அன்று மதியம் அரண்மனையின் பெரும் படுக்கையில் படுத்து விழித்திருந்த புதிய சுல்தானின் இதயம் படபடவென துடித்ததை போல் வீசியது அரண்மனை மீது இருந்த அரச கொடி. அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறிய கிளர்ச்சி எழுச்சிகளை ஒடுக்கி, ஒரு ராஜ வம்சத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் தனது வீரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார், போர்க்களங்களை கவசமில்லாமல் எதிர் கொண்டிருக்கிறார். தனது வெற்று மார்பைக் பெருமையுடன் வெளிப்படுத்தினார். கொள்ளையடிக்கும் விலங்குகளின் முழுப் படைகளையும் ஏறக்குறைய ஒரே ஆளாக நின்று கொன்று குவித்தார். இவை வெறும் பூச்சிகள் மட்டுமே என்று அவர் நினைத்தார். ஆனால் அவர் நினைத்ததை விட அந்த பூச்சிகள் அடக்க முடியாதவையாக இருந்தன. உண்மையில் அவர் மிகவும் தெளிவான கற்பனையைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அவர்களின் அச்சுறுத்தலை நசுக்க அது அவருக்கு உதவியது. ஆனால் அந்த டிசம்பர் காற்று குரூரமாக இருந்தது.
இந்த நேரத்தில் தேவையானது ஒரு பெரிய அளவிளான பூச்சிக்கொல்லி. உலகம் முழுவதும் மண்ணில் இயற்கையாக வளர்ந்து பூச்சிகளை அழிக்கும் ஒட்டுண்ணி பூஞ்சை. அவர்களை உள்ளிருந்தே கொல்ல, ஒட்டுண்ணி பூஞ்சைகள் மலிவான, மிகவும் பயனுள்ள மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் தன்மை கொண்டதென உயர்மட்ட வல்லுநர்கள் கொண்ட ஒரு குழு அறிவித்தது. பணக்கார கூட்டாளிகளால் ஏற்கனவே சேமிப்புக்கிடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுடைய சவால் இளைஞர்களின் குழுக்களைக் கண்டுபிடித்து அவர்களை பூச்சிக்கொல்லிகளால் கடுமையாக தாக்குவது மட்டும்தான்.
ஏற்கனவே மாலை ஆகிவிட்டது. அவர் சோர்வாக இருந்தார். சிந்தனை ஓட்டத்தில் இருந்து அவரின் மனம் அமைதிகொள்ள அவர் விரும்பினார். போராடிக்கொண்டிருந்த வெட்டுக்கிளிகளின் ஓயாத இரைச்சல் மட்டுமே காற்றை ஆக்கிரமித்து அனைத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் செய்தது. வேறு ஏதோ ஒன்று உள்ளிருந்து அவரை வதைத்தது. அது அவரின் அகங்காரமா? அவர் உண்மையில் அச்சம் கொண்டாரா? அல்லது இரவின் இருளில் எதுவும் இறங்கக்கூடும் என்ற பதற்றமா? அவரது அதிகாரம் தேய்வதை உணரத் துவங்கினாரா ? இந்த சுயபரிசீலனை வலியை கொடுத்தது. ஜன்னல் வழி பார்த்த ஒரு தற்செயல் பார்வை மூலம் தனது சிந்தனை போக்கிலிருந்து தப்பித்தார். இருண்ட அடிவானத்தில் அஸ்தமிக்கும் சூரியன் அச்சுறுத்தலாகத் தோன்றியது.
வெட்டுக்கிளியின் திரள்
என்ன
வெட்டுக்கிளிகள் இவை?
அதிகாரத்தின்
மேல் இருக்கும்
ஆகாயத்தை
கோதுமை தங்கத்தில்
தீட்டி
நீண்ட
தெருக்களில் நம்பிக்கையை
நோக்கிய
நடை போடும்
பெரும்
திரள்.
ஒடுக்கும்
முள்கம்பிகளால் ஆன
பொறிகளின்
மீது
அவர்கள்
பறந்தார்கள்.
அவர்களின்
தீட்டிய நம்பிக்கைகள்
சிக்கவைக்கவும்
புதைக்கவும் இருந்த
தடுப்புகளை
உடைத்தது.
அகழிகளில்
இருந்து தப்பியது.
அவர்களின்
மெலிந்த இதயம்
எதிர்கொண்டது
பீரங்கியிலிருந்து
பொழிந்த
பெரு மழையை.
அவர்கள்
காத்திருந்தனர்
மூடுபனி
குளிர்கால மாலையின்
கடுங்குளிரில்.
பனித்துளிகளின்
வாசம் நீங்க
கண்களில்
ஜொலித்த
புரட்சிகர
தீப்பொறியுடன்
அவர்கள்
காத்திருந்தனர்
விடியலின்
பெருவெளிச்சத்திற்காக.
சில
மேளங்களும்
பட்டாசுகளும்
ஏன்
எரியும் வேப்பிலைகள்
கூட
இந்த
பெரும் வெட்டுக்கிளித்
திரளை
அச்சுறுத்தவோ
அசைக்கவோ இல்லை.
அந்த
நீண்ட இரவில்
வெட்டுக்கிளி
நோய்
சுல்தானை
தாக்கும் முன்
அதன்
இறக்கைகளின் கீழ்
எழும்பும்
போராட்டத்தின் பாடல்கள்
காற்றை
மிரட்டியது
தெருக்களையும்
அரண்மனையின்
கூரையையும் மூடிய
தார்ப்பாய்
தளங்களில்
சிறு
ஓட்டைகளை போட்டது.
ஒலி: சுதன்வா தேஷ்பாண்டே ஜனா நாத்யா மஞ்ச் என்ற நாடகக் குழுவின் நடிகரும் இயக்குநரும் ஆவார். இவர் ‘லெஃப்ட் வர்ட்’ ன் ஆசிரியருமாவார்.
தமிழில்: கவிதா கஜேந்திரன்