங்களின் மேல் தளங்களில் அமைந்திருக்கும் சில அறைகளில் ஒரு பக்கம் திறந்தேயிருக்கும் என்றும் கூறப்படுகிறது. “தொழிலாளர்கள் தவறி விழுந்து இறந்த சம்பவங்களும் உண்டு”, என்கிறார் ஆஜீவிகா பணியகத்தின் பொதுச் சுகாதார மருத்துவர் மற்றும் ஆலோசகரான டாக்டர் ரமணி அட்குரி. இவர் மேலும் கூறுவது, “மெஸ் அறைகள் நெரிசல் மிகுந்ததாகவும், போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் இல்லாமலும் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலை சொறி சிரங்கு, தோல் வியாதிகள், மலேரியா மற்றும் காசநோய் போன்ற தொற்றுநோய்கள் பரவுவதற்கு உகந்ததாக இருக்கிறது”.
ஆனால் அரசு “பணியிடம்” மற்றும் “தங்குமிடம்” இரண்டுக்கும் இடையேயான வரையறையை தெளிவாக வகுத்து வைத்துள்ளது.சூரத்தின் விசைத்தறி சேவை மைய (மத்திய ஜவுளி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது) முன்னாள் உதவி இயக்குனர் நிலாய் எச்.பாண்டியா சொல்கையில், நஷ்டஈடு மற்றும் காப்பீட்டு பலன்கள் தொழிற்சாலைக்குள் நிகழும் விபத்து மற்றும் மரணங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்கிறார். “விசைத்தறி துறையில் அதிகாரம் மிகவும் பரவலாக்கப்பட்டுள்ளது”, என்கிறார் பாண்டியா. இவர் சூரத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கான அமைச்சகத்தின் குழு காப்பீட்டுத் திட்டத்தை மேற்பார்வை செய்துகொண்டிருந்தவர். “காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 10 சதவிகித தொழிலாளர்கள் கூட பதிவு செய்யப்படவில்லை”.
இந்தத் திட்டம் ஜூலை 2003 இல் தொடங்கப்பட்டது. இதில் தொழிலாளி வருடாந்திர தவணையாக ரூ.80 செலுத்துவார் (அதனுடன் அரசு அளிக்கும் ரூ.290 மற்றும் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.100 ம் சேர்க்கப்படும்). இதிலிருந்து அவர் அல்லது அவரது குடும்பத்தினர், இயற்கை மரணம் அடைந்தால் ரூ.60,000ம், விபத்து காரணமாக மரணம் என்றால் ரூ 1,50,000ம், நிரந்தர முழு ஊனம் என்றால் ரூ 1,50,000ம், நிரந்தரப் பகுதி ஊனம் என்றால் ரூ 75,000 வரையும் உரிமை கோரலாம். “இருப்பினும், அவர்கள் தங்கியிருக்கும் அறைகள் எங்கள் பணி வரம்பிற்குள் வராது”, என்கிறார் பாண்டியா.
இத்தகைய அறைகளில் ஒன்று தான், 70 தொழிலாளர்கள் (சுழற்சி முறையில்) தங்கியிருக்கும் ஷம்புநாத் சாஹுவின் மெஸ். இது ஃபுல்வாடி தொழிற்துறைப் பகுதியின் மையத்தில், ஐந்து தளங்களையும், தளத்திற்கு எட்டு அறைகளையும் கொண்ட ஒரு கட்டிடத்தில் அமைந்துள்ளது. அறைகளுக்குள் தறிகளின் உரத்த சத்தம் எப்போதும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும். எந்நேரமும் உடைந்துவிடலாம் என்றிருக்கும், அழுக்கும் சகதியும் நிறைந்தப் படிக்கட்டுகளில் அடுப்புகளில் வெந்துகொண்டிருக்கும் அரிசியும் பருப்பும் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். மெஸ் மேனேஜர்கள் அறைகளை மட்டும்தான் சுத்தம் செய்வார்கள் என்பதால், தாழ்வாரங்கள் மற்றும் படிக்கட்டுகளில் குப்பைக் கூளங்கள் நிறைந்து இருக்கும். மேலும் சூரத் மாநகராட்சியின் குப்பை வேன்கள் இந்தப் பகுதிகளுக்கு ஒழுங்காக வருவதில்லை என்பதாலும், வாரக்கணக்கில் குப்பைகள் மலை போல் குவிந்துக் கிடக்கும்.
