“ஒரு குச்சியை வைத்து அடித்தேன். ஆனால் அது என் மீது குதித்து, என் கழுத்தையும் கைகளையும் கீறிவிட்டது. காட்டுக்கள் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்தேன். என்னுடைய ஆடைகள் முழுக்க ரத்தம். வீட்டுக்கு நடந்து வர மிகவும் கஷ்டப்பட்டேன்.” சிறுத்தையின் அந்த தாக்குதலுக்கு பிறகு விஷால்ராம் மார்க்கம் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருந்தார். அவரின் மாடுகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதில் அவருக்கு சந்தோஷம். “சிறுத்தை என் நாய்களைக் கூட தாக்கியது. அவை ஓடி விட்டன,” என்கிறார் அவர்.
2015ம் ஆண்டில் அச்சம்பவம் நடந்தது. மார்க்கம் அச்சம்பவத்தை சொல்லி சிரித்துவிட்டு, கொடிய மிருகங்களை அதற்கு முன்னும் பிறகும் கூட நெருக்கத்தில் பார்த்திருப்பதாக அவர் சொல்கிறார். அவர் மாடு மேய்க்கும் சட்டீஸ்கரின் ஜபாரா காட்டில் சிறுத்தைகள் மட்டும் இருக்கவில்லை. புலிகள், நரிகள், ஓநாய்கள், காட்டு நாய்கள், காட்டுப் பன்றிகளும் இருக்கின்றன. மான்களும் காட்டு எருமைகளும் கூட இருக்கின்றன. கோடை காலத்தில் காட்டில் இருக்கும் சில நீரோடைகளுக்கு கால்நடைகள் செல்லும்போது, வேட்டை விலங்குகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு இரண்டு மடங்கு, மூன்று மடங்கு ஆகிவிடுகிறது.
“என்னுடைய மாடுகள் காட்டுக்குள் தாமாகவே சுற்றும். அவை திரும்பவில்லை என்றால் மட்டுமே நான் சென்று தேடுவேன்,” என்கிறார் மார்க்கம். “சில நேரங்களில் மாடுகள் அதிகாலை 4 மணி வரை திரும்பாது. இரண்டு டார்ச் லைட்களை பயன்படுத்தி காட்டுக்குள் இரவில் அவற்றை தேடுவேன்.” காட்டுக்குள் வெறும் பாதங்களுடன் சென்றதால் ஏற்பட்ட கால் புண்களையும் கொப்பளங்களையும் நம்மிடம் காட்டுகிறார்.
அவரின் சுதந்திரமான மாடுகள், ஜபார்ரா கிராமத்துக்கு அருகே இருக்கும் காட்டுக்குள், மேய்ச்சல் நிலங்களைத் தேடி 9-10 கிலோமீட்டர் தூரத்துக்கு அன்றாடம் சுற்றித் திரியும். “கோடை காலத்தில் அவை உணவுக்காக இரண்டு மடங்கு தூரம் பயணிக்கும். காட்டை இனி நம்பியிருக்க முடியாது. மாடுகள் பசியால் இறந்து கூட போகலாம்,” என்கிறார் மார்க்கம்.
“அவை சாப்பிடவென வைக்கோல் புற்களை நான் வாங்குகிறேன். ஆனால் அவை காட்டுக்குள் சுற்றி காட்டுப் புல்லை மேயத்தான் விரும்புகின்றன,” என்கிறார் மார்க்கம் தம் மாடுகளை தவறு செய்யும் குழந்தைகள் போல. எல்லா பெற்றோரையும் போல அவரும் சில உத்திகளை கொண்டு மாடுகளை திரும்ப வர வைக்கிறார். அவை நக்க விரும்பும் உப்புக் குவியல் ஓர் உதாரணம். இது வழக்கமாக அவற்றை இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பக் கொண்டு வந்து விடும். அவற்றின் ‘வீடு’ என்பது உரிமையாளரின் கல்வீட்டுக்கு அருகே இருக்கும் பெரிய, வேலியடைத்த முற்றம் ஆகும்.
