'வெளியாட்கள் உள்ளே நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது' - என்று சியாதேகி கிராமத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள மூங்கில் பதாகைகள் தெரிவித்தன. இந்த நிரூபர் சத்தீஸ்கரில் உள்ள தம்தாரி மாவட்டத்தின் நாகரி வட்டத்தில் உள்ள கிராமத்திற்கு சென்ற போது தடுப்பிற்கு அருகே அமர்ந்திருந்த ஒரு குழு அவரிடம் பேசுவதற்காக எழுந்து வந்தனர் ஆனால் அவர்கள் சமூக விலகலை கடைபிடித்தனர்.
"கொடிய வைரஸான கொரோனாவிடம் இருந்து எங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த தடுப்புகளை உருவாக்க கிராமவாசிகளாகிய நாங்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்", என்று அருகிலுள்ள காங்கர் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் பாரத் துருவ் கூறினார். சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சியாதேகி கிராமம் கிட்டத்தட்ட 900 கோண்டு ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொண்டுள்ளது.
"நாங்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க விரும்புகிறோம். ஊரடங்கு நேரத்தில் வெளியாட்கள் யாரும் எங்கள் கிராமத்திற்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை, அதேவேளையில் விதிகளை மீறி உள்ளூர் ஆட்கள் வெளியே செல்வதையும் நாங்கள் விரும்பவில்லை. அதற்காகவே இந்த தடுப்புகளை அமைத்துள்ளோம்", என்று குறு விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளியாக அதே கிராமத்தில் பணியாற்றும் ராஜேஷ் குமார் நீதம் தெரிவித்தார்.
"எல்லா விதமான தொடர்பையும் தவிர்ப்பதற்காகவே இங்கு வருபவர்களை நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம். நாங்கள் அவர்களை தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும்படி வலியுறுத்துகிறோம்", என்று விவசாய தொழிலாளியான சாஜீராம் மாண்டவி கூறினார். "எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மகாராஷ்டிராவிற்கு திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணியாற்றுவதற்கு புலம்பெயர்ந்தனர், ஆனால் அவர்கள் ஹோலிப் பண்டிகைக்கு முன்பே திரும்பிவிட்டனர்", என்று மேலும் கூறினார். "இருப்பினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களின் விவரங்களை சேகரித்து வைத்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
சியாதேகிக்கு இப்போது திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை என்ன? அவர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனரா? "ஆம்", அனுமதிக்கப்படுகின்றனர் என்று பஞ்சாயத்து அதிகாரியான மனோஜ் மேஷ்ராம் கூறினார். ஆனால் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி அவர்கள் தனிமைப்படுத்தப் படுகின்றனர்.