மழைக்காலங்களில், தெரு மட்டத்திற்கு கீழே இருக்கும் கட்டிடங்களின் தாழ்வாரங்களிலும் அறைகளிலும் சில நேரங்களில் தண்ணீர் புகுந்து விடும். அந்நேரங்களில் தொழிலாளர்களுக்கு துணிகளை உலர்த்துவது கடினம். “வேறு வழியில்லாமல் நாங்கள் ஈரத்துணிகளை அணிந்துகொண்டு வேலைக்குச் செல்வோம்,” என்று கூறுகிறார் 52 வயது ராமசந்திர பிரதான். போலசரா பிளாக்கில் உள்ள பாலிச்சாய் கிராமத்தில் இருந்து வரும் தறித் தொழிலாளரான இவர் முப்பதாண்டுகளாக சூரத்தின் மெஸ் அறைகளில் வாழந்து வருகிறார்.
மற்ற அறைகளைப் போலவே, சாஹுவின் 500 சதுர அடி மெஸ்ஸிலும் பெரிய பாத்திரங்கள் கொண்ட ஒரு சமையலறை, ஒரு பூஜை அறை, இரண்டு கழிப்பறைகள், காய்கறிகள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரிசி மூட்டைகள் – இவற்றுடன் 35 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது சாமான்களும் உள்ளன. கஞ்சமின் போலசரா பிளாக்கில் உள்ள சனபாராகம் கிராமத்திலிருந்து வந்திருக்கும் புலம்பெயர் தொழிலாளரான சாஹு, இங்கே தொழிலாளர்களுக்கு “சத்தான உணவு” வழங்கப்படுகிறது. மேலும் மெஸ் அறைகளும் “சுத்தமாக” பராமரிக்கப்படுகின்றன என்று கூறுகிறார்
48 வயதான ஷங்கர் சாஹு, ஃபுல்வாடியின் சஹயோக் தொழிற்துறைப் பகுதியில் இருக்கும் மற்றொரு மெஸ்ஸின் மேனேஜர். போலசரா பிளாக்கில் உள்ள நிமினா கிராமத்தில் இருந்து வந்திருக்கும் இவர் கூறுவது, “ஒவ்வொரு வாரமும், நான் 200 கிலோ உருளைக்கிழங்கு வாங்க வேண்டியதிருக்கிறது. தினசரி இரண்டு வேளை உணவு சமைத்து 70 பேருக்கு உணவு வழங்குகிறேன். நாங்கள் அவர்களுக்கு சரியாக உணவளிக்கவில்லை என்றால் தொழிலாளர்கள் கோபமடைந்து விடுவார்கள்”. ஒரு சமையல்காரரின் உதவியுடன் சாஹு தினசரி சாதம், பருப்பு, காய்கறி மற்றும் குழம்பு ஆகியவற்றைத் தயார் செய்கிறார். “நான் வாரத்திற்கு இரண்டு முறை மீன், முட்டை மற்றும் கோழியும் கொடுக்கிறேன்”. இறைச்சி மாதம் ஒரு முறை வழங்கப்படுகிறது.
