இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத இளம் கம்ரி.
“அவன் மீண்டும் நலமடைய நாளாகும்,” என்கிறார் கம்மாபாய் லக்காபாய் ரபாரி.
தன் மந்தையில் இருக்கும் ஓர் இளம் ஆண் ஒட்டகத்தைப் பற்றி அந்த மேய்ப்பர் இப்படி கூறுகிறார்.
மகாராஷ்டிராவின் அமராவதியில் 2022 ஜனவரி மாதம் உள்ளூர் காவல்துறையினரால் 58 ஒட்டகங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட அசாதாரண சம்பவத்தை கம்மாபாய் விவரிக்கிறார். பிப்ரவரி மாதம் ஒட்டகங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட்ட போதிலும், அவை நல்ல உடல்நிலையில் இல்லை.
அடைக்கப்பட்ட இடத்தில் அவற்றுக்கு முறையான உணவு கொடுக்கப்படவில்லை என்றும் மேய்ப்பர்கள் கூறுகின்றனர். பசுக்களுக்கு உணவளிக்கும் கவுரக்ஷன் கேந்திரா தொழுவத்தில் அவை கட்டப்பட்டன. “அவை பொதுவாக திறந்தவெளியில் மேய்ந்து பெரிய மரங்களின் இலைகளை உண்பவை. அவை கால்நடை தீவனங்களை உண்ணாது,” என்கிறார் கம்மாபாய்.











