அது குளிர்காலம். நைன் ராம் பஜேலா, முன்சியாரி தாலுகாவின் ஜைதி கிராமத்தில் தனது வீட்டின் மாடியில் அமர்ந்து, காலைப்பனியில் கூடைகளை நெய்கிறார். அவருக்குப் பின்னால் ஒரு துணி உலர்த்தும் கொடி, மேலே மெல்லிய மேகங்கள், தூரத்தில் பஞ்சசூலி மலைகள். இமாலய மூங்கில் இனமான ரிங்கல் அல்லது பஹாடி ரிங்கலை வளைந்த கத்தியால் மெல்லியக் கீற்றுகளாக வெட்டுகிறார். அதை அவர் தனது பஹாடி மொழியில் 'பரான்ஷ்' என்று அழைக்கிறார். நடுங்க வைக்கும் இக்குளிரில் அவர் கையுறைகளோ காலுறைகளோ அணிவதில்லை. மலைக்காற்று அவரது தோலை வருத்துகிறது. ஆனால் நைன் ராம் எந்தவித சலனமுமின்றி உழைக்கிறார்.
“இந்த ரிங்கல் மூங்கிலை நான் நேற்று தான் காட்டிலிருந்து சேகரித்தேன். இரண்டு கூடைகள் செய்ய இந்த குச்சிகள் போதுமானதாக இருக்கும்,” என்று என்னையும் கேமராவையும் பார்க்காமல் கூறுகிறார். நைன் ராம் தனது 12வது வயதில் இருந்து மூங்கில் பொருட்களை தயாரித்து வருகிறார்; அவர் தனது தந்தையிடமிருந்து இதைக் கற்றுக்கொண்டார். இத்தொழிலில் வருமானம் மிகக்குறைவாக இருந்ததால், அவரதுதந்தை இத்தொழிலுக்குள் அவரை அனுமதிக்கத் தயங்கினார். “எனவே, நான் என் சிறுவயதில் மற்றவருக்கு உரிமையான நிலங்களில் இருந்து ரிங்கலைத் திருடி, கூடைகள், பூக்குவளைகள், குப்பைத் தொட்டிகள், பேனா ஸ்டாண்டுகள் மற்றும் சப்பாத்தி வைப்பதற்கான சூடுப்பெட்டிகளை உருவாக்குவேன்" என்கிறார்.
தற்போது 54 வயதாகும் நைன் ராம், வெறுமனே தனது கைகளையும், ஒரு கத்தியையும் பயன்படுத்தி, ரிங்கல் மூலம் எதையும் செய்ய முடியும் என்கிறார். "இது எனக்குக் கிட்டத்தட்ட களிமண் போன்றது. இதிலிருந்து நீங்கள் எந்தப் பொருளையும் செய்ய முடியும்" என்று, மெல்லிய மற்றும் அடர்த்தியான கீற்றுகளை ஒன்றின்மேல் ஒன்று வைத்து நெய்து கொண்டே சொல்கிறார். "இது ஒரு தொழிலாளியின் வேலை அல்ல - இது ஒரு திறமை. இதற்குப் பயிற்சி தேவை, எல்லாக் கலைகளையும் போலவே பொறுமையும் தேவை.”









