"மக்களின் ரசனை மாறி விட்டது, ஆனால் நாங்கள் மாறவில்லை", என்று பெருமூச்சு விடுகிறார் மங்களா பன்சோட். இப்போது பிரபலமான ஹிந்தி பாடல்களையே பார்வையாளர்கள் எங்களிடம் விரும்பி கேட்கின்றனர், என்று அவர் கூறுகிறார். " சிவாஜி மஹாராஜாவின் அறிமுகத்திற்குக் கூட நாங்கள் ஒரு (பாலிவுட்) வெற்றிப் பாடலை பயன்படுத்திய வேண்டிய ஒரு காலம் வரக்கூடும்", என்று கூறி அவர் சிரிக்கிறார்.
மங்களாத்தாய் பார்வையாளர்களின் ரசனை மாற்றத்தை கவனித்ததோடு மட்டுமல்லாமல், அரை நூற்றாண்டு காலமாக தமாஷாவுடன் இருந்து, அது எப்படி 10 ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்ட மாட்டு வண்டியில் செல்லும் இசைக்குழுவில் இருந்து, இன்று விரிவடைந்து அவரது குழு கவனித்துக் கொள்ளும் பெரிய தயாரிப்பாக மாறியது என்பதையும் கவனித்திருக்கிறார்.
66 வயதான மங்களா பன்சோட் தனது 7 வயதிலிருந்தே இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தமாஷாவின் புனிதமான மைதானமாக கருதப்படும் புனே மாவட்டத்தில் உள்ள நாராயண்கவுனில் வசிக்கும் பழம்பெரும் கலைஞரான விதாபாய் நாராயண்கவுன்காரின், மூத்த மகள் இவரே. தற்போது சதாரா மாவட்டத்தில் உள்ள கரவாடி கிராமத்தில் வசிக்கும் மங்களாத்தாய், சுமார் 170 பேரை கொண்ட, தனது சொந்த பாட் (குழுவினை) 1983 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். 'மங்களா பன்சோட் மற்றும் நிதின் குமார் தமாஷா மண்டல்' ( நிதின் குமார் இவரது இளைய மகன், பாடகர் - நடிகர் - நடன கலைஞர் மற்றும் இக்குழுவின் நட்சத்திரம்) மகாராஷ்டிராவின் கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் மே மாதம் வரை தமாஷா நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.(காண்க 'தமாஷா நான் தங்க விரும்பும் சிறை போன்றது'.)









