இதுதான் புலேவின் பரம்பரை வீடு. சிறியதாக, சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. சத்தாரா மாவட்ட கட்குன் கிராமத்துவாசிகளுக்கு இந்த வீடு பெருமிதமான அடையாளமாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் பெருமையோடு இவ்வீட்டை நினைவுகூர்ந்தாலும் கட்குன் பஞ்சாயத்து இந்த சிறிய வீட்டை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எதிர்பார்த்தபடியே மகாராஷ்டிரா அரசும் பாராமுகம் காட்டுகிறது.
இதுதான் புகழ்மிக்கச் சமூகச் சீர்திருத்த தலைவரான ஜோதிபாய் புலேவின் பரம்பரை வீடு. இது புலேவின் தாத்தாவின் வீடு. வீடு பரிதாபகரமாக, பாழடைந்து காட்சியளிக்கிறது. வீட்டின் சுவர் பாளம், பாளமாக விரிசலடைந்து காணப்படுகிறது. மோசமாக அமல்படுத்தப்படும் பிரதமரின் ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டமான பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவில் கூட இதைவிட மேம்பட்ட வீடுகள் கட்டப்படுவதை நாங்கள் கண்டுள்ளோம். அந்தத் திட்டத்தின் கீழ் மிகமோசமாக மறுபுனரமைப்புச் செய்யப்பட்ட வீடு போலப் புலேவின் பரம்பரை வீடு தோன்றுகிறது.
இந்த வீட்டை சுத்தம் செய்து, புனரமைக்கப் பெரிதாகச் செலவாகாத அளவுக்குச் சிறிய வீடு அது. இதற்கான நிதி மூலங்கள் இருக்கின்றன என்பதை இதற்குப் பின்புறம் உள்ள கிராம பஞ்சாயத்தின் ஸ்மார்ட் ஜிம் புலப்படுத்துகிறது. புலேவின் வீட்டுக்கு எதிரில் அவரின் பெயரால் நடத்தப்படும் கல்வி நிறுவனத்தின் திறந்தவெளி மேடை சாலைக்கு அருகில் அமைந்து இருக்கிறது.