ஜபார்ராவின் 117 குடும்பங்களின் பெரும்பாலானவை கோண்ட் மற்றும் கமார் பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்தவை. சிலவை மட்டும் யாதவ் (பிற பிற்படுத்தப்பட்ட சாதி) சமூகத்தைச் சேர்ந்தவை. கோண்ட் பழங்குடியான மார்க்கம், 5,352 ஹெக்டேர் காட்டின் ஒவ்வொரு விவரத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார். அவருடைய முழுக்காலமான 50 வருடங்களையும் அதன் அருகிலேயே அவர் கழித்திருக்கிறார். “ஐந்தாம் வகுப்பு வரை ஓர் உள்ளூர் பள்ளியில் படித்தேன். பிறகு இங்கு விவசாயத்தை தொடங்கினேன்,” என்கிறார் அவர்.
சட்டீஸ்கரின் கிழக்கு முனையில் இருக்கும் தம்தாரி மாவட்டத்தின் 52 சதவிகிதம் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். அதன் பாதியளவு அடர்காடு எனக் குறிப்பிடுகிறது இந்தியக் காடு கணக்கெடுப்பின் 2019ம் ஆண்டு அறிக்கை . குங்கிலியம் மற்றும் தேக்கு மரங்களைத் தாண்டி, மருதம், வெள்ள மருது, கடுக்காய், தான்றி, வேங்கை முதலியவையும் இருக்கின்றன.
போதிய மழையின்மையும் குறைந்து வரும் காட்டு அடர்த்தியும் மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களை குறைத்திருக்கிறது. 90 மாடுகள், 60-70 மாடுகளாக குறைந்துவிட்டதாக சொல்கிறார் மார்க்கம். அவற்றில் 15 கன்றுகுட்டிகள். “மாடுகளுக்கான உணவு காட்டில் குறைந்து வருகிறது. மரம் வெட்டுவதை அவர்கள் நிறுத்தினால் ஒருவேளை அதிகரிக்கலாம்,” என்கிறார் அவர். “10,000 ரூபாய்க்கும் மேல் செலவழித்து மாடுகளுக்கு வைக்கோல் புற்களை (2019ல்) வாங்கினேன். அவற்றை ஒருமுறை எடுத்து வர ட்ராக்டருக்கு செலவு 600 ரூபாய். மொத்தமாக விவசாயிகளிடமிருந்து அவற்றை எடுத்து வர 20 முறை ட்ராக்டர் சென்று வர வேண்டியிருந்தது.”
கோடை காலத்தில் காட்டில் இருக்கும் சில நீரோடைகளுக்கு கால்நடைகள் செல்லும்போது, வேட்டை விலங்குகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு இரண்டு மடங்கு, மூன்று மடங்கு ஆகிவிடுகிறது
ஆகஸ்டு 2019-ல் ஜபார்ராவின் கிராமசபைக்கு வன உரிமைகள் சட்டப்படி அளிக்கப்பட்ட ’சமூக வன வள உரிமைகளை’ செயல்படுத்தி மேய்ச்சல் நிலத்தை அதிகரிக்க மார்க்கம் நம்பலாம். சட்டத்தின்படி சமூகக் குழுவுக்கு, அது பாரம்பரியமாக பாதுகாத்து வரும் காட்டு வளங்களை “பாதுகாத்து மீட்டுருவாக்கி கையாளும் உரிமை’ இருக்கிறது. சட்டீஸ்கரில் இத்தகைய உரிமைகள் பெற்ற முதல் கிராமம் ஜபார்ராதான்
“எந்த மரங்களை, எந்தச் செடிகளை பாதுகாப்பது, எந்த விலங்குகள் மேய அனுமதிப்பது, யார் காட்டுக்குள் நுழையலாம், குளங்களை வெட்டுவது, மண் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆகிய முடிவுகளை கிராம சபையே இனி எடுக்கும்,” என்கிறார் பிரகார் ஜெயின். பட்டியலிடப்பட்ட பகுதிகளில் பஞ்சாயத்து சட்டம் செயல்படுத்தும் மாவட்ட ஒருங்கிணைப்புப் பொறுப்பில் இருப்பவர்.
