உடைந்த கைக்கு போடப்பட்டுள்ள கட்டு நாராயண் கெய்க்வாடை கவலையில் ஆழ்த்தியது. எனினும் அவர் தனது குல்லாவை சரிசெய்து கொண்டு தனது நீல நிற டைரி மற்றும் பேனாவுடன் பரபரப்பாக காணப்பட்டார்.
“என் பெயர் நாராயண் கெய்க்வாட். நான் கோலாப்பூரிலிருந்து வந்திருக்கிறேன். நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்?,” என கேட்டார் கோலாப்பூரின் ஜம்பாலி கிராமத்தைச் சேர்ந்த 73 வயது விவசாயி.
தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பிக்க குடில் அமைத்துள்ள அகமத்நகர் மாவட்ட பழங்குடியின விவசாயிகளிடையே அவர் கேள்விகளை எழுப்பினார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜனவரி 24-26 தேதிகளில் மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களில் திரண்ட விவசாயிகள் அவர்கள். அவர்களில் ஒருவரான நாராயண், ஷிரோல் தாலுக்காவில் உள்ள கிராமத்தில் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்திலிருந்து, 400 கிலோமீட்டர் தொலைவிற்கு கை காயத்துடன் பயணம் செய்து வந்துள்ளார்.
நாராயண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது கிராம விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பேசத் தொடங்கினார். “நான் விவசாயி என்பதால் என்னால் பிரச்னைகளை தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது,” என்று என்னிடம் ஜனவரி 25ஆம் தேதி சந்தித்தபோது தெரிவித்தார். தனது உடைந்த வலது கரத்துடன் மராத்தி மொழியில் குறிப்புகளை அவர் எடுத்தார். சிறிய அசைவுகளிலும் வலி ஏற்பட்டபோதிலும் அவர் பேசுகையில், “விவசாயிகள், வேளாண் தொழிலாளர்களின் போராட்டங்களை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதால் அது குறித்து நான் கேட்கிறேன்.”
ஆசாத் மைதானத்தில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் பேசியதாக பின்னர் அவர் என்னிடம் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் முதல்வாரம் தனது நிலத்தில் நாராயண் வேலை செய்துகொண்டிருந்த போது தென்னை மட்டை விழுந்து அவரது கையில் காயம் ஏற்பட்டது. கரும்பு, சோளம் ஆகியவற்றை பயிரிட்டுள்ள அவர், இரசாயன உரங்களின்றி காய்கறிகளையும் விளைவிக்கிறார். ஜம்பாலியில் உள்ள தனியார் மருத்துவரைச் சந்தித்தும் ஒரு வாரத்திற்கு மேலாக அவருக்கு வலி குறையவில்லை. வலியையும் அவர் பொருட்படுத்தாமல் வந்துள்ளார். “மருத்துவர் பரிசோதித்துவிட்டு சுளுக்கு ஏற்பட்டுள்ளது, கட்டுப் போடுங்கள் என்றார்,” என்கிறார் அவர்.
ஏழு நாட்களுக்கு மேலாக வலி நீடித்ததால் 12 கிலோமீட்டர் தொலைவில், ஷிரோலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாராயண் சென்றுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது. “மருத்துவர் என்னிடம் என்ன மனிதன் நீ? கை உடைந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், அக்கறையின்றி சுற்றி திரிந்துள்ளீர்கள்,” என்று என்னிடம் கேட்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவு கட்டுப் போடும் வசதி இல்லாததால் ஷிரோலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சங்கிலியில் உள்ள பொது மருத்துவமனைக்குச் செல்ல மருத்துவர் பரிந்துரைத்தார். அங்கு நாராயணின் கைக்கு மாவுக் கட்டு போடப்பட்டது.
ஜனவரி 24ஆம் தேதி ஆசாத் மைதானத்திற்கு அவர் புறப்பட்டபோது குடும்பத்தினர் தடுத்துள்ளனர். ஆனால் அவரது ஊக்கம் குறையவில்லை. “என்னை தடுத்தால், மும்பைக்கும் செல்ல மாட்டேன், திரும்பி வரவும் மாட்டேன் என்று அவர்களிடம் நான் சொல்லிவிட்டேன்.” அவர் கைகளில் தொட்டில் கட்டியபடி தான் பயணம் செய்துள்ளார்.