மீண்டும் மீண்டும் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அதே சமையல் எண்ணையும் கூட தொழிலாளர்களின் உடல் நலத்தை பாதிக்கிறது. மார்ச் 2018 இல் ஆஜீவிகா பணியகம், மினா நகர் மற்றும் ஃபுல்வாடியில் உள்ள 32 மெஸ் அறைகளில் வசிப்பவர்களின் உணவு முறையை ஆய்வு செய்தது. அதில் தெரியவந்தது என்னவென்றால், இவர்கள் தினசரி உட்கொள்ளும் கொழுப்பின் அளவு ‘பரிந்துரைக்கப்பட்ட உணவுக் கொடுப்பனவில்' 294 சதவிகிதமாக இருக்கிறது மற்றும் தினசரி உட்கொள்ளும் உப்பின் அளவு 376 சதவிகிதமாக இருக்கிறது. “வயதான தொழிலாளர்களிடைய உயர் இரத்த அழுத்தம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் எல்லா வயதினரிடையேயும் மோசமான லிப்பிட் புரொஃபைல் (கெட்ட கொழுப்பு) காணப்படுகிறது”, என்று டாக்டர் அட்குரி கூறுகிறார்.
இந்த மெஸ் அறைகள் பொதுவாக உள்ளூர் வியாபாரிகளுக்குச் சொந்தமானது. அவர்கள் இவற்றை மேனேஜர்களுக்கு (பெரும்பாலும் கஞ்சமிலிருந்து வருபவர்கள்) வாடகைக்கு விடுகிறார்கள். மேனேஜர்கள் மெஸ் உரிமையாளர்களுக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வாடகை செலுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஒவ்வொரு தொழிலாளரிடமிருந்தும் சாப்பாடு மற்றும் வாடகைப் பணமாக மாதம் ரூ.2500 வசூலிக்கிறார்கள்.
“அறைகளில் தங்கவைக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு எந்த உச்ச வரம்பும் கிடையாது. எவ்வளவு அதிகமாக தொழிலாளர்களை தங்க வைக்கிறோமோ அவ்வளவு அதிகமாக எங்களுக்கு வருமானம் கிடைக்கும்”, என்கிறார் ஃபுல்வாடியில் உள்ள காஷிநாத் பாய் மெஸ்ஸின் உரிமையாளர் மற்றும் மேனேஜரான 52 வயது காஷிநாத் கௌடா. “தொழிலாளர்கள் இரண்டு ஷிப்ட்களில் வருகிறார்கள் என்றாலும் மேனேஜர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதில்லை. ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தறிகளில் வேலை செய்வதைவிட இது எவ்வளவோ மேல்”. கௌடா 1980 களின் மத்தியில் போலசரா பிளாக்கில் உள்ள டென்டுலியா கிராமத்திலிருந்து சூரத்துக்கு வந்தார். “நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த கட-கட இயந்திரத்தில் வேலை செய்திருக்கிறேன். கடினமான வேலை அது. பணம் சேமிப்பது இயலாத காரியம்”, என அவர் கூறுகிறார். “பத்து வருடங்களுக்கு முன் நான் ஒரு மெஸ் அறையை நிர்வகிக்க ஆரம்பித்தேன். தொழிலாளர்கள் இரண்டு ஷிப்ட்களில் வருவதால், 24 மணி நேர வேலை அது. மேலும் மெஸ்ஸை நிர்வகிப்பது சவாலான வேலை. சில சமயம் தொழிலாளர்கள் மூர்க்கமாக நடந்து கொள்வார்கள், வன்முறையிலும் ஈடுபடுவார்கள். ஆனால் தறிகளை விட இந்த வாழ்க்கை நிச்சயமாக சிறந்தது. வருடத்திற்கு ஒரு முறை என்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்க்க வீட்டிற்கு சென்று வருவேன். இன்னும் சில வருடங்களில் என்னுடைய பிள்ளைகளுக்கு வேலை கிடைத்ததும் என்னுடைய கிராமத்திற்கே திரும்பிச் சென்றுவிடலாம் என்று நினைத்திருக்கிறேன்.”
கடினமான வேலை நேரம் மற்றும் கொடுமையான வாழக்கைச் சூழல் காரணமாக பல தொழிலாளர்கள் குடியை நோக்கிச் செல்கிறார்கள். குஜராத்தில் மது தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் தொழிற்துறை பகுதிகளில் உள்ள சிறிய இடங்களில் 20 ரூபாய்க்கு 250 மி.லி. என்று பாலிதீன் பைகளில் ரகசியமாக விற்கப்படும் நாட்டுச் சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள்.