சட்ட வழிகளை வரவேற்கும் மார்க்கம் பல வெளியாட்கள் வந்து காட்டுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் சொல்கிறார். “பல ஆட்கள் வருவதைப் பார்க்கிறேன். அவர்கள் நீர்நிலைகளில் மீன் பிடிக்க பூச்சி மருந்து தெளிக்கிறார்கள். பெரிய விலங்குகளைப் பிடிக்க விஷம் வைக்கிறார்கள்,” என்கிறார் அவர். “அவர்கள் எங்கள் ஆட்கள் இல்லை.”
புற்கள் குறைந்து வரும் பிரச்சினையை அடுத்த கிராமசபை கூட்டத்தில் எழுப்பப் போவதாகக் கூறுகிறார். “இதுவரை நேரம் கிடைக்காததால் நான் செய்யவில்லை. இரவு வரை நான் சாணம் சேகரிப்பேன். கூட்டத்துக்கு எப்படி செல்ல முடியும்?” எனச் சுட்டிக் காட்டும் அவர், தான் பேசவிருப்பதாகவும் சொல்கிறார். “காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக நம் மக்கள் ஒன்றிணைய வேண்டும். காடு காக்கப்பட்டால், நம் வாழ்க்கைகள் பாதுகாப்பாக இருக்கும். காடுகளை பாதுகாக்கும் பொறுப்பு நம் கைகளில்தான் இருக்கிறது.”
காட்டின் முனையில் இருக்கும் மார்க்கமின் மூன்று அறை வீட்டின் பெரிய முற்றத்தில்தான் கன்றுக்குட்டிகளை இரவுல் கட்டி வைக்கிறார். அதற்கு அருகே இருக்கும் திறந்தவெளியில் மாடுகள் இருக்கும்.
அதிகாலை 6.30 மணி. அவரை நாங்கள் சந்தித்தபோது சூரியன் உதித்துவிட்டது. இரவின் குளிரைப் போக்க அவர் தீ மூட்டியிருந்த விறகில் இன்னும் நெருப்பு ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஓய்வின்றி கத்திக் கொண்டிருக்கும் கன்றுக்குட்டிகளின் சத்தம் அவர் வீட்டைச் சுற்றியிருந்த காற்றை நிரப்பியிருந்தது. முற்றத்தில் பெரிய பால் குவளைகள் இருந்தன. தம்தாரி டவுனில் இருக்கும் வணிகருக்கு பால் அனுப்பப்பட்டுவிட்டது. ஒரு வழக்கமான நாளில் 35-40 லிட்டர் பாலை விற்பதாக சொல்கிறார் மார்க்கம். ஒரு லிட்டருக்கு 35 ரூபாய் கிடைக்கும். ஒரு டிராக்டர் ட்ராலி அளவு சாணத்தை ஒரு மாதத்தில் விற்று 1000 ரூபாய் ஈட்ட முடிந்தது,” என்கிறார் அவர்.
எங்களுடன் பேசிக் கொண்டே, வேலியின் இரண்டு முனைகளுக்கு இடையே குறுக்காக கன்றுக்குட்டிகளை கட்டவென ஒரு தடுப்பை வைக்கிறார். மேய்ச்சலுக்குக் கிளம்பும் மாடுகளுடன் கன்றுகுட்டிகளும் கிளம்பாமலிருக்கு இதை அவர் செய்கிறார். “அவை சிறியவை. வீட்டிலிருந்து அவை தூரமாக செல்ல நான் அனுமதிக்க முடியாது. அவை பிடிக்கப்பட்டு உண்ணப்பட்டு விடும்,” என்கிறார் அவர், தடுக்கப்படும் கன்றுக்குட்டிகள் புகாரளிப்பதைப் போல் எழுப்பும் சத்தங்களை தாண்டி.
