திரும்பிப் பார்க்கையில் உஜ்வாலா பேத்கர் கடினமான காலத்தை தான் எவ்வாறு கடந்து வந்தார் என்று ஆச்சரியப்படுகிறார்.
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பட்டியலில் சேர்ந்து கொண்ட அவரது கணவர் பிரபாகர் இறந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது, 40 வயதிற்கு மேல் இருக்கும் விவசாய விதவையான இவர் தனது வாழ்க்கையையும் குடும்பத்தையும் மீண்டும் கட்டி எழுப்புகிறார்.
ஏதோ ஒன்று அவரை முன்னேறிச் செல்ல வைத்தது. "ஒருவேளை" என்கிறவர் பிறகு ஒரு இடைவெளி விட்டு "அது என் குழந்தைகள் தான்", என்று அவர் கூறுகிறார்.
உஜ்வாலாவிற்கு வருத்தப்படுவதற்கு கூட நேரமில்லை, ஓய்வெடுக்கும் வசதி இல்லை, ஆதரவளிப்பதற்கும் யாருமில்லை. பிரபாகர் பூச்சிக்கொல்லியை உண்டு இறந்த போது இவருக்கு முப்பது வயது இருக்கும். இவர்மீது பொறுப்புகள் குவிந்தன: வயலுக்கு செல்வதிலிருந்து கடனை திருப்பிச் செலுத்துவது மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளை வளர்ப்பது வரை.
கடந்த தசாப்தத்தை எண்ணி வருத்தப்பட்ட உஜ்வாலா தனது கண்ணீரை மறைத்தபடி தனது பயிரை அறுவடை செய்து கொண்டிருக்கிறார். இது அவருடைய நிலம் - வார்தா நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் 2000 மக்களைக் கொண்ட கிராமமான குர்சாதியில் அவருக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலம். மேலெழும்பி வரும் சூரியன் வசந்த காலத்தின் தொடக்கத்தை அறிவித்தது ஆனால் அது இவர் வயலில் வேலை செய்வதிலிருந்து தடுக்கவில்லை. "நான் வேலை செய்யவில்லை என்றால் எனது குழந்தைகளுக்கு எதிர்காலம் கிடையாது - அவர்களுக்காக நான் இன்னும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உழைப்பேன்", என்றார்.
தனிமையில் தனது நிழலுடன் உஜ்வாலா போராடினாலும் விதர்பா விவசாய விதவைகளின் உறுதியான முகம் அவருக்கு இருக்கிறது. அவர் ஒரு நீடித்த விவசாயியின் உருவம், நூற்றுக்கணக்கான விவசாய விதவைகளின் உருவம், குடும்பச் சுமையை தாங்கி களையமறுக்கும் விவசாய நெருக்கடியை எதிர்கொள்கிறார். 1995க்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடையில் 3 லட்சம் விவசாய தற்கொலைகளை இந்தியா பார்த்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. விதர்பாவில் பருத்தி பிரச்சனை வெளிப்பட்டு கொண்டிருந்தபோதே 2003 உஜ்வாலாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.






