பீகாரின் அராரியா மாவட்டத்தில் உள்ள இராம்பூரைச் சேர்ந்த (ஆசா) சமூக நலத் திட்டப் பணியாளர், 35 வயதான நஸ்ரத் பன்னோ. இவர், ’பதின் பருவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது’ என கிராமப்புறப் பெண்களை ஒப்புக்கொள்ளச் செய்துவருகிறார். அதற்காக கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதை அனுமதிக்க அந்தப் பெண்களின் மாமியார்களுடன் அவர் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது; பிரசவத்துக்கும் அவரே அந்தப் பெண்களை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று வருகிறார். ஆனாலும், ஆண்களைக் கருத்தடை செய்யவைப்பது கடினமானது என நினைக்கிறார் நஸ்ரத்.
"போபஸ்கஞ்ச் வட்டாரத்தில் 3,400 பேர் வசிக்கும் அந்த ஊரில், சென்ற 2018ஆம் ஆண்டு ஒரே ஒருவர்தான், ஆண்களுக்கான (வாசக்டமி) கருத்தடை செய்துகொள்ள ஒப்புக்கொண்டார்” என்று நம்மிடம் சொன்னார், நஸ்ரத். ”ஆனால், அவர் கருத்தடை செய்துகொண்ட பிறகு அவருடைய மனைவி என்னை செருப்பைக்கொண்டு அடிக்கவந்துவிட்டார்” என்றார், சிரித்துக்கொண்டே!
இராம்பூரின் இந்த தயக்கம்தான் பீகாரின் மற்ற ஊர்களிலும் நிலவுகிறது. பீகாரில் நவம்பர் தோறும் மாநில அரசால் ஆண் கருத்தடைக்கான பரப்புரை வாரம் கடைப்பிடிக்கப்படும். கடந்த ஆண்டு அந்த பரப்புரை தொடங்கவிருந்த சமயத்தில், விகாஸ் மித்ரா பணியிலிருந்த வினய்குமாரிடம் பேசினேன். அப்போது, அவர்,”அவர்களுக்கு இருக்கும் பெரிய அச்சம் என்னவென்றால், தங்களைப் பார்த்து மற்ற ஆண்கள் சிரிப்பார்கள், கேலிசெய்வார்கள் என்பதுதான். இத்துடன், அவர்களுக்கு இன்னொரு மூடநம்பிக்கையும்.. அதாவது, கருத்தடைக்குப் பிறகு தாங்கள் பலவீனமடைந்துவிடுவோம்; அதற்குப் பிறகு ‘உறவே’ வைத்துக்கொள்ளமுடியாது என்றும் நினைக்கிறார்கள்!” என்பதைப் போட்டுடைக்கிறார், வினய்.
அம்மாநிலத்தின் ஜெகன்னாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் வட்டாரத்தில் 3,400 பேர் வசிக்கும் பிர்ரா கிராமம்தான், வினய்க்கு சொந்த ஊர். 38 வயதான அவர், அரசாங்கத்தின் விகாஸ் மித்ரா பணியாளராக கடந்த ஆண்டு இருந்தார். அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களைப் பற்றிய தகவல்களைப் பரப்புவதும் அவற்றைச் செயல்படுத்துவதில் பங்களிப்பதும் அவருக்கான பணிகள். அதில், ஆண்களுக்கான கருத்தடையைச் செய்துகொள்ள வைப்பதும் தட்டவேமுடியாத ஒரு வேலை ஆகும். (அதாவது, வாசக்டமி எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை என்பது விந்துநாளத்தைத் துண்டித்தோ அல்லது கட்டிவைத்தோ செய்யப்படும் சிறு அறுவைச்சிகிச்சை ஆகும்.)
ஆண் கருத்தடைகளின் அளவு இறக்கத்தில் குறைவாக இருக்கும் ஒரு மாநிலத்தில், இது குறிப்பான முக்கியத்துவம் உடையது. இம்மாநிலத்தில், மூன்றாவது (2005-06) தேசிய குடும்ப நல ஆய்வின்படி கருதத்தகாத அளவுக்கு - 0.6 சதவீதமே இருந்த ஆண் கருத்தடை வீதம், நான்காவது (2015-16) தேசிய குடும்ப நல ஆய்வின்போது 0 சதவீதம் எனும் இடத்துக்கு கீழே வந்துவிட்டது. இதே காலகட்டத்தில், பெண்களுக்கான கருத்தடை வீதமும் குறைந்தே இருந்தது. திருமணமான 15 வயது முதல் 49வயதுவரையிலான பெண்களில், 23.8 சதவீதமாக இருந்தது 20.7 சதவீதமாக கீழிறங்கிவிட்டது. ஆனாலும் ஆண்கள் கருத்தடையைவிட அதிகமான அளவிலேயே தொடர்கிறது.
ஆண்களுக்கான கருத்தடை தொடர்பான பீகார் புள்ளிவிவரமானது இதில் தேசிய அளவிலான தயக்கத்தை எதிரொலிக்கிறது. நான்காவது (2015-16) தேசிய குடும்ப நல ஆய்வில், இப்போது திருமணம் செய்துகொண்ட பெண்களில் 36 சதவீதம் பேர், கருத்தடை செய்துகொண்டுள்ளனர்; இதேவேளை, ஆண்களில் 0.3 சதவீதம் பேர்தான் இதுதொடர்பான நடைமுறைகளுக்கே வந்திருக்கிறார்கள்.
நாடளவில் ஆணுறைப் பயன்பாடும் மோசமான அளவுக்கு குறைந்துவிட்டது. அண்மையில் திருமணம் செய்துகொண்ட (15 - 49 வயது) பெண்களில் 5.6 சதவீதம் பேர் மட்டும்தான், ஆணுறையானது கருத்தடைக்குப் பயன்படுகிறது எனக் கூறியுள்ளனர்.