“பல இளம் தொழிலாளர்கள் குடியை நோக்கி தள்ளிவிடப்பட்டுள்ளார்கள்”, என்று வடக்கு சூரத்தின் அன்ஜனி தொழிற்துறைப் பகுதியில் இருக்கும் பகவான் மெஸ்சை நிர்வகிக்கும் சுப்ரத் கௌடா கூறுகிறார். “ஷிப்ட் முடிந்தவுடன் அவர்கள் நேராக சாராயக் கடைகளுக்குச் சென்று விடுகிறார்கள். அறைகளுக்கு திரும்பி வந்த பிறகு அவர்களை சமாளிப்பது கஷ்டம். அவர்கள் கத்தி கலாட்டா செய்து சண்டையிடுவார்கள்.” அருகிலுள்ள மற்றொரு மெஸ்ஸை நிர்வகிக்கும் பிரமோத் பிசோயி மேலும் கூறுவது, “இந்தத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து விலகி தனிமையான மற்றும் கடினமான வாழக்கை நடத்துகிறார்கள். இந்தத் தொழிலில் வேறு பொழுதுபோக்குக்கோ ஓய்வுக்கோ வழி இல்லை. இந்தக் கொடுமையான உலகத்திலிருந்து தற்காலிகமாக தப்பிக்க மது மட்டுமே அவர்களின் ஒரே வழியாக இருக்கிறது.”
போலசரா பிளாக்கின் சனபாரகம் கிராமத்திலிருந்து வந்திருக்கும் கன்ஹூ பிரதான் குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வர போராடிக் கொண்டிருக்கிறார். “நான் வாரத்திற்கு மூன்று முறை குடிப்பேன். நீண்ட நேரம் வேலை செய்துவிட்டு வேறு எப்படி என்னால் களைப்பை போக்கிக்கொள்ள முடியும்?” என ஃபுல்வாடியின் சஹயோக் தொழிற்துறை பகுதியில் இருக்கும் ஆலையில் வேலை செய்துவிட்டு திரும்பும் இந்த 28 வயது இளைஞர் கேட்கிறார். “பணம் சேமித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்கிற இடைவிடாத அழுத்தத்தையும் சுமந்து கொண்டிருக்கிறேன். அதிகமாக குடிப்பது நல்லதல்ல என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் என்னால் இந்த பழக்கத்தை விட முடியவில்லை”.
மாலை 6 மணி. வேத் சாலையில் உள்ள விசைத்தறிக்கு தன்னுடைய இரவு நேர ஷிப்ட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார் 38 வயது ஷியாமசுந்தர் சாஹு - 22 ஆண்டுகளாக இது அவருடைய வழக்கம். “நான் 16 வயதில் இங்கே வந்தேன். அப்போதிருந்து, வருடத்திற்கு ஒரு முறை பாலிச்சாய் கிராமத்திலிருக்கும் என்னுடைய வீட்டிற்குச் சென்று வரும் நாட்களைத் தவிர, நான் இதே மாதிரிதான் வேலை செய்தும் வாழ்ந்தும் வந்து இருக்கிறேன்,” என்று மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான அவர் கூறுகிறார். “நான் இத்தனை ஆட்களுடன் இப்படி ஒரு அறையில் வாழ்கிறேன் என்று என்னுடைய குடும்பத்துக்குத் தெரியாது. எனக்கு வேறு வழி கிடையாது. சில சமயம், தறியில் நீண்ட ஷிப்ட் வேலை செய்வது, இங்கிருப்பதை விட மேல் என்று தோன்றும்.” என்று கூறிவிட்டு அவர் தனது “வீட்டில்” இருந்து 10 அடி அகல ரோட்டைக் கடந்து தொழிற்சாலைக்குள் நுழைகிறார்.
தமிழில்: சுபாஷிணி அண்ணாமலை