மே 2021-ல் மனைவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது, ராஜேந்திர பிரசாத் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது தொலைதூர கிராமத்திற்கு அருகிலுள்ள நகரத்தின் தனியார் மருத்துவமனைக்கு அவரை வேகமாகக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், அவரது முதல் விருப்பம், அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே இருந்தது. ஆனால் அந்த மருத்துவமனை தேசிய எல்லைக்குள் இல்லை. நேபாளத்தில் இருந்தது.
"எல்லையின் மறுபுறத்தில் நாங்கள் சிகிச்சை பெறுவது வழக்கம்தான். கிராமத்தில் உள்ள பலர் பல ஆண்டுகளாக அதைச் செய்துள்ளோம்," என்று 37 வயதான ராஜேந்திரா விளக்குகிறார். நேபாளத்தில் உள்ள மருத்துவமனை, ராஜேந்திராவின் கிராமமான பாங்காட்டியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாவட்டங்களில் மிகப்பெரிய லக்கிம்பூர் கெரியில் பாங்காட்டி இருக்கிறது.
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான திறந்த எல்லைக் கொள்கை, 1950-ல் அமைதி மற்றும் நட்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து நடைமுறையில் உள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தின் குடிமக்கள் இரு பிரதேசங்களுக்கு இடையிலும் சுதந்திரமாக செல்ல அது அனுமதித்தது. வர்த்தகத்தில் ஈடுபடவும், சொத்துக்களை வாங்கவும், வேலையில் ஈடுபடவும் ஒப்பந்தம் அனுமதிக்கிறது. பாங்காட்டியின் குடியிருப்பாளர்களுக்கு, நேபாளத்தின் திறந்த எல்லை மலிவான மற்றும் சிறந்த சுகாதாரச் சேவையை அணுக வழிவகை செய்துள்ளது.
ஆனால் கோவிட் தொற்று அவை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
ராஜேந்திரனின் 35 வயது மனைவியான கீதா தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தொற்றுநோயின் இரண்டாவது அலை இந்தியாவில் உச்சத்தில் இருந்தது. ஆனால் அவர்களால் எல்லையைத் தாண்டி மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை, ஏனெனில் நேபாளம் ஐந்து இந்திய மாநிலங்களுடன் அது கொண்டிருக்கும் 1,850 கிலோமீட்டர் எல்லையை மார்ச் 23, 2020 முதல் கோவிட் -19 பரவலுக்குப் பிறகு சீல் வைத்தது.
அதற்கு ராஜேந்திரனின் குடும்பம் பெரும் விலை கொடுத்தது.