அவரது மனைவி 66 வயது குசும், நாராயணின் பயணத்திற்காக 13 பக்ரிக்கள், காரச் சட்னி (சிவப்பு மிளகாயில் செய்வது), சர்க்கரை, நெய் போன்றவற்றையும் கொடுத்து அனுப்பினார். அவர்களின் நிலத்தில் விவசாயமும் செய்துவரும் அவருக்குத் தெரியும், கணவர் அதில் பாதிக் கூட உண்ண மாட்டார் என்று. “போராட்டக்காரர்களிடையே அவர் உணவுகளை எப்போதும் விநியோகித்துவிடுவார்,” என்று மும்பை போராட்டத்திற்குப் பிறகு நான் ஜம்பாலி சென்றபோது என்னிடம் அவர் தெரிவித்தார். இரண்டு நாட்களில் இரண்டு பக்ரிஸ்களை மட்டுமே தின்ற அவர் மற்றவற்றை பழங்குடியின விவசாய பெண்களுக்கு கொடுத்துவிட்டார். “நாங்கள் பணக்கார வர்க்கம் கிடையாது. பல குக்கிராமங்களில் இருந்து போராட்டத்திற்கு வந்துள்ள விவசாயிகளுக்கு உணவு கொடுத்தாவது உதவலாம் என்று எண்ணுகிறேன்,” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய கிசான் சபா உறுப்பினரான நாராயண்.
நவம்பர் 26ஆம் தேதி முதல் டெல்லி எல்லைகளில் போராடி வரும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவை நல்கும் வகையில் சம்யுக்தா ஷேத்கரி கம்கார் மோர்ச்சாவின் சார்பில் மும்பையில் 24-26ஆம் தேதிகளில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.
பெருமுதலாளிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், விவசாயிகள், விவசாயத்தின் மீது அதிகளவு அதிகாரத்தை அவர்கள் செலுத்த வழிவகுக்கும் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் இந்த புதிய சட்டங்களை எதிர்க்கின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி), வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (ஏபிஎம்சிஸ்), மாநில கொள்முதல் போன்ற பல ஆதரவு அம்சங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றனர். மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
விவசாயிகளின் பிரச்னைகளை புரிந்துகொள்வதற்காக ஆசாத் மைதானத்தில் நாராயண் அமர்வது முதன்முறையல்ல. “சகபோராட்டக்காரர்களின் வாழ்க்கை குறித்து நான் எப்போதும் பேசி வருகிறேன்,” என்கிறார் அவர். பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பயணித்து போராடி வரும் நூற்றுக்கணக்கான விவசாயிகளைச் சந்தித்துள்ளார். பலரும் அவருக்கு நண்பராகியுள்ளனர். அவர் ஏற்கனவே டெல்லி, பீகாரின் சமஸ்திபூர், தெலங்கானாவின் கம்மம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை சென்றுள்ளார். மகாராஷ்டிராவின் மும்பை, நாக்பூர், பீட், அவுரங்காபாத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.
செப்டம்பர் 2020 புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டது முதல் கோலாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற 10 போராட்டங்களில் அவர் பங்கேற்றதாக தெரிவித்தார். கடந்த நான்கு மாதங்களில் அவர் கோலாப்பூர், ஜம்பாலி, நந்தானி, ஹரோலி, அர்ஜூன்வாட், தரங்குட்டி, ஷிர்தோன், தகவாடி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகளிடம் நாராயண் பேசியுள்ளார். “நூற்றுக்கணக்கான விவசாயிகளிடம் நான் பேசியதில் இச்சட்டத்தை யாரும் விரும்பவில்லை. ஏன் இச்சட்டங்களை இயற்ற வேண்டும்?” என கோபமான குரலில் அவர் கேட்டார்.
2020 டிசம்பர் 8ஆம் தேதி இந்தியா முழுவதும் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் ஒரு நாள் முழுஅடைப்பு கடைபிடித்தபோது அவர் ஷிரோல் தாலுக்கா குருண்ட்வாட் நகரில் இருந்தார். “பேரணி நடத்த எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை, ஆனால் நகர மக்கள் விவசாயிகளுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அளித்தனர். இல்லாவிடில் குருண்ட்வாடில் ஒருபோதும் கடைகள் மூடப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியாது,” என்கிறார் அவர்.
அருகில் உள்ள கிராம விவசாயிகளை சந்திக்கவும், போராட்டங்களில் பங்கேற்கவும், அதிகாலை 4 மணிக்கு எழும் நாராயண் காலை 10 மணிக்குள் தனது வேலைகளை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கிராமங்களுக்குச் செல்கிறார். தனது நிலத்தில் பயிர்களை சூறையாடும் பறவைகளை விரட்டுவதற்காக மாலை 5 மணிக்கு திரும்பிவிடுகிறேன் என்கிறார் அவர்.
மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2000 விவசாயிகள் குழுவில் இணைவதற்காக ஜம்பாலியிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாஷிக்கிற்கு அவர் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி சென்றார். அடுத்தநாள் டெல்லியை நோக்கி அவர் வாகனப் பேரணியாக சென்றார். வயல் வேலைக்காக அல்லது குளிர் தாங்காமல் மத்திய பிரதேச எல்லைக்குத் திரும்பிய விவசாயிகளுடன் நாராயணனும் வந்துவிட்டார். “டெல்லியில் உள்ள விவசாயிகள் ஊக்கமளிக்கின்றனர். அவர்கள் நாட்டையே இணைத்துவிட்டனர். குளிர் மற்றும் கடுமையான முதுகு வலி காரணமாக டெல்லிக்குச் செல்லவில்லை,” என்றார் அவர்.
பிற வழிகளிலும் நாராயண் போராடி வருகிறார். 2020 செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் அவர் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு 250 அஞ்சல் அட்டைகளை அனுப்பியுள்ளார். மூன்று “கருப்புச் சட்டங்களையும்” திரும்பப் பெற வேண்டும் என அவர் கோருகிறார். சுவாமிநாதன் ஆணைய அறிக்கையின் , பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலையை நடைமுறைப்படுத்துவது, மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெறுவது ஆகியவற்றை அவர் வலியுறுத்துகிறார். எம்.எஸ்.பி-க்கான ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தவறிய பின்னர் அவர் எச்சரிக்கையாக இருக்கிறார். “சுவாமிநாதன் ஆணைய அறிக்கையின் பரிந்துரைப்படி எம்எஸ்பி-யை நடைமுறைக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது என 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பாஜக அரசு தெரிவித்தது. இப்போது இச்சட்டங்களுடன் எம்எஸ்பி போய்விடாது என்கிறது. அவர்களை எப்படி நம்புவது?”
அவரைப் பார்த்துவிட்டு தனது தாலுக்காவின் கிராம விவசாயிகள் பலரும் பிரதமருக்கு அஞ்சல் அட்டை எழுதத் தொடங்கிவிட்டதாக என்னிடம் தெரிவித்தார். “இச்சட்டங்களை விவசாயிகள் புரிந்துகொள்ளவில்லை என்று மக்கள் சொல்கின்றனர். நாங்கள் அன்றாடம் வயலில் இறங்கி வேலைசெய்கிறோம், எங்களுக்கு ஏன் புரியாது?” என அவர் வியக்கிறார்.
புதிய சட்டங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து முழுமையாக புரிந்துகொள்வதற்காக செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் நாராயண் ஆலோசித்துள்ளார். “இச்சட்டங்கள் அனைவருக்கும் ஆபத்தானவை. ஏதேனும் பிரச்னை வந்தால்கூட நாம் நீதிமன்றங்களுக்கு இப்போது செல்ல முடியாது,” என்றார் அவர்.
இச்சட்டங்கள் குறித்து விவசாயம் சாராதவர்களும் அறிய வேண்டும் என அவர் கருதுகிறார். “முழு நாடும் விழித்துக் கொள்ள வேண்டும்.”
ஜனவரி 25ஆம் தேதி விவசாயிகள் ஆசாத் மைதானில் இருந்து தெற்கு மும்பையில் உள்ள மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியைத் தொடங்கியபோது, கோலாப்பூர் மாவட்ட விவசாயிகளின் உடைமைகளை பாதுகாப்பதற்காக நாராயண் அங்கேயே தங்கிவிட்டார்.
அவரது நோட்டு புத்தகத்தில் விவசாயிகளின் பிரச்னைகளை அவர் தொகுத்துள்ளார்: ‘நில உரிமை, பயிர் காப்பீடு, குறைந்த ஆதரவு விலை, ஏபிஎம்சி நிலையங்கள்’. “இந்த விவசாய சட்டங்கள் ஏபிஎம்சிக்களை அழித்துவிடும், பிறகு இந்திய விவசாயிகளையும் கொன்றுவிடும்” என்று என்னிடம் அவர் தெரிவித்தார். மேலும் “கார்ப்ரேட்டுகளுக்கு நம்மை தொழிலாளர்களாக்கவே இந்த மூன்று சட்டங்களும் வழிசெய்யும்.”
தமிழில்: சவிதா