தாதர் பகுதியில் உள்ள பரபரப்பான தெருவொன்றின் சாலையோரத்தில், ஒவ்வொரு காலைப் பொழுதின் போதும் சிவம் சிங் சிவப்புநிறக் கம்பளம் ஒன்றை விரித்துப்போடுகிறார். நான்கைந்து அடி உடைய அந்தக் கம்பளத்தின் மீது கவனத்தோடு ஐந்து பிளாஸ்டிக் நாற்காலிகளைப் போட்டு ,அதில் ஒரு நாற்காலியின் மீது சட்டகமிடப்பட்ட பெண்கடவுள் லக்ஷ்மியின் படத்தினை வைத்து, சில ஊதுபத்திகளைக் கொளுத்தி வைக்கிறார்.
இவ்வாறு அங்குள்ள அரச மரத்தின் அடியில் அவரது கடையை அமைக்கிறார். அந்த மரத்தின் கிளையில் “சிவம் மெஹந்தி கலைஞர்” என்று கூறக்கூடிய பேனர் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள நாற்காலிகளின் மீது மெஹந்தி போடப்பட்ட கைகள் மற்றும் பாதங்களின் படங்களைக் கொண்ட பேனர் மற்றும் பல்வேறு புகைப்படத் தொகுப்புகள் பரப்பி வைத்த அவர், அதன்பின்னர், அன்றைய நாளின் முதல் வாடிக்கையாளருக்கு போடுவதற்கான- பூ,பைஸ்லி மற்றும் வோர்ல்ஸ் போன்ற வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறார் அல்லது சிலசமயம் வாடிக்கையாளர்களின் கைகளைக் கண்டு வியந்து புதிய வடிவமைப்புகளை வரைகிறார். இந்நிலையில்,அன்றைய நாளை குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர் “யாராவது வருவார்கள்...” என்று கூறினார்.
சிவமின் கடையிலிருந்து 200 மீட்டர் தூரத்தில், தாதர் புறநகர் தொடர்வண்டி நிலையத்திற்கு அண்மையில், ரானடே சாலையில் சிவ நாயக்கும் மெஹந்தி தொழில் செய்யும் கடையினை அமைத்துள்ளார். அவரும் அன்றைய நாள் தொ ழில் செய்வதற்கு தேவையான ஹென்னாவை (மருதாணி) கைகளால் செய்யப்பட்ட கோன்களில் நிரப்புகிறார். இரண்டு ஹென்னாக் கலைஞர்களும் கடை அமைத்துள்ள நடைபாதை பரபரப்பாக் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களைப் போன்றே- சோளப்பூரைச் சேர்ந்த பூ வியாபாரி,லக்னோவிலிருந்து இங்கு வந்து நகை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டவர், கொல்கத்தாவிலிருந்து வந்த காலணி வியாபாரி மற்றும் ராஜஸ்தானிலிருந்து வந்து ஐஸ் விற்பவர் என பிற புலம்பெயர் தொழிலாளர்களால், இந்தப்பகுதியில் பல்வேறு பொருட்கள் வர்த்தகமாகிறது.