மாடுகள் வளர்ப்பதோடு, மார்க்கம் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயமும் பார்க்கிறார். அதில் அவர் நெல் பயிரிடுகிறார். ஒரு வருடத்தில் 75 கிலோ விளைவிக்கிறார். அவை அனைத்தையுமே அவரும் அவரது குடும்பமும் பயன்படுத்திக் கொள்கின்றனர். “விவசாயம் மட்டும்தான் நான் செய்து கொண்டிருந்தேன். பிறகு ஒரு பெண் மாடை 200 ரூபாய்க்கு வாங்கினேன். அது 10 கன்றுகள் ஈன்றது,” என்கிறார் அவர் மாட்டுவளர்ப்புக்கு வந்த விதத்தை விளக்குகையில். ஜபார்ராவின் மக்கள்தொகையான 460 பேரும் விவசாயத்தையே சார்ந்திருக்கின்றனர். சிறு சிறு நிலங்களில் கொள்ளு, உளுந்து முதலியவற்றை விளைவிக்கின்றனர். இலுப்பைப் பூக்கள், தேன் முதலியவற்றை காட்டிலிருந்து எடுத்துக் கொள்கின்றனர்.
மார்க்கம் அவரின் மனைவி கிரண் பாயுடன் வாழ்ந்து வருகிறார். அவரும் மாடுகள் பராமரிக்க உதவுகிறார். இரு மகன்களும் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் முடிந்து வேறு இடங்களில் வாழ்கின்றனர்.
மார்ச் 2020-ல் தொடங்கிய கோவிட் ஊரடங்கு காலத்தில், தம்தாரி சந்தைக்கு மாட்டுப் போல் கொண்டு செல்ல முடியாமல் நஷ்டங்களைச் சந்தித்தார் மார்க்கம். “உணவகங்களும் கடைகளும் மூடப்பட்டிருந்தன. எனவே நாங்கள் பால் விற்க முடியவில்லை,” என்கிறார் அவர். எனவே அவர் அதிக காலத்துக்கு இருக்கக் கூடிய நெய் தயாரிக்கத் தொடங்கினார். பாலைக் காய்ச்சவும் கலக்கவும் கிரண் பாயும் உதவினார்.
கமார் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த கிரண் பாய் மார்க்கமின் இரண்டாம் மனைவி. சட்டீஸ்கரின் பெரிய பழங்குடிச் சமூகமான கோண்ட் சமூகத்தைச் சேர்ந்த மார்க்கம், கிரண் பாயை மணம் முடிக்க பணம் கட்ட வேண்டியிருந்தது. “வேறு சமூகத்துப் பெண்ணை மணம் முடித்ததால், கிட்டத்தட்ட 1.5 லட்சம் ரூபாயை விருந்துகளுக்கு தண்டச்செலவாக செலவழித்தேன்,” என்கிறார் அவர்.
அவரின் வேலையைத் தொடர வாரிசு இல்லாததால், அவரின் காலத்துக்குப் பிறகு மாடுகளின் நிலை என்ன ஆகுமென கவலைப்படுகிறார் மார்க்கம். “நான் இல்லையெனில் என் மாடுகள் சுற்றித் திரியும். நான் இறந்துவிட்டால், அவற்றை யாரும் பார்த்துக் கொள்ளக் கிடையாது,” என்கிறார் அவர். “அவற்றுக்கு அக்கறை காட்டும் இந்த வேலையில் நான் மாட்டிக் கொண்டேன். இறந்தால் மட்டுமே நான் அவற்றை விட்டுப் பிரிவேன்.”
காலநிலை மாற்றம் பற்றி விஷால்ராம் மார்க்கம் இந்தக் காணொளியில் பேசுகிறார்: பருவநிலை மாற்றத்தின் சிறகுகளில் சிக்கி, போராடும் பூச்சிகள்
தமிழில் : ராஜசங்கீதன்